
திப்பிலி
ஆங்கிலப் பெயர்: 'லாங் பெப்பர்' (Long Pepper)
தாவரவியல் பெயர்: 'பைப்பர் லாங்கம்' (Piper Longum)
தாவரக் குடும்பம்: 'பைப்பராசியே' (Piperaceae)
வகைகள்: ஆனைத் திப்பிலி, அரிசித் திப்பிலி.
வேறு பெயர்கள்: உண்சரம், உலவை நாசி, சாமன், குடாரி, கோலகம், கோலி, கோழையறுக்கா, சரம்சாடி, துளவி, மாகதி, கணை, செண்டி, சூண்டுகி, கணம், கலினி, பாணம், பிப்பிலி, வைதேகி, அம்பு, ஆதிமருந்து
மருந்துப் பயிர்களில் மிகவும் அதிக அளவில் இந்திய மருத்துவ முறையில் பயன்படுத்தப்படுவது திப்பிலி. மிளகு, வெற்றிலை வகையைச் சார்ந்தது. கொடி வகையைச் சார்ந்த இது ஒரு நீண்ட காலப் பயிர். சிறு மரமாகவும் வளரும்.
அதிக ஈரப்பதம் உள்ள மலைச்சரிவுப் பிரதேசங்களில் வளரும். நிறைய கிளைகளுடன் அதிக உயரம் வளராமல் மூன்று அடி அகலம் வரை வளரும். செடிகள் உறுதியான வேரைக் கொண்டிருக்கும். இலை 5 முதல் 9 செ.மீ. நீளம், 3 முதல் 5 செ.மீ. அகலம் உடையது.
பூக்கள் மிகவும் சிறியதாக 2 முதல் 5 செ.மீ. அகலத்துடன் நெருக்கமாக இருக்கும். காய்கள் காரத்தன்மையும் வாசனையும் உடையவை. கரு மிளகைக் காட்டிலும் திப்பிலிக் காய்கள் காரம் வாய்ந்தவை. ஓரிரு கணுக்கள் உடைய தண்டுகள் மூலம் இது பயிர்ப்பெருக்கம் செய்யப்படுகிறது. கணுக்கள் எளிதாக வேர்ப்பிடிக்கும் தன்மை உடையவை. கொடிகளின் நுனி மற்றும் நடுப்பாகத்திலிருந்து ஓரிரு கணுக்களை உடைய தண்டுகளைப் பதித்தால், 60 நாட்களில் வேர்கள் முழுவதும் பிடித்துவிடும்.
திப்பிலிக் காய் உணவுப் பொருளாகவும், சித்த மருந்துகள் தயாரிக்கவும், வாசனைப் பொருளாகவும் பயன்படுகிறது. உலர்ந்த திப்பிலியில் இருந்து நீராவி வடிப்பு மூலமாக எண்ணெய் எடுக்கப்படுகிறது. காசநோய்க் கிருமிகளை எதிர்க்கும் தன்மை இதற்கு உண்டு.
திப்பிலி, சுக்கு, மிளகு மூன்றும் கலந்து, 'திரிகடுகம்' என்ற பெயரில் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் காய்களில் 'பைப்பரின்' (Piperine), 'லாங்குமின்' (Longumin) போன்ற மருத்துவ குணமுடைய வேதிப்பொருட்கள் உள்ளன.
இந்தியாவில் அசாம், கேரளம், தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, கிழக்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகளான சேர்வராயன், கொல்லிமலை, கல்ராயன் மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது.
நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், ஜாவா போன்ற நாடுகளிலும் பயிர் செய்யப்படுகிறது.
- கி.சாந்தா

