தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஞாநி எழுதும் மாலுவின் டயரி (33) - ஆம்பளைங்க சமாசாரம்

ஞாநி எழுதும் மாலுவின் டயரி (33) - ஆம்பளைங்க சமாசாரம்

ஞாநி எழுதும் மாலுவின் டயரி (33) - ஆம்பளைங்க சமாசாரம்


PUBLISHED ON : ஆக 29, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“மாலு நான் ஒரு பெரிய தாடியோட இருக்கற மாதிரி என்னை ஒரு படம் வரைஞ்சு கொடு” என்றான் பாலு. ஏன் அப்படி என்று கேட்டார் ஞாநி மாமா.

“ஒரு நூற்றாண்டுக்கு முன்னால பார்த்தா, விஞ்ஞானிகள், அறிஞர்கள் எல்லாரும் நீள நீளமா தாடிதான் வெச்சிருக்காங்க. நம்ம ஊர்ல கூட தாகூர், பெரியார்லாம் தாடி வளர்த்திருக்காங்க. அதனால் நான் ஒரு அறிஞராகும்போது தாடி வளர்க்கப் போறேன். அப்ப எப்பிடி இருக்கும்னு கற்பனை செய்யத்தான் இப்ப படம்” என்றான் பாலு. “தாடி நிச்சயமா வளரும். அறிவு பத்தி எந்த கேரன்ட்டியும் இல்லை” என்று கிண்டலடித்தது வாலு.

“இருபதாம் நூற்றாண்டுல ஏன் தாடி குறைஞ்சுபோச்சு தெரியுமா?” என்றார் மாமா. தெரியலயே என்றேன். “தாடி சோம்பலின் அடையாளம். நாடோடி வாழ்க்கையின் அடையாளம்னு 19ம் நூற்றாண்டுலயே நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஐரோப்பால, அமெரிக்கால, பிரிட்டன்ல எல்லாம் தொழிற்சாலைகள் அதிகமானதும் இயந்திரங்களோட வேலை செய்யறதுக்குத் தாடியும் மீசையும் கொஞ்சம் இடைஞ்சல்னு தோண ஆரம்பிச்சுது. உண்மையில தாடிக்கு எதிரான அரசாங்க நடவடிக்கை 1698லேயே தொடங்கிடுச்சு. ரஷ்யால மன்னர் முதலாம் பீட்டர், ஐரோப்பா சுற்றுப்பயணம் போய்ட்டு வந்த உடனே தன் நாட்டுல தாடிக்கு வரி விதிக்க ஆரம்பிச்சார்” என்றார் மாமா.

தாடிக்கு வரியா? “ஆமாம். வரி கட்டினவங்களுக்கு செம்புலயோ வெள்ளியிலயோ ஒரு வில்லையை ரசீதா தந்தாங்க. வரி போட்டா தாடி வெக்கறது குறையும்னு பீட்டர் நினைச்ச மாதிரியே நடந்தது. 47 வருஷம் இந்த வரி நடைமுறையில இருந்திருக்கு” என்றார் மாமா.

“அநியாயமா இருக்கே. தாடிக்குலாமா வரி போடுவாங்க.விட்டா, வகிடு எடுத்துச் சீவினா ஒரு வரி. வகிடு இல்லாட்டி இன்னொரு வரின்னுலாம் போடுவாங்க போல இருக்கே. அந்த காலத்துல ராஜாக்கள்லாம் கொஞ்சம் கிறுக்காதான் இருந்திருக்காங்க” என்றான் பாலு.

“இந்த வரிக்கே இவ்வளவு பொங்குறியே. ஹிட்லர் செஞ்சதைக் கேட்டா கொதிச்சுப் போயிடுவே” என்றார் மாமா. “தெரியுமே. அவர்தானே லட்சக்கணக்கான யூதர்களையெல்லாம் கொன்னவரு” என்றான் பாலு. “அதுக்கு முன்னால, அவர் உடல் ஊனமுற்றவர்களையெல்லாம் கொல்லச் சொன்னார் தெரியுமா?” என்றார் மாமா.

எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. “நிஜமாவா மாமா?” என்றேன். “ஆமா மாலு. ஹிட்லர் போலந்து நாட்டை ஆக்கிரமிச்ச உடனே 1939 செப்டம்பர்ல செஞ்ச முதல் நடவடிக்கைகள்ல இது ஒண்ணு. மூளை வளர்ச்சி குன்றின குழந்தைகள், உடல் ஊனம் உள்ளவர்கள் எல்லாரையும் கொல்லும்படி உத்தரவு போட்டார். சுமார் 8000 குழந்தைகளுக்கு விஷ ஊசி போட்டுக் கொன்னாங்க. அடுத்த 20 மாசத்துல 90 ஆயிரம் ஊனமுற்றவர்கள் கொல்லப்பட்டாங்க. எல்லாரையும் குளிக்க குளியலறைக்கு கூட்டிகிட்டுப் போறதா சொல்லிட்டு, அங்கே ஷவர் வழியா நச்சுப் புகையை செலுத்திக் கொல்றது, மூடின லாரில ஏத்திட்டு, அதுக்குள்ள விஷப்புகையை செலுத்தறதுன்னு இந்தக் கொலையை எல்லாம் செஞ்சிருக்காங்க. இந்த அனுபவங்கள் அடிப்படையிலதான் பின்னால யூதர்களை முகாம்ல வெச்சுக் கொல்லும்போதும் இதே உத்திகளைப் பின்பற்றியிருக்காங்க” என்றார் மாமா.

