
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் டலஹாசி நகரில் வசிக்கும், டோபி கிங்க் எனும் 9 வயதுச் சிறுவன், டேக்வாண்டோ எனும் விளையாட்டில் கறுப்பு பட்டை (Black Belt) வென்றுள்ளான். டேக்வாண்டோ எனும் சீன தற்காப்புக் கலை, சற்று கடினமான ஒன்று. அதில், இந்தச் சிறு வயதில் வெற்றி பெற்றிருப்பது, பெரிய சாதனைதான். ஆனால், அது மட்டுமே டோபுவின் சிறப்பு அல்ல.
தனது ஒன்றாவது வயதிலேயே, ஃபிபுலார் ஹெமிமேலியா (Fibular Hemimelia) எனும் குறைபாட்டினால், வலது முழங்காலுக்கு கீழுள்ள கால் பகுதியை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் உடலின் வளர்ச்சிக்கேற்ப செயற்கைக் கால்களை பொருத்தினால்தான், டோபுவால் நடக்கவே முடியும். அந்த நிலையிலும், கடினமான தற்காப்புக் கலையைக் கற்று, அதில் பிளாக் பெல்ட்டும் பெற்றுள்ளது டோபுவின் தளராத ஊக்கத்தைக் காட்டுகிறது. பல பகுதிகளில் இருந்து டோபுவிற்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
டோபுவின் தாய் “பல சமயங்களில் செயற்கைக் காலுடன் நடமாடுவதேகூட டோபுவுக்கு கடும் வலியை ஏற்படுத்துவதுண்டு. ஆனாலும், தனது மனவலிமையால் மட்டுமே அதையெல்லாம் கடந்து இந்தச் சாதனையை அவன் செய்துள்ளான்” என்று நெகிழ்ந்தார்.