PUBLISHED ON : நவ 25, 2019

வேலூர் சிறை. அங்கு தமிழ்ப்பாடம் நடந்து கொண்டிருந்தது.
சிறையில் ஏது தமிழ்ப்பாடம்?
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை, வெள்ளையர்கள் அந்தச் சிறையில் அடைத்திருந் தார்கள். அவர்களில் சிலர் மிகுந்த தமிழார்வம் கொண்டவர்கள். சிறையில் சும்மா இருக்கும் நேரத்தை வீணாக்காமல், பலவிதமான நூல்களைக் கற்பது, அவற்றைப்பற்றிச் சிந்திப்பது, பிறருடன் உரையாடுவது என்று நேரத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொண்டார்கள்.
அந்த வகையில், சிறைக்குள் தமிழ்ப்பாடம் நடத்திக்கொண்டிருந்தார் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை. ஓமந்தூரார், சுப்பண்ணர், முத்துக்கவுண்டர், நல்லாக்கவுண்டர், தேவாரம் பாரதி, நாராயணசாமி உள்ளிட்ட பலர் அவரிடம் பாடம் கற்றார்கள்.
இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம், இவர்களெல்லாம் அனுபவமும் நல்ல சிந்தனைத்திறனும் புலமையும் கொண்டவர்கள். ஆகவே, நாமக்கல் கவிஞரிடம் பாடம் கேட்பதோடு நிறுத்தாமல், அவர் சொல்லிக் கொடுக்கும் விஷயங்களைப்பற்றிய தங்களுடைய கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார்கள். அவர் சொல்லும் விளக்கங்கள் பொருத்தமாகத் தோன்றாதபோது, அவற்றை மறுத்தும் பேசினார்கள்.
இந்த வகுப்பில் நாள்தோறும் கம்பராமாயணத்திலிருந்து இருபது பாடல்களும், திருக்குறளில் ஓர் அதிகாரமும் பாடமாக நடத்தப்பட்டன. குறட்பாக்களை விளக்குவதற்குப் பரிமேலழகர் உரையைப் பயன்படுத்தினார் நாமக்கல் கவிஞர்.
ஒருநாள், 'பொருள் செயல்வகை' என்ற அதிகாரத்திலிருந்த குறட்பாக்களை விளக்கிக் கொண்டிருந்தார் கவிஞர். அப்போது அவர் தந்த சில விளக்கங்கள், அவருடைய மாணவர்களுக்குச் சரியாகத் தோன்றவில்லை.
இதனால், வகுப்பில் பலவிதமான விவாதங்கள் எழுந்தன. வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் பற்றிப் பலரும் தங்களுடைய கருத்துகளைச் சொன்னார்கள். அவர்களுடைய வினாக்கள், விளக்கங்கள், எதிர்வாதங்களையெல்லாம் கவிஞர் மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டார்.
அப்போது, ஓமந்தூரார் சொன்னார், ''கவிஞரே, நீங்களே திருக்குறளுக்கு எளியநடையில் ஒரு புதிய உரை எழுதலாமே!'
அன்று தொடங்கி, நாமக்கல் கவிஞர் உள்ளத்தில் அந்த விருப்பம் நிலைபெற்றுவிட்டது. திருக்குறளுக்கு ஓர் எளிய உரையை எழுதவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.
அதன் பிறகு, எந்நேரமும் அவர் குறட்பாக்களைப்பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தார். ஒரே குறளை வெவ்வேறு விதமாகப் பதம்பிரித்துப் பார்த்தார். ஒவ்வொரு குறளுக்கும் சொல்லப்படுகிற பலவிதமான பொருட்களை ஆராய்ந்தார். அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, அவற்றுள் பொருத்தமானதாக, தான் கருதியவற்றை உரையாக எழுதினார்.
கடின உழைப்பின் பலனாக, அவருடைய திருக்குறள் உரை நூல், சிறப்பாக வெளியானது. அதற்குத் 'திருக்குறள் புது உரை' என்று பெயர் சூட்டினார் நாமக்கல் கவிஞர்.
காரணம், பல குறட்பாக்களுக்கு அவர் தந்திருந்த விளக்கங்கள் முற்றிலும் புதுமையானவையாக இருந்தன. இதற்குமுன் வெளியான உரைகளிலிருந்து மிகவும் வேறுபட்டிருந்தன.
நாமக்கல் கவிஞருடைய திருக்குறள் உரை இன்றும் பரவலாக வாசிக்கப்படுகிறது. அவருடைய புதுமைக் கண்ணோட்டமும் ஆழமான சிந்தனைத்திறனும் அந்நூலில் மிகச்சிறப்பாக வெளிப்படுகின்றன. வள்ளுவருடைய பாடல்களை இன்னும் அழகாகப் பொதுமக்களிடம் கொண்டுசென்று நல்லொழுக்கத்தைப் பரப்புகின்றன.
- என். சொக்கன்
