sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

கஞ்சி குடிப்பதற்கிலார்

/

கஞ்சி குடிப்பதற்கிலார்

கஞ்சி குடிப்பதற்கிலார்

கஞ்சி குடிப்பதற்கிலார்


PUBLISHED ON : அக் 09, 2017

Google News

PUBLISHED ON : அக் 09, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நான் எப்போதும் காலையில் செய்தித்தாளின் தலைப்புகளை மட்டும் படித்துவிடுவேன். இரவுதான் கொஞ்சம் விரிவாகப் படிப்பேன். காலை ஆறு மணிக்கெல்லாம் பேப்பர் வந்துவிடும். நான் பல் தேய்த்துக் கொண்டிருக்கும்போது பேப்பர் வந்து விழுகிற சத்தம் கேட்கும். அப்பாவுக்கு முன்னால் நான் போய் எடுத்துவிடுவேன். யார் முதலில் எடுக்கிறார்களோ அவர்கள் முதலில் படிக்கலாம் என்பது எங்களுக்குள்ளான ஒப்பந்தம். என்னை பேப்பர் படிக்க வைக்க வேண்டுமென்பதற்காக அப்பா வேண்டுமென்றே விட்டுக் கொடுத்துவிடுகிறார் என்பது என் சந்தேகம்.

எப்படி ஆறு மணிக்கெல்லாம் பேப்பர் வந்துவிடுகிறது என்ற சந்தேகத்தை ஞாநி மாமாவிடம் கேட்டேன். “ஒரு நாள் 4 மணிக்கு எழுந்து என்னோடு வா, காட்டுகிறேன்” என்றார் மாமா. மூவரும் ஒரு நாள் அப்படி சென்றோம். எங்கள் வீடு இருக்கும் பகுதியில் இருக்கும் மெயின் ரோட்டில் கொஞ்சம் அகலமாக இருக்கும் ஒரு நடைமேடைக்கு மாமா அழைத்துச் சென்றார். அங்கே முப்பது, நாற்பது பேர் காத்திருந்தார்கள். அடுத்தடுத்து வேன், ஆட்டோ என்று வண்டிகள் வந்து வெவ்வேறு பேப்பர் பார்சல்களைப் போட்டுவிட்டுச் சென்றன. பார்சல் வந்த அடுத்த நொடி முப்பது பேரும் பரபரப்பானார்கள். வேகமாக பார்சல்கள் பிரிக்கப்பட்டன. பல பேப்பர்களின் இணைப்புகள் தனிக் கட்டாக இருந்தன. அவசர அவசரமாக அவற்றை தாய் பேப்பரோடு இணைத்தார்கள். ஒவ்வொருத்தருக்கும் எத்தனை பேப்பர் என்று கணக்கு பார்த்துப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. வாங்கின அடுத்த நொடி பலரும் சைக்கிளில் ஏறி சிட்டாகப் பறந்தார்கள்.

“ஒவ்வொருத்தருக்கும் எத்தனை தெரு என்று கணக்கு இருக்கும். எந்த வீட்டுக்கெல்லாம் போடவேண்டும் என்று அவரவருக்குத் தெரியும்.” என்ற மாமா, ''சைக்கிள் பையன்களைப் பார்த்தீர்களா? பெரும்பாலும் உங்க வயசுக்காரர்கள்தான்.” என்றார். “இது சைல்ட் லேபர் இல்லையா, மாமா?” என்றேன். “அப்படி பிளாக் அண்ட் ஒயிட்டாக எதையும் பார்க்கக்கூடாது. இவர்களெல்லாம் வசதி குறைந்த வீடுகளிலிருந்து வருபவர்கள். காலை சுமார் இரண்டு மணி நேரம் இப்படி வேலை செய்தால் கிடைக்கும் காசு அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தப் பையன்கள் எல்லாரும் அடுத்த ஒரு மணி நேரத்தில் உங்களைப் போலவே தயாராகி பள்ளிக்கூடத்துக்கோ, கல்லூரிக்கோ படிக்கப் போய்விடுவார்கள்.” என்றார் மாமா.

அடுத்து ஒன்றைச் சொன்னார். “செய்தித்தாள் என்பதே நமக்கு மேற்கத்திய நாடுகளிலிருந்து அறிமுகமான வடிவம்தான். அங்கே மாணவர்கள் படிக்கும்போதே, சின்னச் சின்ன பார்ட் டைம் வேலைகள் செய்து தங்கள் செலவுக்குத் தேவையானதை சம்பாதித்துக் கொள்ளவேண்டும் என்ற கலாசாரம் இருக்கிறது. நியூஸ்பேப்பரோடு சேர்ந்து அதுவும் இங்கே இறக்குமதியாகிவிட்டது.”

யோசித்தேன். பேப்பர் பாய்தான் ஒரு செய்தித்தாளுக்கு ரொம்ப முக்கியமான ஆள் என்று தோன்றியது. மாமாவுடன் பத்திரிகை அலுவலகத்துக்குப் போய் பார்த்திருக்கிறேன். காலையிலிருந்து செய்தி சேகரித்து, எழுதி, அதையெல்லாம் பக்கங்களாக வடிவமைத்து முடிக்கும்போது இரவாகிவிடும். நள்ளிரவு சுமார் 1 மணிக்கு மேல் அச்சிடத் தொடங்குவார்களாம். அச்சிட்டபின் பார்சல்களை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்புகிறார்கள். இந்த இடத்தில்தான் பேப்பர் பாய் வருகிறார். அவர்தான் வாசகருக்கும் பேப்பருக்கும் இடையில் இருக்கும் கடைசி கண்ணி.

