
கார்ல் ஃப்ரெடரிக் காஸ்
30.4.1777 - 23.2.1855
பிரன்ஸ்விக், ஜெர்மனி
வகுப்பில் மாணவர்களை அமைதிப்படுத்த 1 முதல் 100 வரை எண்களைக் கூட்டி விடை கூறும்படி கேட்டார் ஆசிரியர். சில நொடிகளிலேயே அதற்கான விடையைச் சொல்லி அவரை அசரவைத்தார் கார்ல் ஃப்ரெடரிக் காஸ். நூறு எண்களையும் தனித்தனியாகக் கூட்டுவதற்குப் பதில் 100 உடன் ஒன்றைக் கூட்டி 50ஆல் பெருக்கி விட்டார். அப்போது அவருக்கு வயது ஏழு!
சிறுவயதில் இருந்தே கணிதப் பிழைகளைக் கண்டறியும் திறன் அவரிடம் இருந்தது. இதைக் கேள்விப்பட்ட ஃபெர்டினான்ட் பிரபு உதவித்தொகை வழங்கியதால், பிரபலமான கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பகா எண்களுக்கான சமன்பாடுகளைக் கண்டறிந்து ஜெர்மனியின் முக்கிய கணிதவியலாளர் ஆனார். பின்பு, இயற்கணிதத்தின் அடிப்படைத் தேற்றம் பற்றி ஆய்வுசெய்து முனைவர் பட்டமும் பெற்றார்.
எண் கோட்பாடு, வடிவியல், வகையீட்டு வடிவியலில் பல நூல்களையும் 300க்கும் அதிகமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். கணித நூல்களிலேயே தலைசிறந்ததாக, இவர் எழுதிய டிஸ்கொசிஷனஸ் அரித்மேடிகா (Disquisitiones Arithmeticae) என்கிற நூல் இன்றும் ஆய்வாளர்களால் பாராட்டப்படுகிறது.
கோட்பாட்டு வானியலில் ஆராய்ச்சி செய்து சிறு கிரகங்கள் இருக்கும் இடத்தைக் கணக்கிட்டார். காந்தமானி மட்டுமன்றி, புவியியல், மின்காந்தவியல், இயக்கவியல், ஒளியியல் தொடர்பான பல்வேறு அறிவியல் உபகரணங்களையும் கண்டறிந்தார். கணித உலகில் பல சமன்பாடுகளை இயற்றி, கணிதத்தை எளிமையாக்கி இருக்கிறார் இந்தக் கணிதச் சக்ரவர்த்தி. கார்ல் ஃப்ரெடரிக் காஸைப் பெருமைப்படுத்த சர்வதேச கணித ஒன்றியம், ஜெர்மன் கணித சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து, கணிதச் சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் இவர் பெயரில் விருது வழங்கி கௌரவித்து வருகின்றன.

