PUBLISHED ON : அக் 14, 2016
பாட்டி, பேரன், பேத்தி என்று மூன்று பேர் ஒரு வீட்டில் வசித்து வந்தார்கள். அந்தப் பாட்டிக்கு, பிறர் வீடுகளில் பாத்திரம் தேய்த்துக் கொடுத்து அதில் கிடைக்கும் கூலிதான் ஒரே வருமானம். மாதம் பூராவும் வேலை செய்தால் பாட்டிக்கு சொற்பமாக (கொஞ்சமாக) பணம் கிடைக்கும்.
இப்படிக் கிடைத்த சம்பளத்தோடு ஒரு நாள் வீடு திரும்பினார் பாட்டி. ஒரு வீட்டில் மட்டும், பணத்துக்குப் பதிலாக கொஞ்சம் கூடுதலாகவே கம்பு தானியத்தைக் கொடுத்திருந்தார்கள்.
“பேராண்டி, பேத்தி… நான் இந்த கம்பை எடுத்துட்டுப் போய், சந்தையில வித்துட்டு வரப்போறேன். உங்களுக்கு சந்தையில இருந்து ஏதாவது வாங்கிக்கிட்டு வரணுமா?” என்று வாஞ்சையோடு (பிரியத்தோடு) கேட்டார்.
அந்தக் குடும்பம் மிகவும் ஏழ்மையானதுதான். ஆனாலும், பேத்திக்கு இசை, கலைகள் போன்றவற்றில் ஆர்வம் அதிகம். நன்றாகப் பாடவும் செய்வாள்.
மூத்த பையனோ புத்திசாலித்தனம் மிகுந்தவன். விடா முயற்சி உடையவன்.
பாட்டி, கேட்டதும் டக் என்று பேத்தி சொன்னாள்: “பாட்டி, பாட்டி! நான் இப்போ சும்மாச் சும்மாப் பாடிட்டிருக்கேன். பாடும்போது தாளமும் இருந்தா சூப்பரா இருக்கும். அதனால எனக்கு ஒரு டிரம் வாங்கிட்டு வாங்க பாட்டி.”
பாட்டிக்கு திடுக் என்றது.
இசைக் கருவிகள் எல்லாம் விலை அதிகமாக இருக்குமே… என்ன செய்வது என்று யோசித்தார். பிறகு, “பார்ப்போம், கையில அந்த அளவுக்குக் காசு இருந்தா வாங்கிட்டு வர்றேன்” என்று சொன்னார். சந்தைக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்.
சந்தையில், தான் கொண்டுபோன கம்பு தானியத்தை விற்றார் பாட்டி. ஓரளவு கணிசமாக (அதிகமாக) காசு கிடைத்தது.
அந்த மாதத்துக்கு வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்களை (சமையல் சாமான்களை) வாங்கினார். கடைசியில் பார்த்தால் கையில் ஒரே ஒரு ஐந்து ரூபாய் நாணயம் மட்டும்தான் மீதம் இருந்தது. வீடு நோக்கிப் புறப்பட்டார்.
வரும் வழியில் ஒரு மரத்துண்டு கிடந்தது. அது வளைந்து நெளிந்து ஏதோ பொம்மை போல் பாட்டிக்குத் தோன்றியது. 'இருக்கட்டுமே' என்று அதைக் கையில் எடுத்துக்கொண்டார்.
வீட்டில், பேரனும் பேத்தியும் பாட்டிக்காகக் காத்திருந்தார்கள். தனியாக வைத்திருந்த கடலை மிட்டாயையும் காராச்சேவு பொட்டலத்தையும் அவர்களிடம் நீட்டினாள்.
பேத்தியின் கண்கள், ட்ரம் இருக்கிறதா என்று தேடின.
பேரன் சிரித்தான். “என்ன பாட்டி, சாமான் எல்லாம் வாங்கினதும் காசு தீர்ந்துடுச்சா? அது என்ன கோணல் மாணலா ஏதோ கம்பு வச்சிருக்கீங்க?” என்றான்.
