sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

அங்கிங்கு எனாதபடி எங்கும்....

/

அங்கிங்கு எனாதபடி எங்கும்....

அங்கிங்கு எனாதபடி எங்கும்....

அங்கிங்கு எனாதபடி எங்கும்....


PUBLISHED ON : பிப் 13, 2017

Google News

PUBLISHED ON : பிப் 13, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடம் எவ்வளவு தூரம் என்பதை எப்படி அளப்பது? இங்கே சென்னையில் நாம் இன்னமும் கிலோமீட்டர் கணக்கில் சொல்கிறோம். அண்ணா சாலையிலிருந்து கலைஞர் கருணாநிதி நகர் பத்து கிலோமீட்டர். அம்பத்தூருக்கு 20 கிலோமீட்டர் என்று.

மும்பையில் தூரத்தை நேரமாக சொல்கிறார்கள். கோரேகாவ்னிலிருந்து சர்ச்கேட்டுக்கு இரண்டு மணி நேரம் ஆகும் என்கிறார்கள். அதே இடத்துக்கு இன்னொரு நேரத்தில் சென்றால் 40 நிமிடம் என்று கணக்கிடுகிறார்கள். எல்லாம் சாலையில் நெரிசல் இருக்கும் நேர அடிப்படையில் சொல்லும் கணக்குகள். சென்னையைப் போல இரண்டரை மடங்கு அதிக மக்கள் தொகை இருப்பதைப் போலவே வாகனங்களும் இரண்டரை மடங்கு அதிகம். நெரிசலில் சிக்கிக் கொண்டால் ஒவ்வொரு வண்டியும் இன்ச் இன்ச்சாகத்தான் நகர்கிறது.

நாங்கள் ஒரு நெரிசலில் சிக்கிக் கொண்டபோது, எங்கள் வண்டி நத்தை மாதிரி ஊர்ந்துகொண்டிருந்தது. “நடந்து போனாலே வேகமாகப் போய்விடலாம் போலிருக்கிறதே” என்றான் பாலு. “பத்து கிலோமீட்டர் நடக்க முடியாதே! ஓரிரு கிலோமீட்டர் தூரத்துக்குள் போவதாயிருந்தால் நடக்கலாம்.

இங்கே நாம் போக விரும்பும் ஒவ்வோர் வொரு இடமும் பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில்தானே இருக்கின்றன” என்றார் ஞாநி மாமா. “ சென்னையில் ஒரு நாளில் மூன்று நான்கு இடங்களுக்குப் போய் வந்துவிடுவோம். இங்கே இரண்டு இடங்களுக்கு மேல் போய் வரமுடியாது போலிருக்கிறது” என்ற பாலு “ஒரு நாள் முழுக்க ரோட்டில் காரிலேயே இருப்போம் என்று தோன்றுகிறது” என்றான்.

“அதிகபட்சம் இரண்டு மணி நேரத்தில் இப்போது போய் சேர்வோம். கவலைப்படவேண்டாம்” என்ற மாமா, “வாரக்கணக்கில் எல்லாம் உலகத்தில் டிராஃபிக் ஜாமில் நடுத்தெருவிலேயே இருந்திருக்கிறார்கள் தெரியுமா?” என்றார். உடனே வாலு ஒரு பட்டியலே கொடுத்தது. சீனாவில் பெய்ஜிங்கிலிருந்து திபெத் செல்லும் சாலையில் 62 மைல் தூரத்துக்கு வண்டிகள் நெரிசலில் நகரமுடியாமல் 12 நாட்கள் நின்றிருக்கின்றன. பிரான்சில் பாரிசிலிருந்து லியோன் செல்லும் சாலையில் 109 மைல் தூரமும் நெரிசல் ஏற்பட்டதுதான் கின்னஸ் ரிகார்டாம்.

“பறந்து போனால் டிராஃபிக் ஜாம் இருக்காது.” என்றான் பாலு. “அதையும் திரும்பும்போது பார்ப்பாய்”என்று சிரித்தார் மாமா. விமானத்தில் சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தோம். வானத்தில் எப்படி டிராஃபிக் ஜாம் ஏற்படமுடியும் என்று யோசித்துக் கொண்டே மும்பை விமான நிலையத்துக்கு வந்தேன். பிரம்மாண்டமாக பளபளப்பாக இருந்தது. அந்த இடத்தில் பத்து கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் கட்டிவிடலாம். அவ்வளவு பெரிசு. விமானத்தில் சென்னைக்கும் மும்பைக்கும் இரண்டு மணி நேரம் கூட ஆவதில்லை. ஆனால் ஒவ்வொரு விமான நிலையத்திலும் நடந்து வெளியே வருவதற்கே கால் மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. கால் வலிக்க நடக்க விடுகிறார்கள்.

வானத்தில் விமானம் இஷ்டப்படி எங்கே வேண்டுமானாலும் பறக்க முடியாது. ஒவ்வொரு விமானமும் எவ்வளவு உயரத்தில் பறக்கவேண்டும் என்று நிர்ணயித்திருப்பார்கள். ஒரே திசையில் போகும் விமானங்கள் ஒரே பாதையில் போனாலும் மோதாமல் இருப்பது இந்த உயர வித்தியாசத்தினால்தான் என்று மாமா சொன்னார். அப்படியானால் எங்கே ஜாம் ஏற்படும்? இங்கேயும் தரையில்தான்!

