மலர்களே மலர்களே (18) - நீருக்கடியில் மலரும் பூக்கள்
மலர்களே மலர்களே (18) - நீருக்கடியில் மலரும் பூக்கள்
PUBLISHED ON : அக் 09, 2017

'என்ஹாலஸ்' (Enhalus) என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலைப்பாசி பாசியல்ல; அதுவும் பூக்கும் தாவரம் ஆகும். கடல் பகுதியில் வளரும். இந்தத் தாவரத்தின் இலைகள் 1.5 செ.மீ. அகலமும் சுமார் 50 முதல் 170 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரும். இந்தத் தாவரம் கடலரிப்பைத் தடுக்கும் அரணாக விளங்குகிறது. இதன் பூ மலர்வதும் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதும் கடல் ஏற்ற இறக்கத் தாளத்துடன் இணைந்துள்ளது. கடல் இறக்க நிலையில், கடல் நீர் வற்றிப் போகும் சமயத்தில், இதன் ஆண் பூக்கள் தாவரத்திலிருந்து விடுபட்டு நீரின் மீது மிதக்கின்றன. இந்தச் சமயத்தில் இவை கடல் மட்டத்துக்கு மேலே உள்ள பெண் பூவை நெருங்க முடியாது. ஆனால், மறுபடி கடல் ஏற்ற நிகழ்வு ஏற்பட்டு கடல் நீர் மட்டம் உயரும்போது, இந்த ஆண் பூக்களும் நீரின் மேலே உயர்கின்றன. அங்கே பெண் பூவில் மோதி மகரந்தச் சேர்க்கை ஏற்படுகிறது.
'ஹைட்ரில்லா வெர்ட்டிசில்லாரா' (Hydrilla Verticillara) என்னும் நீர்த் தாவரம் இதற்கு எல்லாம் ஒருபடி முன்னே செல்கிறது. பூவைத் தூவி அன்பைக் காட்டுவதுபோல, ஹைட்ரில்லா தனது மகரந்தத்தை மழைபோலத் தூவி பெண் பூவைக் கவர்கிறது.
இதன் பூவை நீருக்கடியில் தாவரம் உமிழும். ஆண் பூ மெல்ல மெல்ல நீருக்கு மேலே வந்து மிதக்கும். நீருக்கு மேலே வந்ததும் வெடித்து மகரந்தங்களை அங்கும் இங்கும் வீசும். அந்தப் பகுதி முழுவதும் மகரந்தம் மழைபோல விழும். அவ்வாறு விழும் மகரந்தத்தில் சில, மிதக்கும் பெண் பூவின் சூல்முடியில் பட்டு அந்தப் பூ கருவுறும்.
கடல் இறக்க சமயத்தில் அருகம்புல் பாசியின் (Halodule Pinifolia - ஹாலோடூல் பினிஃபோலியா) மகரந்தக் கம்பி விறைப்பாக நேராக நின்று நீர்மட்டத்தின் மேலே வரும். அந்தச் சமயத்தில் நீரின் மீது மகரந்தப் பை உடைந்து மகரந்தத் துகள் வெளிப்படும். நூலிழை போன்ற இழையுருவான மகரந்தம் நீரில் மிதந்து ஒன்றுடன் ஒன்று பிணைந்து ஒன்று திரளும். கடலேற்ற நிகழ்வின்போது நீரின் மட்டம் உயரும். அத்துடன் இந்த மகரந்தத் திரளும் உயரும். நீரின் மீது தலைதூக்கி மிதக்கும் பெண் பூவின் சூல்முடியில் இந்த மகரந்தத் துகள்கள் சிக்கிக்கொண்டு மகரந்தச் சேர்க்கை ஏற்படும்.