“தினசரி செய்தித்தாளில் இருப்பவர்கள் எல்லாருக்கும் பேப்பர் பாயின் முக்கியத்துவம் தெரியும். பேப்பர் பாயைக் கொண்டாட ஒரு சர்வதேச தினமே இருக்கிறது, தெரியுமா?” என்றார் மாமா. அமெரிக்க செய்தித்தாட்கள் சங்கம் ஒவ்வொரு அக்டோபர் முதல் வாரத்தையும் செய்தித்தாள் வாரமாகக் கொண்டாடுகிறது. முதல் சனிக்கிழமை பேப்பர் பாய் தினம்.

இன்னொரு பேப்பர் பாய் தினமும் செப்டம்பரில் கொண்டாடப்படுகிறது என்றது வாலு. 1833ல் முதல் பேப்பர் பாயாக வேலைக்குச் சேர்ந்தவன் பத்து வயது பர்னி ஃபிளாஹெர்ட்டி. நியூயார்க் சன் என்ற பேப்பர், “வேலையற்றவர்களுக்கு நிரந்தர வேலை பெற இந்த பேப்பரை விற்று விநியோகியுங்கள்.” என்று விளம்பரம் செய்திருக்கிறது. அதற்கு முதலில் விண்ணப்பித்தவன் பர்னி.

“அப்போதெல்லாம் வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருந்திருக்குமோ?” என்றான் பாலு.

“பிரிட்டனில் தொடங்கிய தொழிற்புரட்சியில் இரண்டும் நடந்தது. ஒரு பக்கம் வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்பட்டார்கள். இன்னொரு பக்கம் புதுப் புது இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் வேலைவாய்ப்பு குறைந்தது. அந்தக் காலகட்டத்தில் அடிமை நாடாக இருந்த இந்தியா போன்ற நாடுகளின் நிலைமைதான் இன்னும் மோசம். முற்றிலும் விவசாய நாடு. ஆனால் கோடிக்கணக்கானவர்கள் அடுத்தடுத்து வந்த பஞ்சங்களில் உணவில்லாமல் செத்திருக்கிறார்கள். இந்தியாவில் எல்லா பக்கங்களிலும் கஞ்சித்தொட்டி திறக்கவேண்டி இருந்தது.” என்றார் மாமா.

கஞ்சித்தொட்டி என்பது மொத்தமாக கஞ்சி தயாரித்து வைத்து பஞ்ச அகதிகளுக்கு கொடுப்பதற்கான ஏற்பாடு. “அந்த மாதிரி நிவாரண முகாம்களைக் கூட பிரிட்டிஷ் அரசு சட்டெனத் தொடங்கவில்லை.” என்று மாமா சொன்னதும், “முதலில் ஏன் பஞ்சம் வந்தது?” என்று கேட்டேன்.

“சில சமயங்களில் மழை போதாமல் விளைச்சல் பாதிக்கப்படும். அவை பெரிய பஞ்சங்களாக இருக்கவில்லை. பிரிட்டிஷார் இங்கிருந்து அரிசி, கோதுமை உட்பட உணவுப் பொருட்களை தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்தார்கள். அங்கே தொழிற்புரட்சி நடக்கத் தேவையான பணம், உணவு எல்லாம் இங்கிருந்துதான் போயிற்று. இங்கே சாப்பிட உணவில்லாமல் மக்கள் செத்தபோதும், உணவு ஏற்றுமதியை நிறுத்தவே இல்லை. இங்குள்ள அதிகாரிகள் பஞ்சம் பற்றி லண்டனுக்கு தகவல் அனுப்பியபோது பிரிட்டிஷ் தலைவர் வின்ஸ்டன் சர்ச்சில் என்ன சொன்னார் தெரியுமா?” என்றார் மாமா.

ஏதோ பயங்கரமாக சொல்லியிருக்க வேண்டும். என்ன? “முயல்களைப் போல ஒரேயடியாக இனப்பெருக்கம் செய்துகொண்டிருக்கும் இந்தியர்கள் செத்து ஒழியட்டும். அவ்வளவு பேர் சாகிறார்கள். அந்த காந்தி ஏன் இன்னும் சாகவில்லை? என்றார் சர்ச்சில்” என்று மாமா சொன்னதும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு நாட்டில் கொண்டாடப்படும் தலைவர் இன்னொரு நாட்டிற்கு விரோதியாகவே இருக்கலாம் என்பது புரிந்தது.

“பெரியவன் ஆனபிறகு நான் செய்ய விரும்பாதது கஞ்சித்தொட்டி திறப்பதுதான். பேப்பர் போடலாமா என்று யோசிக்கிறேன்.” என்றான் பாலு. “சுதந்திரத்துக்குப் பின்னர் பெரும் பஞ்சம் ஏற்படவே இல்லை என்பதுதான் நம்முடைய விவசாய சாதனை.” என்றது வாலு.

பாரதியார் ஏன் உணவைப் பற்றி அவ்வளவு தீவிரமாகச் சொல்லியிருக்கிறார் என்று உணர்ந்து கொண்டேன்.

“கஞ்சி குடிப்பதற்கிலார். அதன் காரணம் இவை என்னும் அறிவும் இலார்.”, “தனியொருவனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை அழித்திடுவோம்.”, “வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்.”

எல்லாம் எவ்வளவு ஆழமான வரிகள்…

இதை நான் சொன்னதும், எல்லாரும் பாரதியில் ஆழ்ந்துவிட்டோம்.

வாலுபீடியா

உலக கஞ்சி தினம்: அக்டோபர் 10

உலக பேப்பர் பாய் தினம்: அக்டோபர் 11

உலக உணவு தினம்: அக்டோபர் 16






      Dinamalar
      Follow us