PUBLISHED ON : ஜன 27, 2020

பிஸ்தா
ஆங்கிலப் பெயர்:பிஸ்டாசியோ (Pistachio)
தாயகம்:மத்திய ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள்
வளர்வதற்கு ஏதுவான இடம்:பாலைவனம்
ஆயுட்காலம்:300 ஆண்டுகளுக்கும் அதிகம்.
ஈரான், சிரியா, கிரீஸ் ஆகிய நாடுகளில் 10,000 ஆண்டுகளாக பிஸ்தா கொட்டைகள் பயிரிடப்படுகின்றன. பூமியில் உள்ள பழமையான சமையல் கொட்டைகளில் பிஸ்தா பருப்பும் ஒன்று. இதுவும் பாதாம் பருப்பைப்போல பழமையானது.
பிஸ்தாவின் பழம், மற்ற கொட்டைகளைவிட வித்தியாசமானது. பச்சை நிறத்தில் இருப்பதோடு, இதன் ஓடுகள் பாதி திறந்தே இருக்கும். இதைப் பார்த்தால் சிரிப்பது போன்ற உணர்வு வரும். ஆகவே, இதை ஈரான், சீனா ஆகிய இரண்டு நாடுகளிலும் சிரிக்கும் பிஸ்தா என்றே அழைப்பார்கள்.
ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்த பிஸ்தா பருப்பு, 1930ஆம் ஆண்டுக்குப்பிறகு அமெரிக்காவிலும் பிரபலமானது. இங்கு பிஸ்தா பிரபலமானதால், இரண்டாம் உலகப் போருக்குப் பின், அங்கு பிஸ்தா மரங்கள் ஏற்றுமதியாயின. தற்போது மத்திய கிழக்கு நாடுகளைப் போலவே அமெரிக்காவும் பிஸ்தாவை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது.
திராட்சை மாதிரி இதுவும் கொத்தாகக் காய்க்கும். பிஸ்தாக்கள் பழுக்கும்போது இயற்கையாகவே மரத்தில் இருந்து கீழே விழும். விழும்போது, பிஸ்தா கொட்டைகளின் ஓடுகள் பிரிந்தே விழுகின்றன. சில பிஸ்தாக்களில் ஓடுகள் பிரியாமலும் இருக்க வாய்ப்புண்டு. கடைகளில் இயற்கையாக திறந்த பிஸ்தாக்கள்தான் விற்கப்படுகின்றன.
பிஸ்தா, அதிகப் புரதமும், குறைவான கலோரியும் கொண்ட உணவுப் பொருள். இதில் உடலுக்கு நன்மை தரும் கொழுப்புகள் நிறைந்திருக்கின்றன. புரதமும், நார்ச்சத்தும் இருப்பதால் நீண்டநேரம் வயிறு நிரம்பியிருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கின்றன.
- காரா

