PUBLISHED ON : ஏப் 23, 2018

தெலங்கானா மாநிலத்தில், 700 ஆண்டுகால மரத்துக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மெஹபூபா நகரில் உள்ளது பில்லாலமர்ரி என்ற ஆலமரம். இது 700 ஆண்டுகள் பழமையானது. பில்லாலமர்ரி என்றால், 'குழந்தைகளின் ஆலமரம்' என்று பொருள். மூன்று ஏக்கர் பரப்பளவில் கிளை பரப்பி பிரம்மாண்டமாய் பரந்து விரிந்து காணப்படும் இம்மரத்தில், ஏராளமான சிறுவர்கள் தொங்கி விளையாடுவர். சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் இங்கு வந்துசெல்வர்.
இந்நிலையில், மரத்தின் கிளைகளும் விழுதுகளும் அவ்வப்போது நொறுங்கி விழத்தொடங்கின. கரையான் பாதிப்பே இதற்குக் காரணம். இதனால், உடனடியாக அந்தப் பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், வனத்துறை அதிகாரிகள் மரத்தை ஆய்வு செய்தனர். அப்போது பல பகுதிகளிலும் கரையான் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வேர்ப்பகுதிக்கு அருகே பள்ளம் தோண்டி, கரையான் ஒழிப்பு கரைசலை ஊற்றினர். அத்துடன் கிளைகளிலும் துளையிட்டு லிட்டர் கணக்கில் மருந்தைச் செலுத்தினர். எனினும், மருந்தைச் சரியாகச் செலுத்தமுடியவில்லை. இதையடுத்து, வனத்துறை ஊழியர் ஒருவரது பரிந்துரையின் பேரில், நோயாளிகளுக்கு குளூக்கோஸ் டிரிப்ஸ் ஏற்றுவது போல், மரத்துக்குத் துளித்துளியாக பூச்சிக்கொல்லி மருந்து ஏற்றப்பட்டு வருகிறது.
நூற்றுக்கணக்கான மருந்து பாக்கெட்டுகள் மரத்தில் கட்டித் தொங்க விடப்பட்டுள்ளன. இம்முயற்சி நல்ல பலனை அளித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இன்னும் ஒரு சில மாதங்களில், பூச்சி பாதிப்பை முற்றிலும் ஒழித்து, மரத்தைக் காப்பாற்ற முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இம்மரத்தில் தொங்கி விளையாட, அப்பகுதி சிறுவர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.