PUBLISHED ON : மார் 06, 2017

மார்ச் 8 மகளிர் தினத்தை, உலகமே கொண்டாடக் காத்திருக்கிறது. அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாதனைப் பெண் ஒருவரை இந்தத் தருணத்தில் நாம் கொண்டாட வேண்டும்.
எளிமையான நடுத்தரக் குடும்பத்தின் கடைசிக் குழந்தை அருணிமா சின்ஹா. விளையாட்டுத் துறையில் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை லட்சியமாகவும், கனவாகவும் கொண்டிருந்தார். குடும்பச் சூழலுக்காக அரசுப் பணிக்கான தேர்வுகளை எழுதி வந்தார். ஒருநாள், மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் பணியாற்றுவதற்காக நேர்காணல் அழைப்பு வந்தது. அதற்காக 2011, ஏப்ரல் 11ல் லக்னோவில் இருந்து டில்லிக்கு ரயிலில் சென்றார். அவருடைய பெட்டியில் ஏறிய திருடர்கள், அருணிமாவின் தங்கச் சங்கிலியைப் பறித்து, அவரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிவிட்டனர். அந்த விபத்தில் அவருடைய இடது கால் துண்டானது. நான்கு மாதச் சிகிச்சைக்குப் பிறகு, அவருக்குச் செயற்கைக் கால் பொருத்தப்பட்டது.
காலை இழந்தாலும், ஏதாவது ஒரு விதத்தில் சாதித்தே ஆக வேண்டும் என, உறுதியுடன் இருந்தார். 1984ல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண் பச்சேந்திரி பாலின் நினைவு அவருக்கு வந்தது. நண்பர்களின் உதவியுடன் அவரைச் சந்தித்தார் அருணிமா. அவர் மூலமாக அருணிமாவுக்கு மலையேறும் பயிற்சிக்கு வாய்ப்புக் கிடைத்தது. செயற்கைக் காலுடன் இரண்டு ஆண்டுகள் கடினமான பயிற்சிகள் எடுத்து, எவரெஸ்ட் சிகரம் ஏறத் தயாரானார்.
2013 ஏப்ரல் 1ம் தேதி, முதுகில் 20 கிலோ சுமை, கயிறுகள், பனிக்கோடரி, கம்பு, ஆக்சிஜன் சிலிண்டர் என எல்லாவற்றையும் சுமந்துகொண்டு லட்சியப் பயணத்தை தொடங்கினார். பல இன்னல்கள், ஆபத்துகள், வலிகள் எல்லாவற்றையும் கடந்து, 2013 மே 21ம் தேதி, உலகின் உச்சியான 29,029 அடி (8848 மீட்டர்) உயரமுள்ள எவரெஸ்டில் கால் பதித்தார்!
உடல் உறுப்பை இழந்தும், எவரெஸ்ட் உச்சியை அடைந்த முதல் பெண்ணாக உலகச் சாதனை படைத்தார் அருணிமா!
ஏறிய வேறு சிகரங்கள்
* கிளிமஞ்சாரோ, ஆப்பிரிக்கா (5895 மீட்டர்)
* எல்ப்ரஸ், ஐரோப்பா (5,642 மீட்டர்)
* கோசியுஸ்கோ, ஆஸ்திரேலியா (2,228 மீட்டர்)
* அகன்காகுவா, அர்ஜென்டினா (6,961 மீட்டர்)
* கார்ஸ்டென்ஸ், பிரமிட் இந்தோனேசியா (4,884 மீட்டர்)

