
எளிமை
“எங்கப்பா வீட்டுல திட்டிக்கிட்டு இருந்தார் மிஸ். எளிமையாகவே
வாழத் தெரியலை, ஒரே ஆடம்பரம்... ஏன் இதெல்லாம்னு கேட்டுக்கிட்டே இருந்தார்.” வீட்டுக்கு வரும்போது நான் தான் ஆரம்பித்தேன்.
“ஏன் அப்படி என்ன செலவு செஞ்சே?”
“ஆன்லைன் ஷாப்பிங்குல, டிஸ்கவுன்ட் தாராளமாக கிடைக்குதுன்னு, நிறைய பொருட்களை ஆர்டர் செஞ்சுட்டோம். அப்பாவுக்குக் கோபம் வந்துடுச்சு. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. எளிமை, எளிமைங்கறார்... அதை எப்படி புரிஞ்சுக்கறதுன்னு தெரியல.”
“லால் பகதூர் சாஸ்திரியத் தெரியுமா?”
“இரண்டாவது பிரதமர் தானே மிஸ்?”
“கரெக்ட். நேரு காலமானவுடனே, யார் அந்த வெற்றிடத்தை நிரப்புவாங்களோன்னு ஒரு தயக்கம் இருந்தது. லால் பகதூர் சாஸ்திரி தான் அந்த இடத்தை நிரப்பினார். எளிமைன்னா என்னன்னு தெரியலைங்கறீயே. அவர் வாழ்க்கையே அதுக்கு உதாரணம்.”
“ஓ! என்ன பண்ணார் மிஸ்?”
“ஒருமுறை அவர் கொல்கத்தாவுலேருந்து டில்லிக்குப் போகணும். அப்போ அவர் உள்துறை அமைச்சர். கொல்கத்தாவுல அவ்வளவு டிராஃபிக். ஏர்போர்டுக்கு நேரத்துக்குப் போக முடியுமான்னு சந்தேகம். உடனே, கொல்கத்தா போலீஸ் கமிஷனர், சைரன் வெச்ச கார் ஒண்ணை, சாஸ்திரியோட காருக்கு முன்னால அனுப்பிவைக்கலாம்னு முடிவு பண்ணார். அதன்மூலம், சாலையில் நெரிசல் பாதிப்பு ஏற்படுத்தாதுன்னு நினைச்சார். இதைத் தெரிஞ்சுக்கிட்ட சாஸ்திரி, அந்த ஏற்பாட்டை மறுத்துட்டார். கொல்கத்தா மக்கள், சாலையில் யாரோ முக்கியமானவங்க போறாங்கன்னு நினைச்சுப்பாங்க. அது அவங்களுக்கு இடைஞ்சலா இருக்கும். வேண்டாம்னு சொன்னார் சாஸ்திரி.
1965இல பாகிஸ்தானோட போர் ஏற்பட்டுச்சு. அதனால், நம் நாட்டுல உணவுப் பஞ்சம். என்ன செய்யறதுன்னு தெரியல. ஒரு வேளை உணவை எல்லோரும் தியாகம் செஞ்சா என்னன்னு யோசிச்சார். முதலில் அதை தன் வீட்டிலேயே அமல்படுத்தினார். சிறுவர்களுக்கும் வயதானவர்களுக்கும் மட்டும் பழங்களும் பாலும் உண்டு. வீட்டில் உள்ள மற்றவர்கள் அனைவரும் இரவில் உணவைத் தியாகம் செய்யவேண்டும். ஒரு சில நாட்கள் இதைச் சோதனை செய்து பார்த்தார். பட்டினி இருப்பதால், பாதிப்பில்லை என்பதை தானே புரிந்துகொண்ட பின்னர், அதைப் பற்றி ஆல் இந்தியா ரேடியோவில் பேசினார். மக்களுக்கு ஆலோசனை சொன்னார்.
இந்தச் சம்பவம் அவர் மனசுல ஆழமாக பதிஞ்சு போச்சு. அதனால தான் அவர் பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி ஆகியவை ஏற்படுவதற்கு திட்டங்கள் தீட்டி செயற்படுத்தினார்.
ஒருமுறை, அவருடைய மகன், அலுவலக காரை எடுத்துக்கொண்டு எங்கோ போய்விட்டார். இதைப் பற்றித் தெரிந்தவுடனே, மறுநாளே, மகன் பயணம் செய்த தூரத்தைக் கணக்கிட்டு, அதற்கான செலவுத் தொகையை அரசாங்கத்துக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார் சாஸ்திரி.
ஒருமுறை ஒரு மாநிலத்துக்கு அவர் போறதா திட்டம். கடைசி நேரத்துல, அவரால அங்கே போக முடியலை. உடனே, அந்த மாநில அமைச்சர், சாஸ்திரியைக் கூப்பிட்டு, “நீங்க வருகிறீர்கள் என்று முதல் தரமான ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம். பயணத்தை ரத்து செய்துவிட வேண்டாம்,” என்று கேட்டுக்கிட்டார். “மிகச் சாதாரணமான எனக்கு எதற்கு முதல் தரமான ஏற்பாடுகள் எல்லாம்?” என்று பதில் சொன்னார் சாஸ்திரி.
1966இல அவர் இறந்தபோது, அவர் பேர்ல ஒரு வீடு கிடையாது. சொந்தமா நிலம் கிடையாது. அவர் பிரதமரானபோது, ஒரு கார் வாங்கினார். அதற்காக வங்கியில 5,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அவர் இறந்தவுடனே, கடன் கொடுத்த வங்கி, அவரது மனைவி லலிதா சாஸ்திரியிடம் கடனைத் திருப்பிச் செலுத்தச் சொல்லி கேட்டது. அந்தம்மா, அவருக்குக் கிடைச்ச குடும்ப பென்ஷனில் இருந்து, 5,000 ரூபாயில் ஒரு பைசா மிச்சமில்லாமல், கடனை அடைச்சாங்க.
இதுதான் எளிமை. இந்த நாடே முக்கியம். தன் செளகரியமோ, தன் குடும்பத்தினருடைய வசதிகளோ முக்கியமில்லை. இந்த நாட்டுக்கு நான் சேவை செய்ய வந்திருக்கிறேன் என்பதை நன்கு புரிந்துகொண்டவர் லால் பகதூர் சாஸ்திரி.
மகாத்மா காந்தி சொன்னதிலேயே எல்லோராலும் பின்பற்றக்கூடிய சுலபமான விஷயம், எளிமை தான். ஆனால், அது தான் இப்போ எல்லோருக்கும் கஷ்டமா இருக்கு. வாழ்க்கை எளிமையாக இருந்தால், எதிர்பார்ப்புகள் இருக்காது. அதனால் ஏற்படும் வருத்தங்களும், வேதனைகளும் இருக்காது. ஏமாற்றம் இருக்காது. எளிமை, தன்னிறைவு தரும். ஆடம்பரம், வெறுப்பை மட்டுமே வளர்க்கும். பற்றாக்குறையை மட்டுமே அதிகப்படுத்தும்.
உங்கப்பா சொல்றதை நீங்களும் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கலாம், கதிர்.”
நான் யோசிக்கத் தொடங்கினேன். சாஸ்திரி என் மனத்தில் சம்மணம் இட்டு அமர்ந்துகொண்டார். எளிமைக்குப் பின்னே இருக்கும் நற்பயன்கள் என்னை ஆச்சரியப்படுத்தின.

