
இரண்டு பேர் விளையாடும் இந்த விளையாட்டுக்கு, சுமார் 100 முதல் 150 புளியமுத்துகள் குறைந்தபட்சம் தேவை. இருக்கும் புளிய முத்துகளை சரி பாதியாக இருவர் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். பிறகு, ஒருவர் தன் கையில், கொஞ்சம் புளிய முத்துகளை எடுத்து மறைத்தபடி ஒற்றையா, ரெட்டையா எனக் கேட்க வேண்டும். எதிரில் இருப்பவர் அந்தக் கையில் இருக்கும் புளிய முத்துகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையா, இரட்டைப் படையா என்பதைச் சொல்ல வேண்டும்.
அதன்பிறகு, கையில் இருக்கும் புளிய முத்துகளை எண்ணிப் பார்த்து, எதிரில் இருப்பவர் சொன்னது சரி என்றால், அவருக்கு கையில் இருக்கும் அனைத்து முத்துகளையும் தந்து விட வேண்டும். அல்லது 5, 10 புளிய முத்துகளை தோற்றதற்கு அபராதமாகத் தர வேண்டும். அதேபோல, தவறாகச் சொல்லியிருந்தால், தோற்றவர் ஜெயித்தவருக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புளிய முத்துகளைக் கொடுக்க வேண்டும். அல்லது வென்றவர் கையில் எவ்வளவு முத்துகள் இருந்தனவோ அந்த அளவுக்கு கொடுக்க வேண்டும். இந்த விதிமுறையை விளையாடுபவர்களே வரையறுத்துக் கொள்ளலாம்.
சில நேரங்களில், வெறுங்கையை வைத்துக் கேட்டால், ஊமைக்கை என்று சொல்ல வேண்டும். தவறாகச் சொன்னால் வழக்கம்போல அபராதம்தான்.

