PUBLISHED ON : மே 09, 2016

பேரைக் கேட்டதும் நடுக்கம் தரக்கூடிய அணுகுண்டுகளை ஏன் வெடிக்க வைத்துச் சோதிக்க வேண்டும்? ஒவ்வொரு நாடும் தங்களுடைய அறிவியல் மற்றும் ராணுவ வலிமையை உலகிற்குக் காட்டவே இதுபோன்ற சோதனைகளை நடத்துகின்றன. அணுகுண்டு சோதனைகள் (Nuclear weapons tests) என்பது அணு ஆயுதங்களின் திறனைத் தீர்மானிக்க நிகழ்த்தப்படுகின்றன.
இந்தியாவிலும் அணுகுண்டு சோதனைகள் நடந்திருக்கின்றன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டத்தில் பொக்ரான் எனும் இடத்தில் நடந்த சோதனைகள்தான் அவை. அப்போது இந்தியாவை உலக நாடுகள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தன.
பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு 1974 மே 18ல் பொக்ரானில் 'அமைதியான அணுக்கரு வெடிப்பு' என்று பெயரிட்டு முதல் சோதனையை நடத்தியது. புத்தர் பிறந்த தினமான 'புத்த பூர்ணிமா' அன்று நடத்தப்பட்டதால் இந்த நிகழ்வு 'சிரிக்கும் புத்தர்' எனவும் அழைக்கப்பட்டது.
அதன்பிறகு, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மே 11, 1998ல் மீண்டும் ஒரு சோதனை நடத்த இந்திய அரசு தயாரானது. பொக்ரானில் 45 கிலோ டன் ஹைட்ரஜன் குண்டை இந்தியா சோதனை செய்தது. அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களின் கழுகுக் கண்களில் படாத வகையில் இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) ஏற்பாடுகளை மேற்கொண்டது. அப்போது அந்த நிறுவனத்தின் பொது இயக்குநராக விஞ்ஞானி அப்துல் கலாம் இருந்தார். அமெரிக்காவின் கண்காணிப்பு செயற்கைக் கோள்கள் பொக்ரான் பகுதியிலிருந்து வேறு திசைக்குத் திரும்பியிருந்த கால இடைவெளியில் சோதனையை வெற்றிகரமாக முடித்த இந்தியா உலக அரங்கில் தனது திறமையை நிலை நாட்டியது.
* மே 11, 1998 அன்று சோதனை நடத்திய நாளை நினைவுகொள்ளும் விதமாக, இந்த நாளை தேசியத் தொழில்நுட்ப நாளாக (National Technology Day) இந்தியா கொண்டாடி வருகிறது.
* இந்தியாவுக்குப் போட்டியாக பாகிஸ்தானும் 1998 மே 28ல் 'சாகாய்' எனும் இடத்தில் அணுகுண்டு சோதனை நடத்தியது.
