PUBLISHED ON : ஜூலை 11, 2016

'செவ்வாய் கிரகத்தில் வசிக்க ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்!'
பூமியில் இருந்து பல கோடி மைல் தூரத்தில் இருக்கும் இடத்துக்குப் போக ஏன் இத்தனை பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்? 'வரும் காலத்தில் பூமியில் வசிக்க இடம் இருக்குமா, அப்படி இல்லாமல் போனால் எங்கு வசிப்பது?' என்பது போன்ற கேள்விகள்தான் காரணம்! ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகையால் பூமி நிரம்பி வழியும் காலம் தூரத்தில் இல்லை.
உலக மக்கள் தொகை 1950ல், 250 கோடியாக இருந்தது. அதுவே, 2011ல் 700 கோடியைத் தொட்டது. ஜனவரி 1, 2014 கணக்கின்படி, 713 கோடியாகஉயர்ந்திருந்தது. தற்போதைய நிலவரப்படி உலக மக்கள் தொகை 743 கோடியைத் தாண்டி, நொடிக்கு நொடி அதிகரித்தபடி இருக்கிறது. (நீங்கள் இதைப் படிக்கும்போது இன்னும் கூடியிருக்கும்!) உலகம் முழுவதிலும் தினசரி இரண்டரை லட்சத்துக்கும் மேலான குழந்தைகள் பிறக்கின்றன. மக்கள் தொகை அதிகரிப்பு, அது சார்ந்து ஏற்படும் சாதகங்கள், பாதகங்கள் போன்றவை குறித்து விவாதிக்க 1989ல் ஐ.நா. சபை கூடியது. இதன் விளைவாக உலக மக்களிடையே மக்கள் தொகை அதிகரிப்பு குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த ஜூலை 11 'உலக மக்கள் தொகை தினம்' கடைபிடிக்கப்படுகிறது.
உலக அளவில் அதிக மக்கள் தொகை உள்ள முதல் நாடு சீனா. இந்தியாவுக்கு இரண்டாம் இடம். இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 129 கோடியாக உள்ளது. இதே நிலை நீடித்தால் வரும் 2028ஆம் ஆண்டில் சீனாவை இந்தியா முந்திவிடும் என்று சர்வதேச நிபுணர்கள் கணித்துள்ளார்கள். என்றாலும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது இந்தியாவின் பலம்! உலகிலேயே அதிக இளைஞர்கள் இருக்கிற நாடாக 2020ல் இந்தியா ஆகிவிடும். மக்கள்தொகை அதிகரிப்பதால் நாட்டில் குடிநீர் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, வேலை வாய்ப்பு இன்மை, சுகாதாரம், உணவு, கல்வி, போக்குவரத்து, இடப் பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க, மக்கள்தொகை பற்றிய கல்வி பள்ளிகளில் இடம்பெற வேண்டும்.
உலக நாடுகளில் வாழும் மனிதர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதை 'மக்கள் தொகை கணக்கெடுப்பு' என்கிறார்கள்.
கி.மு.4000 ஆண்டில் உலக மக்கள் தொகை 8.5 கோடியாக இருந்தது. போருக்கு எத்தனை பேரை அனுப்பலாம் என்பதை அறிவதற்காகக் கணக்கிட்டார்களாம்.
