
ஜனவரி 30 - இந்திய தியாகிகள் நாள்
தேசத் தந்தை மாகாத்மா காந்தியடிகள், 1948 ஜனவரி 30ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இது இந்தியாவின் துக்க நாளாக அமைந்தது. சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தி போற்றவும் ஒவ்வோராண்டும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஜனவரி 30, 1882 - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் பிறந்த நாள்
அமெரிக்காவின் 32வது அதிபர். 1933 முதல் 1945 வரை, நான்கு முறை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். இரு தடவைகளுக்கு மேல் அதிபராக இருந்ததும், இவர் ஒருவரே. 20ம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளான பொருளாதார பெருமந்தம் (Great Depression - கிரேட் டிப்ரெஷன்) மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது அதிபராக இருந்தவர் இவரே.
ஜனவரி 30, 2006 - உலக தொழுநோய் ஒழிப்பு நாள்
தொழுநோய் பெரிய வியாதி அல்ல. தொழுநோயாளிகளை தீண்டத்தகாதவர்களாகக் கருதி ஒதுக்கக் கூடாது. அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்த இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
பிப்ரவரி 2, 1871 - பா.வே. மாணிக்க நாயக்கர் பிறந்த நாள்
சிறந்த தமிழ் அறிஞராகவும், பொறியியலாளராகவும் இருந்தார். பள்ளியில் படிக்கும்போதே, கவிபாடும் ஆற்றல் கொண்டிருந்தார். பொறியியல் துறையில் 60க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதோடு, கான்கிரீட் பற்றி ஆய்வையும் மேற்கொண்டார். மேட்டூர் அணைக்கான வரைபடத்தை அமைத்தவர் என்றும் கூறப்படுகிறது.
பிப்ரவரி 2, 1971 - உலக நன்செய் நாள்
ஈரநிலங்களைப் பாதுகாப்பதன் மூலம், பல்லுயிர் வளங்கள், கலாசாரத்தைப் பாதுகாக்க முடியும். இதனைக் கருத்தில் கொண்டு இந்த நாள் ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
பிப்ரவரி 4, 2000 - உலக புற்றுநோய் நாள்
மாறிவரும் சுற்றுப்புற சூழ்நிலை, உணவு, வாழ்க்கை முறை, மரபணு போன்ற காரணிகளால் புற்றுநோய் ஏற்படலாம். உலகில் புற்றுநோயை ஒழிக்க வேண்டுமென, பாரிஸில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த நாள் கடைப்பிடிக்கப் படுகிறது.

