sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

எல்லாம் ஆசிரியர் கையில்

/

எல்லாம் ஆசிரியர் கையில்

எல்லாம் ஆசிரியர் கையில்

எல்லாம் ஆசிரியர் கையில்


PUBLISHED ON : பிப் 27, 2017

Google News

PUBLISHED ON : பிப் 27, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலு அடிக்கடி எனக்கு 'வினாடி வினா'போட்டி வைப்பான். மொத்தம் பத்து கேள்வி. அந்த க்விஸ்ல நான் ஜெயிச்சா அவன் எனக்கு நட்டி மேனியா வாங்கித்தரணும். அவன் ஜெயிச்சா நான் அவனுக்கு சமோசா வாங்கித் தரணும்.

நேற்று அவன் கேட்ட கேள்வி எல்லாம் ரொம்ப சுலபம். “பிறந்து கொஞ்ச நாள்லயே காது கேட்கலை. கண் தெரியல. பேச்சு வரலை. இந்த மூணு குறைகளையும் தாண்டி சாதிச்சவங்க யாரு ?” என்று கேட்டான். “நிறைய பேர் நமக்குத் தெரியாம இருக்கலாம். ஆனா உலகத்துல எல்லாருக்கும் நல்லா தெரிஞ்ச பேரு ஹெலன் கெல்லர்தான்” என்றேன்.

ஹெலன் அமெரிக்கால 1880ல பிறந்தவங்க. பிறந்து ஒரு வயசானப்ப அவங்களுக்கு நோய் வந்து கண்பார்வை, கேட்கும் திறன் எல்லாம் போயிடுச்சு. அப்பா அம்மா வசதியானவங்க. ஹெலனை சிறப்புப் பள்ளியில படிக்க வெச்சாங்க. ஹெலன் பேசவும் படிக்கவும் கத்துகிட்டு உலகம் முழுக்க தன்னைப் போல காது, கண் செயல்படாதவங்க நிலைமையை முன்னேற்றுவதற்காக பிரசாரம் செஞ்சாங்க. நிறைய சிறப்புப் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்த வெச்சாங்க. பதினெட்டு புத்தகங்கள் எழுதியிருக்காங்க. பெண்களுக்கு வாக்குரிமை, தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளம், சம உரிமைக்கெல்லாம் போராடியிருக்காங்க. 88 வயசு வரைக்கும் வாழ்ந்த ஹெலன், தன் 75வது வயசுல உலகப் பயணம் செஞ்சு, இந்தியாவுக்கெல்லாம் வந்து நாலு மாசம் இங்கே இருந்திருக்காங்க. அப்ப பிரதமரா இருந்த நேரு உட்பட, ஒவ்வொரு நாட்டின் தலைவர்களையும் சந்திச்சிருக்காங்க. சார்லி சாப்ளின், எழுத்தாளர் மார்க் ட்வெய்ன் எல்லாரும் அவங்களுக்கு சிநேகிதர்கள். இப்பிடி ஹெலன் கெல்லர் பத்தி எனக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் பாலுவுக்கு சொன்னேன்.

உடனே ஞாநி மாமா “ஹெலனைப் பத்தி நினைக்கறப்பலாம் கூடவே இன்னொரு சாதனையாளரையும் நாம் நினைச்சுப் பார்க்கணும்” என்றார். யார் என்றேன்.

“ஹெலனோட ஆசிரியர் ஆனி சலிவன். அவங்க ஹெலனை விட 20 வயசு பெரியவங்க. ஆனிக்கு அஞ்சு வயசுல நோய் வந்து கண் பார்வை பாதிக்கப்பட்டது. அதனால் அவங்க எழுதப் படிக்கக் கத்துக்க முடியல. வசதியான குடும்பம் இல்லை. அம்மா இறந்துட்டாங்க. அப்பா குழந்தைகளை அனாதை விடுதியில சேர்த்துட்டு போய்ட்டாரு. அனாதை விடுதியில இருந்த ஆனி அங்கே வந்த ஸ்கூல் இன்ஸ்பெக்டர் ஒருத்தர் மூலமா சிறப்புப் பள்ளிக்குப் போய் படிச்சாங்க. மீதி நேரத்துல வீட்டு வேலை செஞ்சு சம்பாதிச்சாங்க. கிரஹாம் பெல் தெரியுமா?” என்றார் மாமா.

