
வடை, பஜ்ஜி, போண்டா, சமோசா போன்ற சிற்றுண்டிகளுக்கு அடுத்து மிகவும் பிரபலமான இன்னொரு சிற்றுண்டி எது தெரியுமா? கட்லெட். நல்ல மொறுமொறுப்பாக இருப்பதால், இதை ஒருமுறையாவது சுவைக்காதவர்கள் இருக்க மாட்டார்கள்.
சரி, இந்த கட்லெட் நம்மூர் உணவா என்றால், இல்லை. இது பிரெஞ்சு நாட்டின் உணவு. கட்லெட் என்ற வார்த்தை 'கொடெலெட்டெ' (côtelette) என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து பிறந்தது. இதற்கு ரொட்டியுடன் சேர்ந்த இறைச்சிப் படலம் என்று பொருள்.
நம்முடைய முன்னோர்கள் கட்லெட் செய்யப் பழகினர். அப்போது கிடைத்த இறைச்சி, காய்கறிகளை முட்டைக் கருவில் தோய்த்து எடுத்து, ரொட்டித் துகள்களில் புரட்டி பொரித்து எடுத்து செய்திருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் உப்பு, காரம் இரண்டுமே குறைவாகத்தான் இருந்துள்ளன. 16ஆம் நூற்றாண்டில் உருவான கட்லெட், ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுமாதிரியான வடிவம், சுவை, மூலப்பொருள் என, பல மாற்றங்களைப் பெற்றுள்ளது.
இத்தாலி, ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா என, பல நாடுகளுக்கு கட்லெட் பரவியது. ஒவ்வொரு பகுதியிலும், கட்லெட் ஒரே மாதிரியான சுவையோடும், மூலப்பொருளோடும் இருக்காது. நம்மூரில் மொறுமொறுப்பாக இருக்கும் கட்லெட், ரஷ்யாவில் மொறுமொறுப்புத் தன்மை குறைவாகவே இருக்கும். மொறுமொறுப்புக்கு ரொட்டித் தூள் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து எடுக்கப்படும். இது சின்னச்சின்ன வட்ட வடிவில் இருக்கும்
அசைவம் மட்டுமே உண்பவர்கள், மீன், இறால், சிக்கன் போன்ற பல வகையான இறைச்சிப் பொருட்களைச் சேர்த்து கட்லெட் செய்திருக்கிறார்கள். சரி, சைவம் உண்ணும் மக்கள் என்ன செய்தார்கள்? இறைச்சிக்குப் பதிலாக உருளைக்கிழங்கைப் பயன்படுத்தினார்கள்.
ஆனால், உருளைக்கிழங்கு 16ஆம் நூற்றாண்டின் கடைசியில்தான் ஐரோப்பாவிற்கு அறிமுகமானது. தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது, உருளை. ஸ்பெயின் படையினர்களால் உருளைக்கிழங்கு பல இடங்களுக்குப் பரவியது.
இந்தியாவில், டச்சு அல்லது போர்ச்சுகீசிய மக்கள்தான் கட்லெட்டை அறிமுகம் செய்தார்கள், அதேபோல், உருளைக்கிழங்கு வந்தபின்தான், கட்லெட் பல இடங்களில் பிரபலமானது. வங்காளி மக்கள் உருளைக்கிழங்கை அதிகம் பயிர் செய்தனர். அவர்கள் மூலம்தான் தென்னிந்தியாவுக்கு கட்லெட் வந்தது.
காய்கறிகள், நறுமணப் பொருட்கள் புதிதுபுதிதாக அறிமுகமானதும், கட்லெட் பல விதங்களில் செய்யப்பட்டன. வெங்காயம், கொத்துமல்லி, மிளகுத்தூள், கரம் மசாலா, சீரகம், பச்சை மிளகாய் ஆகியனவும் பின்னர் சேர்க்கப்பட்டன.
- லதானந்த்

