தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஞாநி எழுதும் மாலுவின் டைரி (14) - ஹிட்லர் சர்வாதிகாரி ஆனது ஏன்?

ஞாநி எழுதும் மாலுவின் டைரி (14) - ஹிட்லர் சர்வாதிகாரி ஆனது ஏன்?

ஞாநி எழுதும் மாலுவின் டைரி (14) - ஹிட்லர் சர்வாதிகாரி ஆனது ஏன்?


PUBLISHED ON : ஏப் 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரண்டு கைகளிலும் நிறைய சின்னதும் பெரியதுமாகப் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு வந்தார் ஞாநி மாமா. “இந்த வருடம் உலகப் புத்தக தினத்துக்கு எந்த புத்தகத்திலிருந்து வாசித்துக் காட்டட்டும்?” என்று கேட்டார். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23 புத்தக தினத்தன்று எங்களையெல்லாம் கூட்டமாக உட்காரவைத்துக் கொண்டு ஏதாவது புத்தகத்திலிருந்து படித்துக் காட்டுவது அவர் வழக்கம். உலகத்தில் பல நாடுகளில் ஜனாதிபதிகள் முதல் பல அரசியல் தலைவர்கள் வரை அன்றைக்கு பள்ளிக் கூடத்துக்குப் போய் புத்தகம் படித்துக் காட்டும் வழக்கம் இருக்கிறதாம்.

“அந்த ஒரு நாள் படிக்காமல் இருக்கலாமே. புத்தகங்களை அன்றைக்கு பத்திரமாக தூசி தட்டி வைத்து பூஜை செய்யலாமே” என்று அலுத்துக் கொண்டான் பாலு. “நாம் சரஸ்வதி பூஜையை அப்படித்தானே கொண்டாடுகிறோம். வெளிநாட்டுக்காரங்க மட்டும் ஏன் புத்தக தினத்தை வேறு மாதிரி கொண்டாடுகிறார்கள் ?” என்று கேட்டான்.

“நாம் அப்படிக் கொண்டாடுவதும் தவறு என்று பாரதியார் சொல்லியிருக்கிறார் தெரியுமா?” என்று மாமா கேட்டார்.பாரதியா? 'வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்” பாட்டு எழுதின பாரதியா?

“அதே பாரதிதான். அதே பாட்டில்தான் கல்விக் கடவுள் சரஸ்வதியை எப்படியெல்லாம் கும்பிடக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறார். கல்விக் கடவுளை தொழுவது ஒன்றும் அவ்வளவு எளிமையான விஷயம் இல்லை. மந்திரத்தை முணுமுணு த்து புத்தகத்தை வரிசையா அடுக்கி வைத்து அதன் மேல் சந்தனம் தடவி, பூப் போடுவது இவளுக்கான பூஜை அல்லவே அல்ல. ஒவ்வொரு வீட்டிலும் கலைகள் இருக்க வேண்டும், ஒவ்வொரு தெருவிலும் இரண்டு பள்ளிக் கூடமாவது இருக்க வேண்டும். நாட்டில் இருக்கும் எல்லா ஊர்களிலும் பள்ளிக்கூடங்கள் தேவை. பள்ளிக்கூடம் இல்லாத ஊரை நெருப்பு வைத்து எரித்திடவேண்டும். கோவில் கட்டுவது, அன்னதானம் செய்வது இதயெல்லாம் விட முக்கியம் ஓர் ஏழைக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பதுதான் என்று இந்தப் பாட்டில் பாரதி தெளிவாக சொல்லியிருக்கிறார்” என்றார் மாமா.

எனக்கு இன்னொரு சந்தேகம். இங்கே அறிவுக்குக் கடவுள் சரஸ்வதி என்று வைத்துக் கொண்ட மாதிரி வெளிநாட்டில் ஏதாவது கடவுள் வைத்திருக்கிறார்களா?

