
சில பெண்கள் கொஞ்சலாகப் பேசும்போது, கிளி மாதிரிப் பேசுகிறாள் எனச் சொல்லக் கேட்டிருப்போம். இலக்கியங்களிலும் கிள்ளை மொழி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளி, மைனா போன்ற பறவைகள், மனிதர்களைப் போலவே பேசும் திறனுடையவை. அவற்றை வளர்க்கும் மனிதர்கள் பேசும் மொழியில் அவையும் பேசுகின்றன.
உண்மையிலேயே பறவைகள் பேசுகின்றனவா? என்ற கேள்விக்கு இல்லையென்பதுதான் பதில்.
மனிதர்களுக்கு 'லாரிங்க்ஸ்' (Larynx) என்ற ஒரு குரல் நாண் தான் உண்டு. அதன்மூலம் தான் நாம் ஒலியெழுப்பி பேசுகிறோம், பாடுகிறோம்.
ஆனால், பறவைகளுக்கு லாரிங்க்ஸ் தவிர, 'சிரின்ஜெஸ்' (Syringes) என்ற இரண்டாவது குரல் நாணும் உண்டு. இதைப் பயன்படுத்தித்தான், பறவைகள் குரல் எழுப்புகின்றன.
பறவைகள் பேசுவதில்லை, மனிதர்களின் குரலை 'போலச் செய்'கின்றன (imitation of human speech sounds). அதாவது மனிதர்கள் பேசும் வார்த்தைகளை திரும்பப் பேசுகின்றன. நாம் பேசுவதைப் போலவே அவை ஒலியெழுப்புகின்றன.
சிந்தித்துப் பேசும் ஆற்றல் அவற்றுக்குக் கிடையாது. வார்த்தைகளைத் தொகுத்து வாக்கியமாகப் பேசத் தெரியாது.
தான் அடிக்கடி கேட்கும் வார்த்தைகளை நினைவில் வைத்து, அவற்றைத் திரும்பச் சொல்கின்றன. எனவே, பறவைகள் பேசுகின்றன என்பதை ஒரு பொதுவான ஏற்பாகக் கொள்ளலாமே தவிர, அவை பேசுவதாகப் பொருளல்ல.
நினைவு வைத்துக் கொண்டு வார்த்தைகளை திரும்பச் சொல்வதில், African Grey என்ற கிளியினம்தான், அபாரத் திறமை கொண்டது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
- சேயோன்