“வர்ற வழியில கிடந்துச்சு” என்றபடியே அந்த மரத் துண்டை, பேரனிடம் நீட்டினார் பாட்டி.
அதை வாங்கி, தரையில் தட்டினான் பேரன். அது, 'ணங்… டம்…' என்று சத்தம் எழுப்பியது.
“இந்த சத்தத்தைத் தாளமா வச்சிக்கிட்டுப் பாடுவியா பாப்பா?” என்று தங்கையிடம் கேட்டான். அவள் அமைதியாக இருந்தாள்.
“பொறு, அண்ணன் வெளியே போயிட்டு, கொஞ்ச நேரத்துல வர்றேன்” என்று அந்த மரத் துண்டோடு வெளியேறினான்.
*
நண்பர்களே… இங்கிருந்து, திருப்பங்களுக்குத் தயாராகுங்கள். அந்தப் பையனின் கையில் இருந்த மரத்துண்டைப் போலவே நம்முடைய கதையும் வளைந்து நெளிந்து தொடரப் போகிறது…
*
பையன் போகும் வழியில் ஒரு பெரியவர் ரொட்டி சுட்டுக்கொண்டு இருந்தார். அவருடைய அடுப்பு சரியாக எரியவில்லை. அவரிடம் போனான் பையன்.
“ரொம்பக் கஷ்டப்படுறீங்க… இந்த மரத்துண்டை வச்சிக்குங்க. சீக்கிரமாப் பத்திக்கும்” என்றான்.
அவருக்கு ஆச்சரியம். 'தானாக வந்து உதவுகிறானே' என்று நினைத்தபடி, அந்த மரத் துண்டை வாங்கிக்கொண்டார். அவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, “இந்தாப்பா, இதை வச்சிக்கோ” என்று, வெந்து அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு பெரிய ரொட்டியை எடுத்துக் கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்டு நடையைக் கட்டினான் பையன். பக்கத்தில் பானை செய்பவர் ஒருவரின் வீடு இருந்தது. அந்த வீட்டில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்தான். ''பாப்பா ஏன் அழுவுது?'' என்று கேட்டான்.
“பாப்பாவுக்குப் பசிக்குது போல இருக்கு” என்றார் பானை வனைபவர் (தயாரிப்பவர்).
உடனே கொஞ்சமும் யோசிக்காமல், தன் கையில் இருந்த ரொட்டியைக் குழந்தையிடம் நீட்டினான் பையன். குழந்தை அதை ஆசையோடு வாங்கிச் சாப்பிட்டது. சாப்பிடும்போதே குழந்தையின் அழுகையும் நின்று விட்டிருந்தது.
பானைக்காரருக்கு சந்தோஷம். “நல்ல நேரத்துல வந்தே தம்பி. இந்தா” என்று ஒரு பானையை எடுத்து அவனிடம் கொடுத்தார்.
பானையைப் பார்த்ததும், அதில் தண்ணீர் மொண்டு விளையாட வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. ஆற்றை நோக்கி நடந்தான் பையன்.
ஆற்றங்கரையில் சலவைத் தொழிலாளர் ஒருவர், தன் தம்பியைத் திட்டிக்கொண்டு இருந்தார்.
''ஏன் அவரைத் திட்டுறீங்க?'' என்றான் பையன்.
''எங்ககிட்ட ஒரு பானைதான் இருந்துச்சு. அதை இவன் உடைச்சுட்டான்'' என்றார் சலவை செய்பவர்.
''அதனால என்ன, இதோ என் கிட்டே ஒரு பானை இருக்கு, இதை வெச்சுக்குங்க'' என்று தன்னிடம் இருந்த பானையை அவரிடம் நீட்டினான் பையன்.
நன்றி சொன்ன அவர், தன்னிடம் இருந்த கனமான ஓர் அங்கியை எடுத்தார். “இதை நீ எடுத்துக்கிறியா?” என்று அன்போடு கேட்டார். பையனும் வாங்கிக்கொண்டான். அங்கிருந்து புறப்பட்டான்.
