PUBLISHED ON : டிச 11, 2023

தமிழ் மொழியின் இலக்கணம், காலந்தோறும் மாறும் அதன் வளர்ச்சி, பேச்சுத் தமிழ், உரைநடைத் தமிழ் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என தமிழ் மொழியின் தலையாயப் பிரச்னைகள் குறித்து குரல் கொடுத்திருக்கிறார் பாரதியார். அவர் கூறிய சில கருத்துகள் மட்டும், அவரது பிறந்தநாளில் இங்கே:
* நெல் எப்படி விளைகிறது என்பதைக் கற்றுக்கொடுக்காமல், 'அன்மொழித் தொகையாவது யாது?' என்று படிப்புச் சொல்லிக் கொடுப்பதை நினைக்கும்போது, கொஞ்சம் சிரிப்பு உண்டாகிறது. அன்மொழித் தொகை சிலரைக் காப்பாற்றும். ஊர் முழுவதையும் காப்பாற்றாது. நெல்லுதான் ஊர் முழுவதையும் காப்பாற்றும். அன்மொழித் தொகையைத் தள்ளி விடவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அன்மொழித் தொகையைப் பயிர் செய்து, நெல்லை மறந்துவிடுவது சரியான படிப்பில்லை என்று சொல்கிறேன். அவ்வளவு தான்.
* சபைகள், சங்கங்கள், பொதுக் கூட்டங்கள், பழஞ்சுவடிகள் சேர்த்து வைத்தல், அவற்றை அச்சிடல் இவை எல்லாம் பாஷை வளர்ச்சிக்கு நல்ல கருவிகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தமிழ் மக்கள் தமது மொழியை மேன்மைப்படுத்த விரும்பினால் அதற்கு முதலாவது செய்ய வேண்டிய காரியம் ஒன்றுண்டு. எங்கும், எப்போதும் இந்தப் 'பண்டிதர்கள்' இங்கிலீஷ் பேசும் வழக்கத்தை நிறுத்தினால், உடனே தேசம் மாறுதலடையும். கூடிய வரை இவர்கள் தமிழ் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். புஸ்தக ரூபமாகவும், பத்திரிகைகளில் லிகிதங்களாகவும் இவர்கள் எழுதுகிற கதை, ராஜ்ய நீதி எல்லாவற்றையும் தமிழில் எழுத வேண்டும்.
* நெடுங்காலத்துக்கு முன்னே எழுதப்பட்ட நூல்கள் அந்தக் காலத்துப் பாஷையைத் தழுவினவை. காலம் மாற மாற பாஷை மாறிக்கொண்டு போகின்றது. பழைய பதங்கள் மாறிப் புதிய பதங்கள் உண்டாகின்றன. புலவர்கள் அந்த அந்தக் காலத்து ஜனங்களுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய பதங்களையே வழங்க வேண்டும்.
* கூடியவரை, பேசுவது போலவே எழுதுவது தான் உத்தமமென்பது என்னுடைய கட்சி. எந்த விஷயமெழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைத்து விட்டால் நல்லது.