PUBLISHED ON : ஏப் 18, 2016

சைக்கிள்களை பார்ப்பதே இப்போது அரிதாகிவிட்டது. கார், பைக் போன்ற வாகனங்கள் வருவதற்கு முன், சைக்கிள்களின் பயன்பாடுதான் அதிகம். சைக்கிள் இருந்தால் அதனுடன் டைனமோவும் இருக்கும்!
அது என்ன டைனமோ?
இயந்திர ஆற்றலின் மூலமாக நேரடியாக மின் ஆற்றலை உருவாக்கும் கருவி டைனமோ. சைக்கிள் சக்கரம் சுழலும்போது அதனுடன் சேர்ந்து சுழலும் வகையில் டைனமோ பொருத்தப்பட்டு இருக்கும். அந்த உராய்வினால் உருவாகும் இயந்திர ஆற்றல், மின்னாற்றலாக மாறி, விளக்கின் மின் இழையை அடையும். அந்த மின் இழை, மின்னாற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றி விளக்கை எரியச் செய்யும்.
மின்காந்த முறையில் சைக்கிள் டைனமோ இயங்குகிறது. ஒரு காந்தம், அதைச் சுற்றிக் கொஞ்சம் கம்பி. அந்தக் காந்தம் சுழலச் சுழல அதிலிருந்து கிடைக்கும் மின்சக்தி! மின்காந்த அலைகள் மற்ற இயக்க அலைகளைவிடச் சற்று வித்தியாசமானது. மின்காந்த அலைகளில் மின் மற்றும் காந்தம் என ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு சக்திகள் இருக்கின்றன. மின்கம்பியில் மின்சாரம் பாயும்போது, அதைச் சுற்றி காந்தப் புலம் தோன்றும். அதே போல, காந்தப் புலத்தினுள் மின்கடத்தியை அசைப்பதன் மூலம் மின்சக்தியை உருவாக்க முடியும்.
* மின்சக்திக்கும், காந்த சக்திக்கும் இருக்கும் தொடர்பை, பயனுள்ள முறையில் அறிந்து பயன்படுத்தியவர் மைக்கல் ஃபாரடே. டைனமோ, மின் மோட்டார் போன்ற பல கண்டுபிடிப்புகளுக்கும் காரணமாக இருந்தவர்!
* ஃபாரடேவின் கொள்கைகளை அடிப்படையாக வைத்து ஹிப்போலைட் பிக்ஸி (Hippolyte Pixii) என்பவர், 1832ல் முதல் டைனமோவை வடிவமைத்தார்.
