
டி.கே. பட்டம்மாள்
28.3.1919 - 16.7.2009
தாமல், காஞ்சிபுரம்
பள்ளியில் நடந்த ஒரு விழாவில், அந்த மாணவி பாடி முடித்ததும், ஆரவாரமும் கை தட்டலும் சரவெடி போல் அரங்கை அதிரச் செய்தன. தலைமை ஆசிரியை கொடுத்த உற்சாகத்தால், அவரது புகைப்படம் செய்தித்தாளில் வெளியானது. அதைப் பார்த்து சந்தோஷப்படாத அவருடைய தந்தை, கோபமாகத் திட்டினார். 'பாட்டு, நடனம் எல்லாம் குடும்பப் பெண்கள் செய்யக்கூடிய காரியம் இல்லை' என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். தலைமை ஆசிரியை அம்முக்குட்டி அம்மாளும், நண்பர் சீனிவாசனும், அவரது தந்தையைச் சமாளித்து, மீண்டும் பாடக் காரணமாக இருந்தனர். அதன்பிறகு பாடி, புகழ்பெற்றவர்தான் 'தேசியக் குயில்' எனப் போற்றப்பட்ட, பிரபல கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள்.
பட்டம்மாளின் இயற்பெயர் அலமேலு. செல்லமாக 'பட்டா' என்று கூப்பிடுவார்கள். நான்கு வயதில் பாடத் தொடங்கினாலும், முறையாக கர்நாடக இசை கற்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. தெலுங்கு ஆசிரியர் ஒருவரிடம் சிறிதுகாலம் பயின்றார். பிற இசைக் கச்சேரிகளில், பிரபல பாடகர்கள் பாடும் பாடல்களைக் கேட்டே, தனது திறமையை வளர்த்துக்கொண்டார். மகாத்மா காந்தி காஞ்சிபுரம் வந்தபோது, பாரதியார் பாடலைப் பாடி அவரிடம் பாராட்டுப் பெற்றார். 1929ல் முதன்முறையாக வானொலியில் பாடினார். இவரது முதல் கச்சேரி, எழும்பூர் மகளிர் மன்றத்தில், 1932ல் அரங்கேறியது. சி.டி., கேசட் இல்லாத காலத்தில், கிராமஃபோன் தட்டுகளில் பதிவேற்றப்பட்ட இவரது பாடல்கள், ஏராளமாக விற்றன.
முத்துசாமி தீட்சிதரின் பாடல்களைப் பாடுவதில் சிறந்து விளங்கி, பாபநாசம் சிவன் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். பக்தி அல்லது தேசபக்தி பாடல்களை மட்டுமே பாடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 'விடுதலை, விடுதலை', 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' போன்ற தேசபக்திப் பாடல்களை, சுதந்திரம் அடைந்தபோது வானொலியில் பாடினார்.
இன்று கர்நாடக சங்கீத உலகில், பெண்களின் பங்கு பெருகியிருக்க முக்கிய காரணம் கான சரஸ்வதி டி.கே. பட்டம்மாள்தான்.
விருதுகள்
பத்ம விபூஷண்
கலைமாமணி
சங்கீத கலாநிதி
சங்கீத நாடக அகாதமி
இசைப் பேரறிஞர்
சங்கீத கலாசிகாமணி
காளிதாஸ் சம்மான்

