தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/புடலை என்றால் என்ன தெரியுமா?

புடலை என்றால் என்ன தெரியுமா?

புடலை என்றால் என்ன தெரியுமா?


PUBLISHED ON : செப் 23, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 23, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு சொல்லில் ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில், வேறு எழுத்தும் வருவது உண்டு. அவ்வாறு சில எழுத்துகளுக்கு வேறு சில எழுத்துகள் மாற்றாகத் தோன்றும்.

இளமைப் பருவத்தில் உள்ளோரைச் 'சிறுவன், சிறுமி' என்கிறோம். சிறுமை + அன் என்பது சேர்கையில் மை விகுதி கெட்டு சிறு + அன் என நின்றது. இடையில் உடம்படு மெய்யாக வ் தோன்றி, சிறு + வ் + அன் = சிறுவன் என்று ஆனது.

அப்படியானால், சிறுமி என்ற சொல் எப்படித் தோன்றியது? சிறுவன் என்பதற்குச் சிறுவி என்பதுதானே சரியாக இருக்க முடியும்? இங்கேதான் வகரத்திற்கு மாற்றாக மகரம் தோன்றும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சிறுவி என்னும் சொல்தான், சிறுமி என்று ஆனது.

அதேபோல், மகர எழுத்து வகர எழுத்து ஆவதற்கும் இடமுண்டு. செம்மை என்பதைச் செவ்வை எனலாம். மீசை என்பதை வீசை எனலாம்.

இன்னொரு வகை எழுத்து மாற்றத்தை அறிந்தால் வியப்பாக இருக்கும். ழகர எழுத்துகள் சொற்களில் டகர எழுத்துகளாக மாறுவதும் உண்டு. குழல் என்பது அவற்றில் ஒன்று.

குழல் என்பது நமக்குத் தெரியும். துளைவழி உள்ள பொருள்தான், குழல். அந்தச் சொல்லில் ழ என்ற எழுத்துக்கு மாற்றாக ட என்ற எழுத்தும் இடம்பெறும். அவ்வாறு உருவானதுதான் குடல் என்ற சொல். குடல் என்னும்சொல் நம் உடலின் குழல் உறுப்பின் பெயராக நிலைத்துவிட்டது.

புழல் என்பதற்கும் உள்ளே 'நடுப்பகுதியில் செல்லும் துளை' என்று பொருள். நடுவில் துளை உள்ள, காயைப் 'புழலை' என்று வழங்கினோம். அச்சொல்லிலும் ழகரத்திற்கு மாற்றாக டகரம் இடம்பெற்றது. புடலை என்று ஆனது. புடலங்காயை அரிந்து பார்த்தால், அதன் நடுவில் துளையாகச் செல்வதைப் பார்க்கலாம்.

இப்படி ஒவ்வொரு சொல்லும் அதன் பொருள் தன்மையோடு தெளிவாக அமைந்திருக்கிறது. காலப்போக்கில், ஓர் எழுத்து மாற்றம் பெற்றதை, மொழியியல் ஏற்றதால் நமக்குப் பொருள் தெரிவதில்லை. மொழியின் இத்தகைய நுட்பத்தை விளங்கிக்கொண்டால், அனைத்துச் சொற்களுக்கும் உரிய பொருள் இருப்பதைக் காணலாம்.

- நந்தினி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us