பெரும்பாலான விமான நிலையங்களில் ஒரே ஒரு ஓடுதளம் (ரன்வே) தான் இருக்கிறது. ஒரே நேரத்தில் பல விமானங்கள் ஏறவும் இறங்கவும் வேண்டியிருப்பதால், ஓடு தளத்துக்குச் செல்லும் பக்கவாட்டு தெருக்களில் காத்துக் கொண்டு நிற்கவேண்டும். இதனால்தான் பெரும்பாலான விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்படுவதும் இல்லையாம். தரை இறங்குவதும் இல்லையாம். இந்தப் பிரச்னை நமக்கு மட்டும் இல்லை. நான்கைந்து ரன்வேக்கள் உள்ள உலகத்தின் பெரிய விமான நிலையங்களான கென்னடி, ஹீத்ரு, துபாய் எல்லாவற்றுக்கும் இருக்கிறதாம்.

“இதைத் தவிர வானத்தில் வேறு ஒரு நெரிசலும் இருக்கிறது” என்றது வாலு. அது இன்னும் உயரத்தில் ! விண்வெளியில் நிரந்தரமாக சுற்றிக் கொண்டே இருக்கும் குப்பைகள் அவை. கைவிடப்பட்ட செயற்கைக் கோள், எரிந்த ராக்கெட்டின் உதிரி பாகங்கள் போன்றவை மட்டும் சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேல் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. மணிக்கு 17,500 மைல் வேகத்தில்! அத்துடன் ஏதாவது மோதினால் காலிதான். நாம் பூமியில் மட்டுமல்ல பூமிக்கு வெளியே விண்வெளியிலும் நிறைய குப்பை போட்டுக் கொண்டிருக்கிறோம்.

“இதையெல்லாம் குறைக்க நாம் ஏதாவது செய்யவேண்டுமே” என்று பாலு வழக்கம் போல கவலைப்பட ஆரம்பித்தான். “விண்வெளி குப்பையைக் குறைப்பதெல்லாம் நம் கையில் இல்லை. மண்வெளிக் குப்பையைக் குறைப்பதில் நமக்கு நேரடி பங்கு இருக்கிறது. அதைப் பற்றி யோசி.” என்றார் மாமா.

யோசித்தேன். “எங்கள் பள்ளிக் கூடம், வகுப்பறை, கழிப்பறை எல்லாம் இன்னும் சுத்தமாக இருக்க முடியும். ஆபீஸ் ரூமில் பல முறை சொன்னாலும் கேட்பதில்லை” என்றேன். “நீங்களே சுத்தம் செய்யவேண்டியதுதான்.” என்றார் மாமா.

“அது பிரச்னையாகிவிடும். மாணவர்களை கக்கூஸ் கழுவச் சொல்கிறார்கள் என்று ஏதாவது பேப்பரில் எழுதிவிடுவார்கள் என்று பள்ளி நிர்வாகம் பயப்படும்.” என்றான் பாலு. “மாணவர்களை சாதி அடிப்படையில் பிரித்து இந்தச் சாதிப் பிள்ளைகள்தான் கக்கூஸ் கழுவ வேண்டும் என்று சொன்னால்தான் தவறு. எல்லாரையும் எல்லா வேலைகளையும் செய்யச் சொன்னால் தப்பில்லை” என்ற மாமா, ஜப்பானில் எந்தப் பள்ளியிலும் தனியே துப்புரவு தொழிலாளர்களே கிடையாது என்ற ஆச்சரியமான தகவலைச் சொன்னார்.

அங்கே மாணவர்களே வாராவாரம் முறை வைத்துக் கொண்டு மேசை நாற்காலிகளை துடைப்பது, தரையைப் பெருக்கித் துடைப்பது, ஒட்டடை அடிப்பது, கக்கூஸ் கழுவுவது, கேன்டீனில் பரிமாறுவது, துடைத்து அடுக்குவது எல்லா வேலைகளையும் செய்கிறார்களாம். இப்படிச் செய்வதால் வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு திறன்கள் அவர்களுக்குக் கிடைப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

“சாதி வேறுபாடு இல்லாமல் வகுப்பில் எல்லாரும் எல்லா வேலையும் செய்வது என்றால் எனக்கும் சம்மதம்தான்.” என்றேன். “அப்படியானால் உன் வகுப்பு ஆசிரியையிடம் பேசு. அதற்கு முன்னால் உன் தோழிகளுடன் பேசு” என்றார் மாமா.

“எல்லாரும் ஒப்புக் கொள்வார்களா?”

என்றது வாலு. “முயற்சித்துப் பார்ப்போம்.” என்றேன். “முதலில் தேவை மனத்தூய்மை. அது இருந்தால் ஒப்புக் கொள்வார்கள்.” என்றார் மாமா. “புறந்தூய்மை நீரான் அமையும். அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்” என்றது வாலு.

வாலுபீடியா 1: லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இரு ஓடுதளங்கள் உள்ளன. ஓராண்டில் மொத்தம் ஏழரை கோடி பயணிகள் வந்து செல்கிறார்கள். நியூயார்க் கென்னடி விமான நிலையத்தில் நான்கு ஓடுதளங்கள் உள்ளன. ஆண்டுக்கு மொத்தம் ஆறு கோடி பயணிகள். துபாய் விமான நிலையத்தில் இரண்டு ஓடுதளங்கள். ஆண்டுக்கு மொத்தம் எட்டரை கோடி பயணிகள். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இரு ஓடுதளங்கள். ஆண்டுக்கு ஒண்ணேமுக்கால் கோடி பயணிகள். மும்பை விமான நிலையத்தில் இரு ஓடுதளங்கள். ஓராண்டில் நான்கு கோடி பயணிகள்.

வாலுபீடியா 2: இந்தியாவில் உள்ள நகரங்களில் மட்டும் தினசரி 7 கோடி டன் குப்பை சேருகிறது. உலகத்திலேயே சீரோ வேஸ்ட் - (குப்பையே இல்லாத) நாடு ஸ்வீடன்.






      Dinamalar
      Follow us