
01. ௧ ஒரு கர்ச்சீஃபை எடுத்து, அதில் ஒரு முடிச்சுப் போடுங்கள், பார்ப்போம். என்ன, போட்டுவிட்டீர்களா? “இதெல்லாம் ஒரு சவாலா என்கிறீர்களா? வெயிட்... இரண்டு முனைகளையும் பிடித்து எடுத்து, அந்த முனைகளை விட்டுப் பிடித்துத்தான் முடிச்சைப் போட முடிந்தது.
இப்போது சவால். கர்ச்சீஃபின் இரு முனைகளையும் பிடித்துக்கொண்டு, அந்தப் பிடியை விடாமல் முடிச்சுப் போட வேண்டும். புரியலையா? கர்ச்சீஃபின் ஒரு முனையை ஒரு கையால், அதாவது கட்டை விரல், ஆள்காட்டி விரல் ஆகியவற்றால் பிடித்துவிட்டீர்கள். மறுமுனையையும் அதேபோல் மறுகையால் பிடித்துவிட்டீர்கள். இப்போது அப்படிப் பிடித்தபடியே கர்ச்சீஃபில் முடிச்சுப் போட வேண்டும்.
முடியுமா?
2. உங்கள் நண்பரைக் கூப்பிடுங்கள். ஒரு சுவரை ஒட்டி நிற்கச் சொல்லுங்கள். எப்படி நிற்க வேண்டும்? அவரது வலது பாதத்தின் விளிம்பு (Edge) சுவரோடு ஒட்டி இருக்க வேண்டும். அதேபோல், அவரது தலையும் சுவரோடு ஒட்டி இருக்க வேண்டும். இப்போது சவால். அப்படி நின்றபடியே இடது காலை உயர்த்தச் சொல்லுங்கள். அவரால் உயர்த்த முடியாது. அவர் தோற்றுவிட்டார். சரி இப்போது நீங்கள் அப்படிச் செய்ய முயற்சியுங்கள் பார்ப்போம்.
உங்களாலும் முடியாது. நீங்களும் தோற்றுவிட்டீர்கள். ஹிஹிஹிஹி...
3. படத்தில் காட்டியபடி இரு கைகளையும் ஒன்றுசேர்த்து வையுங்கள். அதாவது கட்டை விரல்கள், ஆள்காட்டி விரல்கள், மோதிர விரல்கள், சுண்டு விரல்கள் ஆகியவை நீண்ட நிலையில் ஒட்டி இருக்க வேண்டும். நடுவிரல்களை மட்டும் மடக்கியபடி ஒட்டி வைத்திருங்கள்.
ஆச்சா?
இப்போது சவால், நடுவிரல்கள் ஒட்டியபடியே இருக்க, கட்டை விரல்களைப் பிரியுங்கள். முடியும்.
ஆள்காட்டி விரல்களைப் பிரிக்க முடியுமா? முடியும்.
சுண்டு விரல்களை? முடியும்.
ஆனால், மோதிர விரல்களை மட்டும் பிரிக்கவே முடியாது?
முயற்சித்துப் பாருங்கள்.
இது சவால் அல்ல. சும்மா செய்து பார்க்க...
நேராக நில்லுங்கள். உங்கள் நண்பரை அழைத்து உங்கள் தலை மீது கையை வைக்கச் சொல்லுங்கள். இப்போது அவர் கையை நீட்டி இருக்கும் இடம் என்பது உங்கள் உயரம், அல்லவா? அவர் அப்படியே கையை அளவு வைத்தபடி நிற்கட்டும்.
இப்போது படத்தில் காட்டியபடி குனிந்து நின்று ஒரு கையை உயர்த்துங்கள். நண்பர் கையை நீட்டி நின்றிருக்கிறார் அல்லவா, அதே உயரத்தில் உங்கள் கையும் இருக்கும்.
மனித உடல் அளவின் விகிதாச்சார விந்தை இது!