PUBLISHED ON : ஜூன் 19, 2023

டே- சாக்ஸ் நோய் (Tay- Sachs) ஒரு மரபணு நோயாகும்.
உண்மை. இது குழந்தைகளுக்கு ஏற்படும் மரபணு நோய். மனித உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களை உடைப்பதற்கு ஹெக்ஸோசமினிடேஸ் ஏ (Hexosaminidase A) எனப்படும் நொதியே காரணம். இந்த நொதியின் குறைபாட்டால் இந்நோய் ஏற்படுகிறது. இதனால் கேங்க்லியோசைடுகள் (Ganglioside) எனப்படும் கொழுப்புப் பொருட்கள் ரத்தத்தில் அதிகரித்து, குழந்தையின் மூளையில் இருந்து செல்லும் நரம்பு செல்களைப் பாதிக்கிறது. இதனால் குழந்தைகள் தசைக் கட்டுப்பாட்டை இழக்கிறார்கள். காலப்போக்கில் இந்நோய் குருட்டுத்தன்மை, பக்கவாதம், மரணம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
வாழைமரம் ரோசேசி குடும்பத்தைச் சார்ந்தது.
தவறு. வாழைமரம் மியூசேசி (Musaceae) குடும்பத்தைச் சார்ந்தது. இந்தியாவில் பயிரிடப்படும் பழப்பயிர்களில் வாழை ஒரு முக்கியமான பயிர். நம் நாட்டில் பயிரிடப்படும் பரப்பளவில் மாம்பழத்திற்கு அடுத்தபடியாக வாழை இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகத்திலேயே இந்தியா தான் அதிக அளவில் வாழை பயிரிடும், பயன்படுத்தும் நாடு. உலக அளவில் இந்தியா 1.68 கோடி டன்கள் அளவு வாழைப்பழங்களை விளைவிக்கிறது. மொத்த பழ அறுவடையில் இந்தியாவின் பங்கு 33%.
