PUBLISHED ON : ஜூலை 29, 2019

மழைக் காலம் தொடங்கிவிட்டது. இனி நம் வீட்டுக் கதவுகளை அடைத்துக் கொள்ள வேண்டியதுதான்? ஆம்! சிங்கம், யானை, கரடிகளுக்காக அல்ல; கொசுக்களுக்காகத்தான். கொசுக்களால் வரும் மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு, ஜிகா நோய்கள் பற்றிய பயம் யாருக்குத்தான் இல்லை?
கொசுக்களை அழிக்க கொசு விரட்டிகள் ஏராளம் வாங்கியிருப்போம். ஆனாலும், கொசுக்களின் எண்ணிக்கை குறைவதேயில்லை. கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போதுகூட, அதை எளிதாக அடித்துக் கொல்ல முடியாது.
கைகளால் அடிக்க முயலும்போது, நம்முடைய தோலில் ஒரு சுருக்கம் ஏற்படுகிறது. அந்த மெல்லிய அதிர்வை கொசுக்கள் உணர்ந்து உஷாராகப் பறந்து விடுகின்றன. இருட்டில்கூட கொசுக்களிடமிருந்து நாம் தப்பித்துவிட முடியாது.
கொசுக்கள் நம்மைக் கடிக்க, நம்முடைய மூச்சுக்காற்றில் இருந்து வெளியேறும் கரியமில வாயு மற்றும் உடல் வெப்பம் போதும்.
கொசுக்களை ஒழிக்க ஏதாவது ஒரு வழியை யோசித்தபடியே ஆண்டுதோறும் மழைக்காலங்களை எதிர்கொள்கிறோம். நம்முடைய மூதாதையர்கள் கையாண்ட ஓர் எளிய வழிமுறையைப் பார்ப்போம்.
அவர்கள், வீட்டின் தோட்டத்திலோ, வீட்டின் முன் வாசலிலோ நொச்சி, கற்பூரவல்லி, சோற்றுக்கற்றாழை போன்ற தாவரங்களை வளர்த்தனர். இந்த வகைத் தாவரங்களின் சாற்றை ஆண் கொசுக்கள் விரும்பாது.
ஆண் கொசுக்கள் இல்லாத இடத்தில், நம்மை கடிக்கும் பெண் கொசுக்களுக்கு எந்த வேலையும் இல்லை. அப்புறமென்ன? நிம்மதியான தூக்கம் நமக்குச் சொந்தமாகிவிடும்.
