
என் ஆரம்ப கால கல்வி பருவத்தில், என்னுடைய நண்பர் ஒருவர் அரசு மலைவாழ் மக்கள் 'உண்டு உறைவிடப் பள்ளியில்' படித்தார். சில சமயங்களில், அங்கு நான் என் நண்பரை காணச் சென்றதுண்டு. அப்பொழுதெல்லாம் நான் அங்கு வைக்கப்பட்டுள்ள பள்ளியின் அறிவிப்புப் பலகையில், 'உண்டு உறைவிடப் பள்ளி' என்று எழுதியிருந்ததை தவறாமல் பார்த்ததுண்டு.
ஆனால் தற்சமயம் என்னுடன் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் நண்பருடன் ஏற்பட்ட விவாதத்தில், 'இலக்கணப்படி உண்டி உறைவிடப் பள்ளி என்பதே சரியான வார்த்தையாகும். உண்டு உறைவிடப் பள்ளி என அழைப்பது, சரியான கோர்வை அல்ல' எனக் கூறினார்.
'உண்டி என்றால் என்ன? உண்டு என்றால் என்ன? எது உணவு அல்லது சாப்பாடு என்று சரியான பொருள் தரும்?'
ஆ.செந்தில்குமார், முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, இறுதி ஆண்டு, ஆவடி.
பதில்: உண்டி என்றால் உணவு என்பது சரிதான். ஆனால், பெயரில் இருக்கும் 'உண்டு உறைவிடப் பள்ளி' என்பதுதான், இந்த இடத்தில் சரியானது. வாக்கியத்தில் அமையும்போது ஏற்படும் மாற்றங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் அல்லவா?
'உணவு உறைவிடப் பள்ளி' என்று எழுதிப் பாருங்கள். 'அந்தப் பள்ளியில் உணவு தங்குகிறது' என்று பொருள் வருகிறது. ஆனால், அந்தப் பள்ளியின் தன்மை என்ன? மாணவர்கள் அங்கே (உணவு) உண்டு, தங்கிப் படிக்கலாம் என்பதுதானே? ஆகவே, அது உணவு தங்குமிடம் அல்ல, மாணவர்கள் உணவை உண்டு, (அந்த இடத்தை) உறைவிடமாகக் கொண்டு படிக்கும் பள்ளி என்கிற பொருள் வரவேண்டுமானால், 'உண்டு உறைவிடப் பள்ளி' என்பதே சரி.
அது இருக்க, உங்கள் நண்பர் சொன்னதில் ஒரு தவறு இருக்கிறது, சுட்டிக்காட்டலாமா? 'கோர்வை' என்பது தவறு 'கோவை' என்பதே சரி. ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களைக் கோப்பது கோவை.