PUBLISHED ON : டிச 18, 2017

பால்வீதியில் எத்தனையோ கோள்கள் சுற்றி வருகின்றன. இதில் நமது சூரியக் குடும்பத்தை ஒத்த அமைப்பில் இயங்கும் புதிய நட்சத்திரத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. சூரியனை மையமாகக் கொண்டு, பூமி உட்பட ஒன்பது கோள்கள் சுற்றி வருகின்றன. இதில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் பூமியில் மட்டுமே இருக்கிறது. இதர கோள்களில் உயிர்கள் வாழ முடியுமா, வாழ்கின்றனவா என்ற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சூரிய கோள்களின் அமைப்பைப் போன்றே, ஒரு நட்சத்திரத்தை மையமாக வைத்துச் சுற்றிவரும் எட்டு புதிய கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. 2009ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட 'கெப்ளர்' என்ற விண்வெளி தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட தகவல்களை ஒழுங்குபடுத்திப் பார்த்ததில், இந்த நட்சத்திரம் பற்றி அறிய முடிந்தது.
கெப்ளர் 90 என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திரம், பூமியில் இருந்து, 2 ஆயிரத்து 545 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. இதைச் சுற்றி வரும் கோள்களில் கெப்ளர் 90 என்ற கோளின் நில அமைப்பு, பூமியைப்போன்ற தோற்றம் கொண்டதாக இருக்கிறது. இது மைய நட்சத்திரத்தை 14.4 நாட்களில் சுற்றிவருவதாகவும்; செவ்வாய் கிரகத்தைவிட, இதில் கடுமையான வெப்பநிலை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் நாசா தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் நாசாவின் கெப்ளர் ஸ்பேஸ் டெலஸ்கோப் பிரிவுக்கு, அமெரிக்க விண்வெளிக் கழகத்தின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவும் உதவியுள்ளது. இதன் ஆய்வுகள் மேலும் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.
கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி 2009இல் இருந்து இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் நட்சத்திரங்களைக் கண்டறிந்துள்ளது. கெப்ளர் அனுப்பிய ஆவணங்களைப் பயன்படுத்தி, பால்வீதியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கோள்கள் இருப்பதை ஏற்கெனவே நாசாவின் வானியல் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். 'டிராப்பிஸ்ட் 1'
என்று பெயரிடப்பட்ட சூரியக் குடும்பம் போன்ற வரிசையில் இருக்கும் ஏழுகோள்களை நாசா ஏற்கெனவே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கண்டுபிடித்து அறிவித்தது. அப்போது அதில் நீர் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் மனிதர்கள் வாழத் தகுதியானதாக இருக்கும் என்றும் சொல்லி இருந்தது. அந்த ஆய்வுகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

