PUBLISHED ON : ஏப் 23, 2018

டில்லியைச் சேர்ந்தவர் கிரண் வர்மா, வயது 33. இவர் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, ரத்த தானத்துக்காக இணையதளம் ஒன்றை உருவாக்கினார். மேலும், இவரது ரத்த தான ஸ்மார்ட்போன் செயலியில் ஆயிரக்கணக்கானோர் ரத்த தானம் செய்ய பெயர் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், ரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்தி, நாடு முழுவதும் நடைப்பயண பிரசாரத்தை கிரண் வர்மா தொடங்கியுள்ளார். கடந்த ஜனவரியில், காஷ்மீர் ஸ்ரீநகரில் இருந்து பயணத்தைத் தொடங்கிய அவர், உதய்பூர், சென்னை, பெங்களூரூ வழியாக, 10 மாநிலங்களைக் கடந்து 6,000 கிலோமீட்டர் நடைப்பயணம் செய்து கொச்சி சென்றுள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பல்கலைக்கழகங்கள், பொதுஇடங்களுக்குச் சென்று ரத்த தானத்தின் அவசியம் குறித்துப் பேசுகிறார். 'இந்தப் பயணத்தால் பொதுமக்கள் மத்தியில் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுகிறது' என்று கிரண் வர்மா கூறியுள்ளார்.