PUBLISHED ON : டிச 18, 2017

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை உணவகம் ஒன்றில் சப்ளையர்களாக ரோபோக்கள் செயற்படுகின்றன. சென்னை ஓ.எம்.ஆரில் உள்ள ரோபோர்ட் என்ற சீன வகை உணவகத்தில், வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் பணியை ரோபோக்கள் செய்து வருகின்றன. இதற்காக சீனாவில் இருந்து, 4 ரோபோக்களை இறக்குமதி செய்துள்ளனர். டேபிளில் வைக்கப்பட்டிருக்கும் 'டேப்' மூலம் நீங்கள் ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருந்தால் போதும், கொஞ்ச நேரத்தில் கையில் உணவுப் பதார்த்தங்களை உங்கள் டேபிளுக்கு ரோபோ கொண்டுவந்து கொடுக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த உணவகத்தை, தீம் அடிப்படையில் மாற்றி அமைக்க நினைத்தபோது, வெளிநாடுகளைப்போல, ரோபோ சப்ளையர்களைக் கொண்டுவர முடிவு செய்ததாகக் கூறுகிறார் இந்த உணவகத்தின் பங்குதாரர்களில் ஒருவரான கார்த்திக் கண்ணன். ரோபோ சப்ளையர்களைக் காண்பதற்காகவே, நிறைய புது வாடிக்கையாளர்கள் வருவதாகவும், பலர் ரோபோக்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