“எல்லா பண்பாடுகளிலும் அப்படி ஒரு கடவுள் உண்டு. கிரேக்கத்தில் அப்போலோ. சீனத்தில் வென் சாங் வாங். ஜப்பானில் ஃபுக்கரோகுஜு, எகிப்தில் தோத், மெசபொடேமியாவில் நபட்டேய்ன், ரோமில் மினர்வா” என்று ஒரு பட்டியலையே எடுத்து வாலு வாசித்தது. “ஒரு கடவுள் ஒரு தேவதை அல்ல. ஒவ்வொருத்தரும் பலப்பல கடவுள் தேவதைகளை அறிவுக்கு அடையாளமாக வைத்திருக்கிறார்கள்” என்றார் மாமா.

“அப்படியானால் உலகப் புத்தக தினம் எந்தக் கடவுளுடைய பண்டிகை?”என்று கேட்டான் பாலு. “எந்தக் கடவுளை வைத்தும் இந்த தினம் குறிக்கப்படவில்லை. கடவுளை நம்புகிறவர்கள், நம்பாதவர்கள் எல்லாருக்காகவும் பொதுவாக செயல்படுகிற அமைப்பான ஐ.நா சபையின் யுனெஸ்கோதான் ஏப்ரல் 23ஐ உலகப் புத்தக தினமாக அறிவித்தது. அது இரண்டு எழுத்தாளர்களின் மறைவு தினம். ஒருவர் ஷேக்ஸ்பியர். இன்னொருவர் ஸ்பானிஷ் மொழி எழுத்தாளர் செர்வாண்ட்டெஸ்” என்றார் மாமா.

ஷேக்ஸ்பியரைப் பற்றி நிறைய படித்திருக்கிறேன். நாடக ஆசிரியர். மேக்பெத், ஒதெல்லோ, ஹாம்லெட், ரோமியோ ஜூலியட் என்று அவருடைய நிறைய கதைகளைப் பற்றி மாமா சொல்லியிருக்கிறார். செர்வாண்ட்டெஸ் யார்?

“நானூறு வருடங்களுக்கு முன்னால் அவர் எழுதிய டாண் கியோட்டே (Don Quixote) என்ற நாவல் 50 மொழிகளில் வெளிவந்திருக்கிறது. தமிழில்கூட வந்திருக்கிறது.மொத்தம் 50 கோடி பிரதிகள் இதுவரை விற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். இதைத்தான் உலகத்தில் முதல் நவீன நாவல் என்றுகூட விமர்சகர்கள் கருதுகிறார்கள்” என்றார் மாமா.

“அப்படி என்ன அப்பாடக்கர் கதை அது?” என்று கேட்டான் பாலு.

“டாண் கியோட்டே தன்னை ஒரு சாகசக்காரனாக நினைத்துக் கொண்டிருப்பவன். பொது மக்களையும் ஆதரவற்றவர்களையும் பெண்களையும் காப்பாற்றத் தன்னால்தான் முடியும் என்று தானே நம்பிக் கொண்டிருப்பவன். அவன் நடத்தும் அசட்டு யுத்தங்கள் பற்றித்தான் நாவல்” என்றார் மாமா.

“நிறைய யுத்தங்கள் அப்படி நம்பித்தானே மாமா நடக்கிறது?” என்று மாமாவைக் கேட்டேன்.

“ஆமாம். தன் இனம்தான் உலகத்திலேயே சிறந்த இனம். உலகத்தையே ஆளப் பிறந்த இனம் என்று அசட்டுத்தனமாக நம்பிக்கொண்டு யுத்தம் நடத்தி, பேரழிவை உண்டாக்கிய ஹிட்லர் இறந்த தினம்கூட புத்தக தினத்துக்கு சரியாக ஒரு வாரம் கழித்துதான் வருகிறது” என்றார் மாமா.

