தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/கனவு - வழிநடத்தும் வார்த்தை! (1)

கனவு - வழிநடத்தும் வார்த்தை! (1)

கனவு - வழிநடத்தும் வார்த்தை! (1)


PUBLISHED ON : ஜூன் 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“புது வகுப்பு எப்படி இருக்கு கதிர்?”

உமா மிஸ் பள்ளிக்கூட இடைவேளையில் கேட்டார். அவர் வகுப்பறையின் வாசலில் நின்றுகொண்டிருந்தார். பள்ளி தொடங்கி, கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது. உமா மிஸ்ஸிடம் அதிகம் பேசமுடியவில்லை. உடனே நின்றுகொண்டேன்.

“ரொம்ப நல்லா இருக்கு மிஸ். ரெண்டு, மூணு புது பசங்க வந்திருக்காங்க. எங்க கிளாஸையே ரீஷஃபிள் பண்ணிட்டாங்க. இதுவரை பேசாத பல பசங்ககூட பேச ஆரம்பிச்சிருக்கேன்.”

“ரொம்ப நல்லது. இந்த வருஷம் என்ன கத்துக்கப் போறே?”

எனக்கு ஒரு நிமிடம் குழப்பமானது. ஓவியாவும் என் அருகே வந்து நின்றாள்.

“கிளாஸ்ல என்ன சொல்லிக் கொடுக்கறாங்களோ, அதைக் கத்துப்போம், மிஸ்” என்றாள் ஓவியா. வேறு எதையோ மனத்தில் வைத்துக்கொண்டு உமா மிஸ் இதைக் கேட்டார் என்றுதான் எனக்குத் தோன்றியது. ஓவியா சொன்ன பதில் அதற்குப் பொருத்தமில்லை.

“அதை நிச்சயம் கத்துக்கப் போறீங்க. ஆனால், நீங்களா என்ன கத்துக்கப் போறீங்க?”

உமா மிஸ் மீண்டும் அழுத்தமாகக் கேட்டபோது, ஓவியாவுக்கு அதன் அர்த்தம் புரிந்தது.

“என்ன கத்துக்கணும் மிஸ்?” நான் தான் ஆரம்பித்தேன்.

“உங்களுக்குன்னு ஓர் உலகம் இருக்கு கதிர். அதுல உங்களுக்குன்னு சில விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் உருவாகியிருக்கும். உனக்கு கிட்டார் வாசிக்க ஆசையாக இருக்கலாம். ரன்னிங் ரேஸ் ஓடணும்னு எண்ணமிருக்கலாம். அல்லது சின்னதா ஒரு மாடித் தோட்டம் போட்டு, செடிகளை வளர்க்கணும்னு நினைக்கலாம். அல்லது யாருமே கத்துக்காத ஒரு மொழியைக் கத்துக்கணும்னு யோசிக்கலாம். இதெல்லாமே சாத்தியம் தான். படிப்பு, மேலும் மேலும் படிப்புனு அத்தனை நேரத்தையும் செலவழிச்சாலும், உனக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை வெச்சுக்கணும். ஆசைய வெச்சுக்கணும். கனவை வெச்சுக்கணும். யார் கண்டா, ஒருவேளை அந்தக் கனவு உன் பாதையையே மாத்திடலாம்,

பாலோ நெஸ்போலிக்கு நடந்தா மாதிரி...”

“யார் மிஸ் பாலோ நெஸ்போலி?” ஓவியா கேட்டாள்.

“இத்தாலியச் சேர்ந்த விண்வெளி வீரர். அவர சின்ன வயசுலேருந்து ஒரே ஒரு கனவுதான் துரத்திக்கிட்டே இருந்துச்சு. விண்வெளி வீரர் ஆகணுங்கறதுதான் அவர் கனவு. முதன்முதலா, நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவுல கால் வெச்ச புகைப்படங்கள் வெளிவந்தபோது ஏற்பட்ட கனவு அது. அப்போ, நெஸ்போலிக்கு 12 வயசு. அது மாதிரி தானும் விண்வெளியில் போய் இறங்கணும்னு நினைச்சார். ஆனால், காலம் இடம் கொடுக்கல.”