சிறிது தூரம்தான் நடந்திருப்பான். ஒருவர், சட்டைகூடப் போடாமல், நடுங்கிக்கொண்டு நின்றிருந்தார்.
அவரிடம் சென்று “என்ன அண்ணா ஆச்சு?'' என்று விசாரித்தான் பையன். அவர் அருகில் ஒரு குதிரை நின்றிருந்தது.
அதைக் காட்டி, ''இதுல வந்துட்டிருந்தேன். ரெண்டு திருடங்க வழி மறிச்சு என்கிட்ட இருந்த எல்லாத்தையும் பிடுங்கிக்கிட்டாங்க. என் சட்டையைக்கூட விட்டு வைக்கலை” என்றார் அவர்.
''அச்சச்சோ'' என்ற பையன் தன் கையில் இருந்த அங்கியை அவருக்குப் போர்த்திவிட்டான்.
அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஆகிவிட்டது. “தெரியாத ஊர். மாட்டிக்கிட்டோமோன்னு நினைச்சேன். நீ வந்து ஆறுதல் சொல்லிட்டே… ரொம்ப நன்றி தம்பி, இந்தா இந்தக் குதிரையை நீ வெச்சுக்க” என்று தன் குதிரையைப் பையனிடம் கொடுத்துவிட்டார்.
குதிரையை வாங்கிக்கொண்ட பையன் அதன் மேல் ஏறினான். மெதுவாக அதை நடத்தியபடியே சவாரியாகப் போனான்.
வழியில் ஒரு கோயில் வாசலில் ஒரு கல்யாண கோஷ்டி நின்றுகொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் முகம் சந்தோஷமாக இல்லை.
குதிரையில் இருந்து இறங்கி காரணம் விசாரித்தான் பையன். ''மாப்பிள்ளை ஊர்வலத்துக்குச் சொல்லி வெச்சிருந்த குதிரை இன்னும் வரலை. நல்ல நேரம் போயிட்டிருக்கு. மாப்பிள்ளை நடந்து வர முடியுமா?'' என்றார் பெண்ணின் தந்தை.
“அட, இவ்வளவுதானா? கவலையே படாதீங்க. இதோ இந்தக் குதிரையை வெச்சு ஊர்வலத்தை நடத்துங்க” என்று குதிரையில் இருந்து குதித்து இறங்கி, அந்தக் குதிரையை பெண்ணின் தந்தையிடம் கொடுத்தான் பையன்.
“இதுக்கு பதிலா நான் உனக்கு என்னப்பா தர்றது?'' என்றுகேட்டான் மாப்பிள்ளை.
*
நண்பர்களே… திருப்பங்கள் எல்லாம் சரிதானா? நிறைவாக ஒரு சம்பவத்தையும் வாசித்துவிடுங்கள்…
*
“நீங்க எனக்கு ஏதாவது தரணும்னு நினைச்சா கல்யாணத்துக்கு வாத்தியம் வாசிக்கிறாங்களே, அதிலிருந்து ஒரு டிரம் வாங்கிக் குடுங்க” என்றான் பையன்.
மாப்பிள்ளையே சொல்லிவிட்டால், அதற்குப் பிறகு வேறு பேச்சு ஏது? தன் டிரம்மைத் தூக்கி, பையனிடம் கொடுத்துவிட்டார் கச்சேரிக்காரர். இதற்கும் சேர்த்தே சன்மானம் கொடுத்துவிடுவார்கள் என்று அவருக்குத் தெரியும்!
தன் புது டிரம்மை, 'டாம் டூம் டாம் டுடும்' என்று இசைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடைபோட்டான் பையன்.
வீட்டுக்கு வெளியே, தெருவிலேயே நின்று கொண்டு இருந்தாள் தங்கை. பக்கத்தில் பாட்டி.
தான் சம்பாதித்த டிரம் வாத்தியத்தை, பெரிய சந்தோஷத்தோடு தங்கையிடம் கொடுத்தான் பையன்.
ராஷ்மி
