PUBLISHED ON : ஜூன் 19, 2023

மொழியை நாம் பெயரும் வினையுமாகவே பயன்படுத்துவதில்லை. காலப்போக்கில் பலப்பல நுண்மையான பொருளுடைய தொடர்களாக ஆக்கிக்கொள்கிறோம். அச்சொற்கள் வழங்கும் பொருளைத் தாண்டிய சிறப்பான பொருள் அவற்றுக்குக் கிடைத்துவிடும். அவை மரபுத் தொடர்களாக நிலைத்துவிடும். பொருளுணர்ந்தோ உணராமலோ அவற்றைப் பேச்சிலும் எழுத்திலும் ஆள்கிறோம். அதற்கு இதுதான் பொருள் என்பது இல்லை. ஆனால், உரிய இடத்தில் பயன்படுத்தினால், பொருட்சிறப்பு வலிமைபெறும். அத்தகைய மரபுத் தொடர்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
குரங்குப்பிடி: 'அவன் பெரிய பிடிவாதக்காரன். பிடிச்சா குரங்குப்பிடிதான்' என்று கூறக் கேட்டிருப்போம். அதென்ன குரங்குப்பிடி? கைகளால் உறுதியாகப் பற்றிக்கொள்வதற்கு, இரண்டு விலங்குகளைச் சொல்லலாம். ஒன்று குரங்கு, இன்னொன்று உடும்பு. இவ்விரண்டும் பிடித்த பிடியை விடாது. குரங்கு மிகவும் தொங்கலான கிளைகளின் முனைப்பகுதியைப் பிடித்துத் தொங்கினால்கூட, பிடியை விடாது. பிடி தவறி விழும் குரங்கைப் பார்க்கவே இயலாது. இது குரங்குக்குட்டிக்கும் பொருந்தும். குரங்குக் குட்டி, தன் தாய் வயிற்றை இறுகப்பற்றிப் பிடித்துக்கொள்ளும். தாய் பல மரங்களைத் தாவிச் சென்றாலும், வயிற்றைப் பற்றியிருக்கும் குரங்குக்குட்டி தன் பிடியை விடாது. அதுதான் குரங்குப்பிடி.
சட்டை பண்ணுதல்: 'எதைச் சொன்னாலும் அவன் சட்டை பண்ண மாட்டேங்கிறான்' என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அதென்ன சட்டை பண்ணுதல்? இங்கே சட்டை என்பது தெரியும். உடலின் மேற்பகுதியை மறைக்கும் எதுவும் சட்டை ஆகும். இது பாம்பின் மேல்தோல் உரிப்பிலிருந்து பயன்பாட்டுக்கு வந்த சொல். பாம்பு, சட்டை உரிக்கிறது. பாம்புச்சட்டையைப் பார்த்திருக்கிறோம். மெல்லியதாய் வெண்மையாய் கட்டவேலைப்பாடு உடையதாய் இருக்கும்.
முற்காலத்தில் உடலின் மேற்பகுதியை அத்தகைய மெல்லிய வெள்ளாடையிட்டு மறைத்தார்கள். அதுவே சட்டை ஆயிற்று. எளியவர்கள் சட்டை இல்லாமல் இருந்திருக்கிறார்கள். மதிப்பு மிக்கவர்கள் சட்டை அணிந்திருக்கிறார்கள். அதனால் சட்டைக்கு மதிப்பு சார்ந்த பொருள் வந்துவிட்டது. 'மதிப்பதே இல்லை' என்ற பொருளில் 'சட்டை பண்ணவே மாட்டேங்கிறான்' என்று சொல்லத் தொடங்கினோம்.
- மகுடேசுவரன்