“அப்புறம்?”

“பொறியியல் படிக்கப் போனார். அங்கேயும் சரியா படிக்க முடியலை. இதெல்லாம் விட்டுட்டு, நேரா இராணுவத்துல போய்ச் சேர்ந்தார். 26 வயசுல பெய்ரூத்ங்கற நகரத்துல அமைதிப் படையில் வேலை பார்த்துக்கிட்டு இருந்தார். அப்போது, புகழ்பெற்ற இத்தாலிய பத்திரிகையாளர் ஒரியானா பாலசி என்பவருக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார். அப்போது பெய்ரூத்லேருந்து வெளியேற வேண்டியாதாப் போச்சு. அவங்க கண்ணுமுன்னாலேயே, போர்த் தாக்குதல்கள்ல பெய்ரூத் காணாமல் போச்சு. அப்போதான், ஒரியானா பாலசி, “உங்க வாழ்க்கையில நீங்க என்ன செய்ய விரும்புறீங்க?”ன்னு கேட்டாங்க.

நெஸ்போலிக்குப் பதில் சொல்ல முடியல. குழப்பம். ஆனால், ஒரியானா மட்டுமே தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருந்தாங்க. அப்போ வேற வழியில்லாம, “விண்வெளி வீரர் ஆகணுங்கறதுதான் என் வாழ்க்கையோட கனவு, ஆனால் அது இப்போ நடக்காது?” “ஏன் நடக்காதுன்னு சொல்லுங்க?” தனக்கு வயசாகிப் போச்சு, மேலும் ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு சிலரே விண்வெளி வீரர்களாக இருக்காங்கன்னு பதில் சொல்லியிருக்கார் நெஸ்போலி.

அந்தம்மா அந்தப் பதிலை ஒத்துக்கவே இல்லை. அவர் யோசிக்கற விதமே தப்புன்னு சொல்லிக் கொடுத்தாங்க. அவ்வளவுதான். நெஸ்போலி, தன் வேலையை ராஜினாமா செஞ்சார். எல்லோர்கிட்டேயும் நான் ஒரு விண்வெளி வீரர் ஆகப் போறேன்னு சொன்னார். அவங்க எல்லாம் ஆச்சரியமா பார்த்தாங்க.

மனுஷன் கவலைப் படலை. அமெரிக்கா போய் ஏரோஸ்பேஸ் இஞ்ஜினீயரிங் படிச்சார், ஆங்கிலம் கத்துக்கிட்டார். ரெண்டு முறை விண்வெளி வீரர் ஆகறதுக்கான தேர்வுக்கு அப்ளை செஞ்சார். கடைசிவரைக்கும் வந்த பிறகு, தோல்வி. மூன்றாவது முறை தேர்வு நடந்தபோது, 1998இல் தேர்வானார். அப்புறம், பத்தாண்டுகள் பயிற்சி.

கடைசியாக, 2007இல் அவர் விண்வெளி ஆய்வு மையத்துக்குப் போய் இறங்கினார். அப்போ அவருக்கு வயசு என்ன தெரியுமா?”

“என்ன மிஸ்?”

“ஐம்பது.”

நான் ஆச்சரியப்பட்டுப் போனேன்.

“அதுதான் கனவுங்கறது. கனவுக்குப் பலம் அதிகம். அது விடாம துரத்தும். தூங்க விடாது. எந்நேரமும், எந்த வேலை செஞ்சாலும் அது மனசின் அடியாழத்துல இருந்து இயக்கிக்கிட்டே இருக்கும்.”

நானும் ஓவியாவும் உமா மிஸ்ஸையே பார்த்துக்கொண்டு இருந்தோம். உண்மைதான். உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஓடிக்கொண்டே இருந்தன.

“உங்களை வழிநடத்தக்கூடிய, உங்களுடைய வாழ்க்கைக்கே அர்த்தம் தரக்கூடிய ஒரு சொல், 'கனவு'தான். அது என்னன்னு முடிவு செய்யுங்க. மத்ததெல்லாம் தானா தொடர்ந்து நடக்கும்.”

(தொடரும்)

ஆர். வெங்கடேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us