PUBLISHED ON : நவ 25, 2019

'பாஸிலஸ் வல்கரிஸ்' (Phaseolus vulgaris) என்பது ஒரு வகையான அவரை (Bean). தென் அமெரிக்காவில் இந்த வகை பீன் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், பிரெஞ்சு காலனி ஆதிக்கம் இருந்தபோது, அவர்களால் பாஸிலஸ் வல்கரிஸ் பீன் வகை அறிமுகமானது.
அதன்பின்னர் இந்தியாவில், ஆங்கிலேயர்கள் தங்களுடைய தோட்டத்தில் இந்த அவரை வகையை வளர்த்தார்கள். அதன்பின் பல இடங்களில் பணப்பயிராக பயிர் செய்து வணிகம் செய்யப்பட்டது.
இந்த வகை அவரைக்கு இந்தியாவில் 'ராஜ்மா' என்கிற பெயர் வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. காராமணி என்று அழைக்கப்படும் பயறு வகைக்கு சமஸ்கிருத மொழியில், 'ராஜ் மஷா' என்று பெயர்.
இந்த பாஸிலஸ் வல்கரிஸ் என்கிற பீன் வகை, பார்ப்பதற்கு காராமணியைப் போன்ற தோற்றத்தில் இருப்பதால் இதற்கு ராஜ்மா என்கிற பெயர் வந்தது. அதேபோல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் அறிமுகமான சோயா பீன்ஸ், பார்ப்பதற்கு நம்ம ஊர் அவரை போலவே இருந்ததால், அதனை ராஜ்-சிம்பி என்றே மக்கள் அழைத்தார்கள்.
இந்த ராஜ்மா பார்ப்பதற்கு பெரியதாக பளபளப்புடன் கருப்பு, அரக்கு, வெள்ளை நிறத்தில் காணப்படும். இந்தியாவைப் பொறுத்தவரையில், நூற்றுக்கும் அதிகமான வகைகளில் பல்வேறு அளவுகளில் பல்வேறு வண்ணங்களில் இந்த ராஜ்மா பீன் சந்தையில் கிடைக்கிறது. கிரேவி போன்ற உணவுகளிலும், சுண்டலாகவும் ராஜ்மா பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. தக்காளி சாஸுடன் சேர்க்கப்பட்டு பேக்டு பீன்ஸாகவும் இந்த ராஜ்மா விற்பனையில் உள்ளது. ராஜ்மாவிற்கு 'ஹேரிகட் பீன்', 'கிட்னி பீன்', 'நாவி பீன்' போன்ற பல பெயர்களும் இருக்கின்றன.
ராஜ்மா கறி மற்றும் சாதம் இவை இரண்டையும் சேர்த்து ராஜ்மா சாவல் என்று வட இந்தியர்கள் அழைப்பார்கள். இது இவர்களின் முக்கியமான மதிய உணவு. பொதுவாக, சாதம் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்கிற கருத்து நிலவுகிறது. ஆனால், சாதத்துடன், ராஜ்மா கறியை சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான முழுப் புரதமும் கிடைத்துவிடும்.
ராஜ்மா போன்ற பீன் வகைகள் மற்றும் பருப்பு வகைகளில் எண்ணற்ற தாதுக்கள், கால்சியம் மற்றும் இரும்புச் சத்தும் இருக்கின்றன. அதுமட்டுமன்றி, குறைந்த அளவு கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகளில் இவையும் ஒன்று. அதனால் இந்த வகை உணவுகளைச் சாப்பிட்டால், நீண்ட நேரத்திற்குப் பசிக்காது. வயிறு நிரம்பியிருக்கும் உணர்வே தோன்றும்.
- கொக்கோ