“டெலிபோன் கண்டுபிடிச்சவர் பெல்ன்னு இன்னிக்கு எல்.கே.ஜி குழந்தைக்குக் கூட தெரியும் மாமா” என்று சிரித்தேன். “ஆமா. ஆனா கிரஹாம் பெல் காது கேட்காதவர்களுக்கான சிறப்புப் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு, பயிற்சி ஆசிரியரா இருந்தார் தெரியுமா? ஹெலனுக்கு ஓர் ஆசிரியர் வேணும்னு பெல் கிட்ட ஹெலனோட அப்பா கேட்டார். அப்படித்தான் ஆனி சலிவன் ஹெலனுக்கு ஆசிரியரா வந்தாங்க. அடுத்த 50 வருடம் அவங்க ஹெலனோட உதவியாளர், தோழி, சக பிரசாரகர்னு எல்லாமா இருந்தாங்க. ஆனிதான் ஹெலனைப் பேசவெச்சாங்க. ஒவ்வொரு பொருளோட பெயரையும் சொல்லிக் கொடுத்தாங்க.'' என்று மாமா சொன்னதும் எனக்கு பிரமிப்பாக இருந்தது.

உடனே வாலு “ஹெலன் கெல்லர், ஆனி சலிவன் பத்தி ஒரு அருமையான படம் இருக்கு. மிராகிள் ஒர்க்கர். அதுல முதல்முதல்ல ஹெலனுக்கு தண்ணீரோட பெயரை சலிவன் கத்துக் குடுக்கற காட்சி பிரமாதமா இருக்கும். ஒரு கையில தண்ணீரை ஊத்துவாங்க. இன்னொரு கையில வாட்டர்னு எழுதி எழுதிக் காட்டுவாங்க.” என்றது. பார்த்தேன். நெகிழ்ச்சியாக இருந்தது.

“காது கேட்காத ஹெலன் இசையை கேட்டு ரசிச்சு இசையமைப்பாளர் பீதோவனுக்கு ஒரு கடிதம் கூட எழுதியிருக்காங்க தெரியுமா?” என்று வியப்பான தகவல் சொன்னார் மாமா.அதெப்படி முடியும்? என்றேன்.

“ஹெலனே அதைக் கடிதத்துல சொல்லியிருக்காங்க. உங்க இசையை மத்தவங்க மாதிரி என்னால கேட்கமுடியாது. ஆனா மேசையில இருந்த என் கையில அதிர்வுகளை உணர்ந்தேன். உடனே ரேடியோவோட மூடியைக் கழட்டி, ஸ்பீக்கரோட சவ்வுப் பகுதியில என் கையை வெச்சுக்க சொன்னாங்க. என் விரல்கள் வழியா உங்க இசையைக் கேட்டேன். என்னால தாளத்தை உணர முடிஞ்சுது. வெவ்வேற கருவிகளோட அதிர்வுகளை உணர முடிஞ்சுது. கோரசா பெண்கள் பாடினதோட அதிர்வுகளை உணர முடிஞ்சுது. பெரும் மௌனமும் இருட்டும் மட்டுமே இருக்கற என் மனசுக்குள்ள உங்க இசை கடல் மாதிரி பொங்கி என் ஆன்மாவை நிறைச்சிருக்குன்னு ஹெலன் எழுதியிருக்காங்க.” என்றார் மாமா.

“கண் தெரியாதவங்க பெரிய இசைக் கலைஞர்களா இருக்காங்க. காது கேட்காட்டாலும் இசையை ரசிக்க முடியும்னு இப்பதான் புரியுது. ஐம்புலன்கள்ல ஒரு புலன் பாதிக்கப்பட்டா மீதி புலன்கள் எல்லாம் இன்னும் அதிக கூர்மையாயிடும்னு சொல்லுவாங்க இல்லையா ?” என்றேன்.

