PUBLISHED ON : மார் 25, 2019

தி.க. சிவசங்கரன்
30.03.1925 - 25.03.2014
கதை, கவிதை, நாடகம், இலக்கிய விமர்சனம், திறனாய்வு என, இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் முத்திரை பதித்தவர். இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து உற்சாகம் கொடுத்ததுடன், பல புதிய எழுத்தாளர்கள் தோன்றக் காரணமாக இருந்தவர். தமிழில் வெளியாகும் இலக்கியப் படைப்புகளை வாசித்து, அவற்றை எழுதிய ஆசிரியர்களுக்கு அஞ்சலட்டையில் கடிதம் எழுதிப் பாராட்டியவர் என, தி.க.சிவசங்கரனுக்குப் பல முகங்கள் உண்டு.
இயற்பெயரான திருநெல்வேலி கணபதியப்பன் சிவசங்கரன் எனும் பெயரைச் சுருக்கி, 'தி.க.சி.' என்று பலராலும் அழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்த இவரது தனிமையை நூலகங்கள் போக்கின. பள்ளி, கல்லூரிப் படிப்பைச் சொந்த ஊரிலேயே பயின்றார். 18 வயதில் அவரது இலக்கிய வாழ்க்கை தொடங்கியது. கையெழுத்து இதழில் எழுதத் தொடங்கியவர், சிறுகதைகளும் எழுதினார்.
தமிழ் இலக்கியத்தின் தன்மைகளை அறிந்த பிறகு, விமர்சகராகத் தன்னை மாற்றிக்கொண்டார். பல இலக்கிய ஆர்வலர்களோடும் அமைப்புகளோடும் நட்பில் இருந்தார். இலக்கிய விமர்சனம் எழுதத் தொடங்கி, தமிழகத்தின் பெரும் இலக்கிய ஆளுமைகளோடு இணைந்து செயற்பட்டார். மொழிபெயர்ப்பிலும் இவருக்குப் பங்குண்டு.
தாமரை இதழில் பணியாற்றியபோது, பல இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார். இவரால் பல புதிய எழுத்தாளர்கள் தோன்றினர். இவரது மதிப்புரைகளும் கட்டுரைகளும் 'தி.க.சி., கட்டுரைகள்' என, இரு பகுதிகளாக வெளிவந்தன. இதற்கு 2000ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
இவர் எழுதிய திறனாய்வுக் கட்டுரைகள், புதிய படைப்பாளர்கள் உருவாக உதவின. இவ்வாறு, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை வாசிப்பதிலும் ஊக்கப்படுத்துவதிலும் செலவிட்டு இலக்கிய முன்னோடியாகத் திகழ்கிறார் தி.க.சி.