PUBLISHED ON : நவ 25, 2019

அரிசி மாவை வேகவைத்துச் செய்யப்படும் புட்டு வகைகள் கேரளத்திலும், கர்நாடகத்திலும் பிரபலம். குறிப்பாக, கேரளத்தில் புட்டு முக்கியமான காலை உணவாகப் பார்க்கப்படுகிறது. அரிசிமாவு மற்றும் துருவிய தேங்காய் சேர்க்கப்பட்டு, மூங்கில் அல்லது உலோகக் குழாயில் அடைக்கப்பட்டு ஆவியில் வேகவைக்கப்படுகிற பின்னர், இது பக்குவமாக வெளியே எடுக்கப்பட்டு, இனிப்பு சேர்க்கப்பட்ட தேங்காய்ப்பால் மற்றும் வாழைப்பழத் துண்டுகளுடன் பரிமாறப்படுகிறது.
கர்நாடகத்தைச் சேர்ந்த கொடவா இன மக்கள் விதவிதமான புட்டுகளைத் தயாரிப்பதில் கைதேர்ந்தவர்கள். அரிசி மாவை நூல் போலப் பிழிந்து வேகவைத்து, அதனுடன் வெல்லத் தண்ணீர் மற்றும் தளர்வாக இருக்கும் தொடுகறியுடன் சாப்பிடும் வழக்கம் கொடவா இன மக்களுக்கு உண்டு. இந்த உணவிற்கு, நூல் புட்டு என்று பெயர்.
சமைத்த சாதத்தை நன்கு மசித்து பந்துகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து 'கடம்புட்டு' என்கிற புட்டு வகையைத் தயார் செய்கிறார்கள். மசாலாக்கள் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படும் பன்றி இறைச்சி இதற்கான தொடுகறி.
பால் புட்டு என்கிற ஒருவகையான புட்டும் இவர்களால் தயாரிக்கப்படுகிறது. அடர்த்தியான அரிசி மாவுடன் தேங்காய்த் துருவலை நிறையச் சேர்த்து நன்கு பிசறிவிட்டு, ஓர் உலோகப் பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுக்கிறார்கள். பின்னர், இதனுடன் தேன் அல்லது நெய் அல்லது ஒரு திரவ வடிவிலான காய்கறியுடன் சேர்த்துச் சாப்பிடுகிறார்கள்.
நன்கு அரைத்த அரிசி மாவை, ஒரு தட்டில் பரப்பி வேகவைத்துத் தயாரிக்கப்படும் உணவிற்கு தளியா புட்டு என்று பெயர். இறைச்சியை அரைத்து உருண்டைகளாக்கி அதைக் குழம்பில் சேர்த்து, இந்தப் புட்டுக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிடுகிறார்கள்.
- காரா