“ஒரு புலன் பாதிக்கப்பட்டிருந்தா அதை ஈடு செய்ய மீதி புலன்கள் கூர்மையாவது இயற்கைதான். ஆனா எந்தப் புலனுமே பாதிக்கப்படாதபோதும் எல்லாவற்றையும் கூர்மையாக்குவது எப்படின்னுதான் நாம யோசிக்கணும்.” என்றார் மாமா.

எப்படி என்றேன். “பாடம், வாசிப்பு அறிவைப் பெருக்கும். புலன்களைக் கூர்மையாக்குவது விதவிதமான கலைகள்தான். ஓவியம், சிற்பம், இசை, நடனம் எல்லாம் ஐம்புலன்களையும் கூர்மைப்படுத்தக் கூடியவை.” என்று மாமா சொன்னதும் “இதுல எல்லாம் மூக்கால் நுகர்வது எங்கே இருக்கு?” என்று பாலு இடக்காக ஒரு கேள்வி கேட்டான். “வாட்டர் கலர் வரையறப்ப பெயிண்ட் வாசனை, புது புத்தகத்துல பேப்பரும் அச்சு மையும் கொடுக்கற வாசனையையெல்லாம் ரசிச்சிருக்கியா? தோட்டத்துல செடி நடறப்ப மண்ணோட வாசனை, இலையோட வாசனையெல்லாம் கவனிச்சிருக்கியா? ” என்ற மாமா, “சமையல் கூட அற்புதமான ஒரு கலைதான். வெறும் வேலை இல்ல. சமைக்கறப்ப எத்தனை விதமான வாசனைகள் வரும் தெரியுமா?” என்றார்.

“நான் இப்ப சமைக்கக் கத்துக்கறதா, மேண்டலின் கத்துக்கறதான்னு யோசிக்கறேன்.” என்றான் பாலு. “சமையல் எந்த வயசுலயும் கத்துக்கலாம். இசை, நடனம் எல்லாம் சின்ன வயசுலயே ஆரம்பிக்கறதுதான் நல்லது. உன் வயசுல மேண்டலின் ஸ்ரீநிவாஸ் ஓர் ஆல்பமே போட்டுட்டார்.” என்றார் மாமா. “எந்த வயசுல மேண்டலின் கத்துக்க ஆரம்பிச்சாரு?” என்றேன் “அஞ்சு வயசுல!” என்றார் மாமா.

நான் வயலின் கற்றுக் கொள்வது மாமாவுக்குத் தெரியும். “மாலு, வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் உன் வயசுல கச்சேரியே செய்ய ஆரம்பிச்சாச்சு.” என்றார். “மாமா எனக்கு கச்சேரி செய்யும் நோக்கமெல்லாம் இல்லை. என் சந்தோஷத்துக்காக நான் கத்துக்கறேன். வாசிக்கறேன்.” என்றேன்.

“நாம் ஈடுபடும் எல்லா விஷயங்களும் அப்படித்தான். முதலில் அவற்றிலிருந்து நமக்கு மகிழ்ச்சி வரவேண்டும். அது இருந்தால் மற்றவர்களுக்கும் அது தொற்றிக் கொள்ளும்.” என்றார் மாமா.

எல்லாரும் ஆமென்றோம்.

வாலுபீடியா

மேற்கத்திய இசைக்கருவியான வயலினை கர்நாடக இசைக்குக் கொண்டு வந்தவர்கள் பாலசாமி தீட்சிதர் (1786- - 1859 ), வராஹப்பர், வடிவேலு (1810 - -1845) ஆகியோர். மூவரும் மேற்கத்திய இசையும் கற்றவர்கள்.

இந்தியாவில் கண், காது, பேச்சு, கை, கால் மற்றும் சிந்தனை திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மொத்த எண்ணிக்கை இரண்டரை கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஹெலன் கெல்லருக்கு ஆனி சலிவன் கற்பிக்கத் தொடங்கிய நாள் மார்ச் 3, 1887.






      Dinamalar
      Follow us