“எத்தனை ஸ்டீபன் ஹாக்கிங் அப்படி கொல்லப்பட்டிருப்பாங்களோ, தெரியலியே” என்றேன் நான் சோகமாக.

“நகர முடியாது. அசைய முடியாது. கன்னத்துல இருக்கற ஒரு தசையை மட்டும் அசைச்சு அதை ஒரு மெஷினோட இணைச்சு அவர் என்ன நினைக்கிறார்ங்கறதைச் சொல்லவேண்டிய நிலைமையில இருக்கற விஞ்ஞானி ஸ்டீபன். லேட்டஸ்ட்டா அவர் கருந்துளைகள் பத்திக் கண்டுபிடிச்சு சொல்ற விஷயங்கள் அடுத்து நிரூபணமாயிட்டா, அவருக்கு நோபல் பரிசே அதுக்காகத் தரவேண்டி வரும்னு சொல்றாங்க” என்றார் மாமா.

“அதிகாரத்துக்கு வர்றவங்க தப்புப் பண்ணினா, மொத்த சமூகமும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுது இல்ல. அதனால் யாரை அதிகாரத்துல உட்கார வெக்கலாம்னு ஜனங்க எப்பவும் விழிப்பா இருக்கணும்” என்றேன்.

“ஹிட்லர்கிட்ட மாட்டாம தப்பிச்ச ஒரு பெரிய விஞ்ஞானி யார் தெரியுமா?” என்று கேட்டார் மாமா.

உடனே வாலு “ஐன்ஸ்டைன்” என்றது. “கரெக்ட். ஐன்ஸ்டைன் ஜெர்மனில பிறந்த யூதர். ஹிட்லர் ஆட்சிக்கு வந்த உடனே, ஐன்ஸ்டைன் ஜெர்மனியை விட்டுத் தப்பிச்சு வந்து பெல்ஜியத்துல இருந்தார். அப்பறம் அமெரிக்காவுக்கு போய்ட்டார். ஊர்ல அவர் வீட்டை ஹிட்லர் ஆட்கள் எரிச்சாங்க. அவரோட புத்தகங்களை எல்லாம் கொளுத்தினாங்க. ஹிட்லர் அரசு தயாரிச்ச 'கொல்லப்படவேண்டியவர்கள்' பட்டியல்ல ஐன்ஸ்டைன் பேரும் இருந்தது. அவரைக் கொன்னா ஐயாயிரம் டாலர் பரிசுன்னு அறிவிச்சாங்க”என்றார் மாமா.

“பாலு, தாடி வளர்க்காத விஞ்ஞானிகள்ல ஐன்ஸ்டைனும் ஒருத்தர்” என்றது வாலு.

“தாடி வளர்க்கணுமா, இல்லை மொட்டை அடிச்சுக்கணுமாங்கறதைப் பத்தி வள்ளுவர் தெளிவா அறிவுரை சொல்லியிருக்கார், பாலு” என்றார் மாமா. “ மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம் பழித்தது ஒழித்துவிடின்னு சொல்லியிருக்காரு. மத்தவங்க பழிக்கற மாதிரியான விஷயங்களைத்தான் நம்ம நீக்கணும். தாடியா மொட்டையாங்கறது முக்கியமே இல்லை.”

“அப்பறம் ஏன் வள்ளுவருக்குத் தாடி வெச்சே படம் போட்டுகிட்டிருக்கோம்?” என்றான் பாலு. “நீ தாடி இல்லாத ஒரு வள்ளுவர் படம் வரைய முயற்சி பண்ணு”என்றார் மாமா.

“இதெல்லாம் ஆம்பளைங்க சமாச்சாரம். எங்களுக்கு இந்தக் கவலையே இல்லை. தலைமுடியை வளர்க்கறதா, பாய் கட் பண்றதாங்கறது மட்டும்தான் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு” என்றேன்.

“அது தாடி மீசை வெக்கறதை விடப் பெரிய பிரச்சினை நம்ம குடும்பங்கள்ல” என்றார் மாமா. எல்லாரும் சிரித்தோம்.

நான் பாய் கட் செய்துகொள்ளலாம் என்று ரகசியமாக முடிவு செய்துகொண்டேன்!

வாலுபீடியா 1: உலகத்தின் முதல் டெலிபோன் ஆபரேட்டராக பெண்கள் நியமிக்கப்பட்டது 1878 செப்டம்பர் மாதத்தில்தான். எம்மா நட் என்பவரை கிரஹாம் பெல் நியமித்தார். அப்போது டெலிபோன் ஆபரேட்டர்கள் நின்றுகொண்டுதான் வேலை செய்யவேண்டும். எக்சேஞ் மெஷின்கள் அவ்வளவு உயரம்.

வாலுபீடீயா 2: தாடி மீசையில் உலக சேம்பியன்களுக்கான போட்டி இரு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அடுத்த போட்டி செப்டம்பர் 2017ல் அமெரிக்காவில். இது வரை உலகத்திலேயே மிக நீண்ட தாடியின் நீளம் 17 அடி!

வாலுபீடியா 3: இந்தியாவின் முதல் தாடி வைத்த பிரதமர் ஐ.கே.குஜ்ரால். மீசையும் தாடியும் சேருவது போன்ற பிரெஞ்ச் பியர்ட் வைத்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us