தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/எம்மொழி செம்மொழி: மரபுத் தொடர் தெரியுமா?

எம்மொழி செம்மொழி: மரபுத் தொடர் தெரியுமா?

எம்மொழி செம்மொழி: மரபுத் தொடர் தெரியுமா?


PUBLISHED ON : ஆக 14, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு சொல்லுக்கு என்ன பொருளோ அப்பொருளை உணர்த்தும் சொல்லை மட்டுமே பயன்படுத்துகிறோமா? இல்லை. அந்தச் சொல்லோடு தொடர்புடைய குறிப்புப் பொருள் உணர்த்துமாறும் பயன்படுத்துவோம். புலமை பெற்றவர்கள்தாம் இவ்வாறு பயன்படுத்துவார்கள் என்றில்லை. எளிய மக்களும் இத்தகைய சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு செயல் நடந்திருக்கிறது. அதை மேலும் தொடர வேண்டாம். சிறிது இடைவெளி விட்டுச் செய்யலாம் என்றால், “அதை அப்படியே ஆறப்போடு” என்பார்கள். இங்கே 'ஆறப்போடுதல்' என்னும் தொடர், அந்தச் செயலுக்கு இடைவேளை விடும் பொருளில் வருகிறது. அது சூடேற்றும் செயலுமில்லை. அங்கே வெப்பத்தை ஆறவிட வேண்டிய தேவையும் இல்லை. ஆனால், அவ்வாறு நேர்ந்ததைப் போன்ற குறிப்பில் வருகிறது.

“என்கிட்ட வாலாட்டாதே” என்கிறோம். அவருக்கு வால் முளைத்திருக்கிறதா? இல்லை. அவருடைய செயல் குறும்புச் செயலாக இருக்கிறது. தேவையற்ற இடையூறு செய்கிறது. அதனால் அவ்வாறு சொல்கிறோம்.

“இதனோடு மல்லுக்கட்டுவதே என் வேலையாப் போச்சு” என்பார்கள். ஒருவரோடு ஒருவர் முட்டித் தள்ளி நிகழ்த்தும். போர்முறை, மற்போர் செய்பவர்கள் மல்லர்கள் எனப்பட்டனர். பல்லவ மன்னர் நரசிம்மர் சிறந்த மல்லர். அதனால்தான் அவருடைய நகரம் மாமல்லபுரம் எனப்பட்டது. ஒன்றோடு முட்டி மோதாத குறையாகப் போராடுவதுதான் மல்லுக்கட்டுவது.

“மனப்பால் குடிக்காதே” என்பர். ஆட்டுப்பால், மாட்டுப்பால் தெரியும். அது என்ன மனப்பால்? பால் இனிக்கும். பசி தீர்க்கும். கற்பனையாக மனத்தில் ஒன்றை நினைத்துக்கொண்டு, அது நிறைவேறியதைப்போல் இன்புறுவது, மனப்பால்.

இத்தகைய தொடர்கள் யாவும் சொற்களால் ஒரு பொருளைக் காட்டுகின்றன. மக்கள் பயன்பாட்டில் இன்னொரு வடிவத்தில் உருவகம் பெறுகின்றன. இவ்வாறே பன்னெடுங்காலமாக வழங்கப்படுகின்றன. எந்தப் பொருளை, எந்தச் சொல்லால், எந்த முறையில் வழங்கி வந்தோமோ, அதை அப்படியே பின்பற்றுகிறோம். இவற்றைத்தான் மரபுத்தொடர்கள் என்கிறோம்.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us