
மார்ச் 6, 1475 - மைக்கேல் ஏஞ்சலோ பிறந்த நாள்
இத்தாலியின் மறுமலர்ச்சிக் கால ஓவியர், சிற்பி, கவிஞர், கட்டடக்கலைஞர் என, பன்முகத் தன்மை கொண்டவர். ரோம் நகரிலுள்ள சிஸ்டைன் சிற்றாலய உட்கூரையிலும், சிற்றாலய பீடத்தின் சுவரில் வரையப்பட்டுள்ள கடைசித் தீர்ப்பு ஓவியங்களும் இவரால் வரையப்பெற்ற உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள்.
மார்ச் 6, 1937 - வேலன்டினா டெரெஷ்கோவா பிறந்த நாள்
ரஷ்யாவைச் சேர்ந்த இவர், விண்வெளியில் பறந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். மூன்று நாட்களில், 48 முறை பூமியைச் சுற்றி வந்தார். சோவியத் யூனியனின் மிக உயரிய 'ஆர்டர் ஆஃப் லெனின்' விருது பெற்றவர்.
மார்ச் 7, 1765 - ஜோசப் நைஸ்ஃபோர் நிப்ஸ் பிறந்த நாள்
புகைப்படத்துறையின் முன்னோடி. அறிவியல் கண்டுபிடிப்பாளர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர், நிரந்தரமாக உருவம் பதியும் கேமராவை கண்டுபிடித்தார். உலகில் முதன்முதலாக சில புகைப்படங்களை எடுத்த நபர் என்ற பெருமைக்கு உரியவர்.
மார்ச் 8, 1911 - மகளிர் தினம்
தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவில் நிறைந்திருப்பவர்கள் பெண்கள். தாய் நாடு, தாய் மொழி என்று பெண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களைப் போற்றும் விதத்தில், உலகம் முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
மார்ச் 9, 1934 - யூரி காகரின் பிறந்த நாள்
விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரர். பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதர். வாஸ்டோக் 1 என்ற விண்கலத்தில் பயணம்செய்து, விண்வெளியில் நடந்தார். 108 நிமிடங்கள் நீடித்தது அந்த சாகசம். ரஷ்ய நாடு முழுக்க, பல தெருக்களுக்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மார்ச் 10, 1933 - பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த நாள்
தனது வாழ்நாள் முழுதும், தமிழர், தமிழ், தமிழ்நாடு ஆகியவற்றின் வளர்ச்சியை முன்னிறுத்தி வாழ்ந்தார். 'தமிழ்த் தேசியத் தந்தை' என்று போற்றப்படுகிறார். மக்கள் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்று குரல் கொடுத்தார். இந்தி எதிர்ப்பு போன்ற பல போராட்டங்களில் கலந்துகொண்டு, 20 முறை சிறை சென்றுள்ளார்.

