தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஈ, தா, கொடு - மூன்றுக்கும் என்ன வேறுபாடு?

ஈ, தா, கொடு - மூன்றுக்கும் என்ன வேறுபாடு?

ஈ, தா, கொடு - மூன்றுக்கும் என்ன வேறுபாடு?


PUBLISHED ON : நவ 25, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

இலக்கண நூல்கள் என்றாலே மொழியைப் பற்றிக் கடுமையாகக் கூறுபவை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். பிற நூல்களைப்போல அவற்றில் சுவையான செய்திகள் இல்லை என்றே நம்புகிறோம். ஆனால், மிகவும் களிநயமான பல செய்திகளும் நம் இலக்கண நூல்களில் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றின் வழியாக மொழியையும் அறிகிறோம். சுவையையும் பெறுகிறோம்.

எடுத்துக்காட்டாக, நன்னூலின் இந்த வாய்பாட்டினைப் பாருங்கள்.

'ஈதா கொடுவெனு மூன்று முறையே

இழிந்தோ னொப்போன் மிக்கோ னிரப்புரை'

இதன் பொருள் என்ன? 'ஈ, தா, கொடு என்னும் மூன்றும் முறையே இழிந்தோன், ஒப்போன், மிக்கோன் இரப்புரை' என்பது பொருள்.

ஈதல், ஈகை ஆகியவை பற்றித் தெரியும். தாழ்ந்தவர்கள் தம்மினும் உயர்ந்தவர்களிடம் கையேந்திக் கேட்டுப் பெறுவது ஈகை.

இழிந்த நிலையில் உள்ளவர்கள், தம்மினும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் ஒன்றைக் கேட்பதற்கு ஈ, ஈக, ஈவாயாக என்று கேட்க வேண்டும். ஓர் இரவலன் செல்வர்களிடம் ஈ என்று கேட்க வேண்டும்.

இருவரும் ஒரே நிலை என்றபோதும், இருப்பவர்களிடம் ஒன்றைக் கேட்டுப் பெறுவதும் உண்டு. இருவரும் ஒப்பான நிலையில் இருப்பவர்கள். அத்தகையோர் ஒன்றைக் கேட்டுப் பெற. 'தா, தருவாயாக' என்று கேட்க வேண்டும். இரண்டு வணிகர்கள் தமக்குள் கேட்டுப் பெறுகையில் 'தா' என்று கேட்கலாம்.

தாழ்ந்தோரிடத்தில் இருப்பதை உயர்ந்தோர் கேட்டுப் பெறுவதும் உண்டு. அரசர்கள் குடிகளிடம் வரிளைக் கேட்டுப் பெறுவார்கள். உயர்ந்தநிலையிலுள்ள அரசர், தம்மினும் பல வகைகளிலும் வலிமை குன்றியோரிடம் 'ஈ, தா' என கேட்பதில்லை. 'கொடு' என்று உரிமையாகக் கேட்கலாம்.

நம் மரபின்படி, இவற்றையே ஒவ்வொருவருக்குமான முறையான இரப்புச் சொற்கள் என்று நன்னூல் கூறுகிறது.

மகன் தந்தையிடம் “அப்பா எனக்குக் காசு ஈவீராக” என்று கேட்க வேண்டும்.

மாணாக்கன் தன் தோழனிடம் “நண்பா, எனக்கு எழுதுகோல் தா” என்று கேட்கலாம்.

ஆசிரியர் மாணாக்கரிடம், “வீட்டுப்பாடம் எழுதிய குறிப்பேட்டைக் கொடு” என்று கேட்பார்.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us