டி.கே. பட்டம்மாள்! இசையால் சுதந்திரம் அறிவித்தவர்...
டி.கே. பட்டம்மாள்! இசையால் சுதந்திரம் அறிவித்தவர்...
PUBLISHED ON : அக் 14, 2016
பழைய ஒலி நாடாவில் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்...' என்று பாடிய பெண்மணியின் குரலை, யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. இன்றைக்கும் சுதந்திர தினத்தன்று வானொலியிலும், தொலைக்காட்சிகளிலும், இந்த ஒலி நாடாவைக் கேட்க முடியும். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று, வானொலியில் ஒலிபரப்பப்பட்ட பாடல் இது! இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியைத் தனது இனிய குரலால் அறிவித்தவர், டி.கே. பட்டம்மாள்.
காஞ்சிபுரத்தில் பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தில், 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி பிறந்த பட்டம்மாள், நான்கு வயது முதல் இசை கற்கத் தொடங்கினார். அலமேலு என்பது இவரது இயற்பெயர். தனது தந்தையால் செல்லமாக 'பட்டா' என்று அழைக்கப்பட்டார்; பின்னாளில் இசை உலகில் பிரபலமாகத் தொடங்கியபோது 'பட்டம்மாள்' என்ற பெயர் இவருக்கு நிலைத்துவிட்டது. இவர் வாழ்ந்த காலத்தில், பெண்களுக்குக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டாலும், கச்சேரிகள் செய்து திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. ஆனால், பட்டம்மாளின் பெற்றோர்கள் அவருக்கு தொடர்ந்து ஊக்கமளித்தார்கள். தனது 10ஆம் வயதில் காஞ்சிபுரம் தியாகராயர் விழா இசைப் போட்டியில் பங்கேற்று, அந்தக் காலத்தின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையிடம் பரிசு பெற்றார்.
தொடக்க காலத்தில் இப்படி இசைப் போட்டிகள் மூலம் பிரபலமடைந்து வந்த பட்டம்மாள், பிறகு சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் பாடத் தொடங்கினார். அதன் பிறகே மேடை இசைக் கச்சேரிகளில் பாடத் தொடங்கினார். திரை இசைப் பாடல்களைப் பொறுத்தவரை, 1940களில் வெளிவந்த சுதந்திரப் போராட்டம் தொடர்பான படங்களில் மட்டுமே பாடி இருக்கிறார்.
சிறு வயது முதலே, பாடல் பாடும்போது குரலை விட வார்த்தை உச்சரிப்புக்கும், இலக்கணத்திற்கும் முன்னுரிமை கொடுப்பாராம். பாரதியாரின் பாடல்கள், சாதாரண மக்கள் மத்தியில் பிரபலமடைய முக்கிய காரணம், இவருடைய குரல் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். தமிழ்ப் பாடல்கள், தேசப்பற்று பாடல்கள், பக்திப் பாடல்கள் எனப் பல வகையான பாடல்களைப் பாடி இருக்கிறார். டி.கே. பட்டம்மாளின் பாடலை நேரில் கேட்கவும், இசைத்தட்டில் கேட்கவும் வாய்ப்பு கிடைத்தவர்கள், அவர் பல்லவி பாடும் விதத்தில் பிரமிப்படைந்து அசந்து போவார்களாம். அதனால் 'பல்லவி பட்டம்மாள்' என்றும் இசைப் பிரியர்கள் இவரை அன்புடன் குறிப்பிடுகிறார்கள்.
