
மார்ச் 27, 1961 - உலக நாடக தினம்: 1948ல், சர்வதேச நாடக நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்நாளில், பல்வேறு தேசிய, சர்வதேச நாடக நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. யுனெஸ்கோ மற்றும் அதன் கலாசாரத் துறை சார்பாக, இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
மார்ச் 27, 1845 - வில்ஹெம் ரான்ட்ஜன் பிறந்த நாள்: மனித உடலின் உள் உறுப்புகளைக் கண்டறியும் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்து, இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றார். அவரது பெயரால் தனிம அட்டவணையின் 111வது தனிமமாக 'ரான்ட்ஜெனியம்' இருக்கிறது.
மார்ச் 30, 1709 - ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்த நாள்: பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளராக இருந்தார். ஏறக்குறைய 25 ஆண்டுகள், நாட்குறிப்பு எழுதி இருக்கிறார். 18ம் நூற்றாண்டில், சமூகம், அரசியல், வணிகம், வெளிநாட்டுப் பயணிகள் விவரம் உட்பட பல நிகழ்வுகளின் வரலாற்றுப் பதிவாக இவரது நாட்குறிப்பு திகழ்கிறது.
ஏப்ரல் 1, 1940 - வங்காரி மாத்தாய் பிறந்த நாள்: கென்யாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர். 1991ம் ஆண்டு, சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் 'கோல்டுமேன்' விருதும், 2004ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசும் பெற்றார். வனங்களைக் காக்க, 'பசுமை இயக்கம்' என்ற அமைப்பை நடத்தினார்.
ஏப்ரல் 1, 1508 - முட்டாள்கள் தினம்: 16ம் நூற்றாண்டு வரை, ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1ல் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. பின்னர் 1562ல், போப் 13வது கிரிகோரி, புதிய ஆண்டு முறையை ஜனவரி 1ல் இருந்து நடைமுறைப்படுத்தினார். இதை அறியாத ஜெர்மனி மற்றும் சில நாடுகள், ஏப்ரல் 1ஐ புத்தாண்டு தொடக்கமாக அனுசரித்தனர். அவர்களைக் கிண்டல் செய்வதற்காக பிறந்ததே இந்த நாள்.
ஏப்ரல் 2, 1967 - உலக சிறுவர் நூல் நாள்: ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன் என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஏப்ரல் 2, 1805. அவர் நினைவாகவும், புத்தகம் படிக்கும் ஆர்வத்தை குழந்தைகளிடம் ஊக்குவிப்பதற்காகவும், இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