“ஹிட்லர் என்றால் எனக்கு நீங்கள் காட்டிய சார்லி சாப்ளின் படம்தான் நினைவுக்கு வரும். ஹிட்லரைக் கிண்டல் செய்து சாப்ளின் நடித்திருப்பாரே அந்தப் படம்! தி கிரேட் டிக்ட்டேட்டர்” என்றான் பாலு. உடனே மாமா, “ஹிட்லர் கூட சாப்ளின் மாதிரி ஒரு கலைஞராக வந்திருக்கவேண்டிய ஆள்தான். ஓவியராக வேண்டுமென்பதுதான் ஹிட்லரின் சின்ன வயது விருப்பம். ஆனால் அதற்கான நுழைவுத் தேர்வை இரண்டு முறை எழுதியும் ஃபெயிலாகிவிட்டதால் ஓவியப் பள்ளியில் சேரமுடியவில்லை. 'உன் படத்தில் மனிதர்களையே அதிகம் வரையவில்லையே. அதிகமாக கட்டடங்களைத்தானே வரிந்திருக்கிறாய். நீ ஆர்க்கிடெக்சர் படிப்பில் சேரு' என்று சொன்னார்களாம். ஆனால் பள்ளிப் படிப்பை முடிக்காததால் ஹிட்லருக்கு அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை. அரசியலுக்குப் போய் சர்வாதிகாரியாகிவிட்டார்” என்றார் மாமா.

ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் இப்போது எங்கே இருக்கின்றன?

“பெரும்பாலானவை அமெரிக்க ராணுவத்தின் கிடங்கில் இருக்கின்றன. ஒரு சில மட்டும்தான் எப்போதாவது பொருட்காட்சியில் வைக்கப்பட்டன. ஹிட்லர் ராணுவத்தில் சேருவதற்கு முன்பு வரை சின்னச் சின்ன ஓவியங்களை அஞ்சலட்டையில் வரைந்து விற்று சம்பாதித்துத்தான் வாழ்க்கை நடத்தியிருக்கிறார். முதல் உலக யுத்தத்தின்போது அவர் இன்னொரு அதிகாரியிடம் சொல்லியிருக்கிறார். நான் அரசியல்வாதி இல்லை. நான் ஓர் ஓவியன். யுத்தம் முடிந்ததும் திரும்ப ஓவியனாகிவிடுவேன் என்று. அது நடக்கவே இல்லை” என்றார் மாமா.

“ஓவியப் பள்ளியிலும் ஆல் பாஸ் சிஸ்டம் இருந்திருந்தால் உலகத்துக்கு இந்தப் பிரச்னையே வந்திருக்காது” என்றான் பாலு. எல்லாரும் சிரித்தோம்.

இந்த வருட உலகப் புத்தக தினத்துக்கு டாண் கியோட்டே, ஹிட்லரின் மெயின் கேம்ப் இரண்டு புத்தகங்களிலிருந்தும் மாமா படித்துக் காட்டினார்.

வாலுபீடியா 1: ஹிட்லர் வரைந்த ஓவியங்களில் மிகச் சில சில தனியாரிடம் உள்ளன. அவை இப்போது ஒரு படத்துக்கு 50 ஆயிரம் டாலர் (சுமார் 30 லட்சம் ரூபாய்) விலைக்கு ஏலத்தில் விற்கப் படுகின்றன.

வாலுபீடியா 2: எழுத்தாளர் செர்வாண்டெஸ் ராணுவ வீரராக இருந்தபோது போரில் அவரை எதிரிகள் கைதியாக பிடித்துப் போய் ஐந்து வருடங்கள் வைத்திருந்தார்கள். பிறகு பிணைத் தொகை கட்டி அவரை விடுவிக்க வேண்டியதாயிற்று. பின்னர் செர்வாண்டெஸ் அரசாங்க வரி வசூலிக்கும் வேலையில் இருந்தார்.திரட்டிய வரியை அவர் போட்டு வைத்த வங்கி திவாலாகிவிட்டது. இதற்காக அவரை சில மாதம் சிறையில் போட்டார்கள். 50 கோடி பிரதி விற்றிருக்கும் நாவலை எழுதிய செர்வாண்டெசுக்கு பெரிய சன்மானம் எதுவும் கிடைக்கவில்லை. காரணம் அந்த காலத்தில் எழுத்தாளருக்கு புத்தகம் விற்றால் ராயல்டி தரவேண்டும் என்ற வழக்கம் இல்லை. செர்வாண்டெஸ் நினைவு தினம் இப்போது உலகப் புத்தகக் காப்புரிமை தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us