sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

பாடநூல் முன்னோடி!

/

பாடநூல் முன்னோடி!

பாடநூல் முன்னோடி!

பாடநூல் முன்னோடி!


PUBLISHED ON : ஜன 30, 2017

Google News

PUBLISHED ON : ஜன 30, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீங்கள் பள்ளிக்குச் செல்கிறீர்கள். அப்போது உங்களுடைய பையில் என்ன இருக்கும்?

பல பாடப்புத்தகங்கள் இருக்கும். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனிப் புத்தகங்களை வாசிப்பீர்கள். அந்த வகுப்பில் நீங்கள் என்னென்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை, அந்நூல்கள் விரிவாக எடுத்துரைக்கும். ஒவ்வொரு பாடப்புத்தகமும் எளிதாகக் கற்றுத்தந்து உங்களுடைய அறிவை வளர்க்கும்.

அதேசமயம், இந்தப் பாடப்புத்தகங்கள் ஒவ்வொன்றும் பல ஆசிரியர்கள், அறிஞர்களின் உழைப்பால் உருவானவை. அவர்கள் தங்களுடைய அறிவைச் சாரமாகப் பிழிந்து வழங்கியுள்ளார்கள். அதனை நீங்கள் கற்கிறீர்கள்.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால், தமிழுக்கு நல்ல பாடப்புத்தகங்கள் இல்லை. அப்போது புழக்கத்திலிருந்த புத்தகங்களைக் கொண்டுதான் ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அவை, மாணவர்களுக்கு நல்லமுறையில் பயன்படவில்லை.

அப்போது, சென்னையில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த நமசிவாயம் என்ற ஆசிரியர், இதைக் கண்டு வருந்தினார். 'நம் பிள்ளைகள் சிறப்பாகப் பாடம் படிக்கவேண்டும் என்றால், இன்னும் நல்ல பாடப்புத்தகங்கள் வரவேண்டும்!' என்றார்.

'ஐயா, நீங்கள் சிறந்த கல்வியாளர், நீங்களே அந்தப் புத்தகங்களை எழுதலாமே!'

'எழுதலாம்தான். ஆனால், ஆசிரியர்கள் பாடப் புத்தகங்களை எழுதக்கூடாது என்று ஒரு தடை உள்ளதே!'

ஆக, நமசிவாயம் பாடப் புத்தகங்களை எழுத விரும்பினால், ஆசிரியப் பணியைத் தொடர இயலாது. அதனால் அவருடைய குடும்பத்துக்கு ஏற்படப்போகும் பொருளாதார இழப்புகள் அதிகம்.

அதேசமயம், அவருடைய இதயம் எண்ணற்ற மாணவர்களின் நலனுக்காகத் துடித்தது. அவர்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்காக, தன்னுடைய ஆசிரியப்பணியைத் துறக்கத் தீர்மானித்தார்.

அப்போது, அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் பெயர் பேட்ஸ். அவர் இதைக் கேட்டுப் பதறிப்போனார். 'ஏன் வேலையை விடுகிறீர்கள்?' என்று நமசிவாயத்திடம் கேட்டார். அவரும் விஷயத்தைச் சொன்னார்.

'கவலை வேண்டாம்; நீங்கள் ஆசிரியப் பணியைத் தொடர்ந்தபடி பாடப்புத்தகங்கள் எழுதலாம். அதற்கு நான் அனுமதி பெற்றுத் தருகிறேன்' என்றார் பேட்ஸ். சொன்னபடி அதற்கான சிறப்பு அனுமதியை பெற்றுத் தந்தார்.

அப்புறமென்ன? நமசிவாயர் முழுவேகத்துடன் பாடநூல்களை எழுதத் தொடங்கினார். அவை மிகச் சிறப்பானவையாக அமைந்தன. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், அவற்றால் பலன் பெற்றார்கள்.

1876ம் ஆண்டு, காவேரிப்பாக்கத்தில் பிறந்த நமசிவாயர் அருமையான எழுத்தாளர். பாடப் புத்தகங்களைத்தவிர, ஜனகன், தேசிங்குராஜன் போன்ற உரைநடை நூல்கள், 'கீசகன்', 'பிருதிவிராஜன்' போன்ற நாடகங்களின் ஆசிரியர். பல அரிய நூல்களுக்கு உரையெழுதியவர். பத்திரிகையாளராகவும் பணியாற்றி இருக்கிறார். எனினும், அவரது மிகச்சிறந்த பங்களிப்பு, சிறந்த பாடநூல்களை உருவாக்கியதுதான். இதற்காக, 'பைந்தமிழ் ஆசான்' என்று போற்றப்படுகிறார்.

நமசிவாயர் 1937ல் மறைந்தபோதும், அவர் உருவாக்கிய பாடப்புத்தகப் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. நமது தமிழ்ப் பாடநூல்களின் சிறப்புக்கு, அவரே முன்னோடியாகத் திகழ்கிறார்!

- என். சொக்கன்






      Dinamalar
      Follow us