தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/குறையும் ஏரி; குவியாத பறவைகள்

குறையும் ஏரி; குவியாத பறவைகள்

குறையும் ஏரி; குவியாத பறவைகள்


PUBLISHED ON : ஜூலை 29, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது பழவேற்காடு ஏரி. இந்தியாவில் இரண்டாவது பெரிய உவர் நீர் ஏரி இது. நன்னீர், உப்புநீர், குட்டைகள், சேற்றுத் திட்டுகள், விளைநிலங்கள் என, பல்லுயிர்ச் சூழல் நிலவுவதால், 'பல்லுயிர் பெருக்கம்' மிகுந்து காணப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள நெலப்பட்டு பறவைகள் காப்பகத்தில் இருந்தும் பறவைகள் இரை தேடி இங்கு வருகின்றன. இப்பல்லுயிர்ச் சூழலால் மீன்கள், நண்டுகள், நத்தைகள், இருவாழ்விகள், நீர்வாழ் தாவரங்கள், நுண்ணுயிரிகள், மெல்லுடலிகள் என, உணவுப் பெருக்கம் நிறைந்து காணப்படும் பகுதி இது.

பூநாரை, உள்ளான், செண்டு வாத்து, ஊசிவால் வாத்துகள் என, ஏரியில் ஆயிரக்கணக்கான பறவை இனங்கள் இருக்கின்றன.

அதேபோல், மீன்களை உண்ணும் கொக்கு, நாரை, கரண்டிவாயன்கள் உள்ளிட்ட பறவைகள் ஆயிரக்கணக்கில் வலசை வரும் முக்கிய இடமும்கூட.

வாழ்விடப் பறவைகளான ஆந்தைகள், பச்சை பஞ்சுருட்டான்கள், மீன்கொத்திகள், பருந்துகள், வல்லூறுகள் என, பலவகையான பறவைகளை இங்கு கண்டு மகிழலாம். மரங்கள் அடர்ந்த பகுதியை ஒட்டி இருப்பதால், பழவேற்காடு என்ற பெயர் ஏற்பட்டு இருக்கலாம் என்கிறார்கள் அறிஞர்கள். சென்னையில் இன்றளவும் காடு என்று முடியும் ஊர்கள் இருப்பதாலும், மரங்கள் நிறைந்த பகுதியாலும் பழவேற்காடு என்று அழைக்கப்படுகிறது.

ஆங்கிலேயர்களால் பழவேற்காடு என்று சொல்ல முடியாததால், புலிகாட் என்று மாறி இருக்கவும் வாய்ப்புண்டு என்கிறார்கள் சூழலியல் ஆய்வாளர்கள்.

--சேற்றுத்திட்டுகள் அதிகமுள்ள ஆரம்பாக்கம் பகுதியில் உள்ளான்களையும், உப்புக்கொத்திகளையும் காணலாம். தமிழக எல்லையின் ஆரம்பத்தில் உள்ள பறவைகள் காப்பிடமான இங்கு, இமயமலையில் இனப்பெருக்கம் செய்துவிட்டு வரும் பட்டைத் தலை வாத்துகளைக் காண முடியும்.

ஆர்டிக் பகுதியில் இருந்து வருகை தரும் கோட்டான்கள் (Whimbrel) பழவேற்காட்டின் நீர்நிலைகளில் காணப்படும் சேற்று நண்டுகளை உணவாக உண்கின்றன. இப்படி உலகின் பல பகுதிகளில் இருந்து வலசை வரும் பறவைகள் மற்றும் நம்மூர் பறவை இனங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக பழவேற்காடு அமைந்திருக்கிறது.

இங்குள்ள நீர்நிலைகளில் முறையற்ற மீன் பிடிப்பு, இறால் வளர்ப்பு, காப்பிடத்தின் முகத்துவார அமைப்பு மற்றும் முகத்துவாரத்தில் சேரும் வண்டல் படிவு போன்ற செயற்பாடுகள் சூழலின் தன்மையைக் குலைக்கின்றன.

அதேபோல், எண்ணூர் அனல்மின் நிலையம் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை ஏற்றுமதி செய்யும் 30-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் கழிவுகளாலும் பழவேற்காட்டின் பல்லுயிர்த்தன்மை பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இங்கு வலசை வரும் பறவைகளுக்கு நீர் மாசுபாடு பிரச்னையாக மாறியுள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்கிறார்கள் பறவையியல் ஆய்வாளர்கள்.

-ஏ.சண்முகானந்தம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us