sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

அறிவைப் பரப்பும் நூலகம்

/

அறிவைப் பரப்பும் நூலகம்

அறிவைப் பரப்பும் நூலகம்

அறிவைப் பரப்பும் நூலகம்


PUBLISHED ON : பிப் 13, 2017

Google News

PUBLISHED ON : பிப் 13, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலக அறிவை திரட்டித் தருபவை நூலகங்கள். அப்படிப்பட்ட ஒரு நூலகமாக, சென்னையின் பெருமையாக திகழ்கிறது கன்னிமாரா பொது நூலகம். 1890ம் ஆண்டில் இந்நூலகத்துக்கு அடிக்கல் நாட்டிப் பேசிய, அன்றைய சென்னை மாகாண கவர்னர் கன்னிமாரா பிரபு, “இந்தியாவில் பலர் படிக்க முன் வருகிறார்கள். ஆனால், தொடர்ந்து படித்து முதுகலை பட்டம் பெறமுடியவில்லை. காரணம் என்ன? படிப்புக்கு உதவும் வகையில் நூல்கள் இல்லை. நூல்கள் கொடுத்து உதவும் வகையில், நூலகங்கள் இல்லை. படிக்க ஆர்வமுள்ள அனைவருக்கும், நூலகம் பயன்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்த ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன். புத்தகம் வாங்க முடியாதவர்களும், வாசித்தலை விரும்பும் இளைஞர்கள், முதியோர்கள், குறிப்பாக பெண்கள் புத்தகங்கள் படித்து பயன்பெறத்தக்கதாகவும் இந்தப் பொது நூலகம் அமையும் என்று நான் நம்புகிறேன்....” என்றார். அவரது நம்பிக்கையை நூற்றாண்டுகள் கடந்தும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது கன்னிமாரா பொது நூலகம்.

ஆறு ஆண்டுகள் கட்டுமானப் பணிகளுக்கு பிறகு, 5.12.1896 முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த இந்நூலகத்தைத் திறந்துவைத்த, அன்றைய சென்னை மாகாண ஆளுநர் 'சர் ஆர்தர் எலிபேங்க் ஹாலக்' (Sir Arthur Elibank Havelock), இந்நூலகம் உருவாகக் காரணமான, கன்னிமாரா (Connemara) பிரபுவின் பெயரையே இதற்குச் சூட்டினார். 'தி பாந்தியன்' (The Pantheon) என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட கலாசாரக் கட்டமைப்பில் இதுவும் ஒன்றாக இருந்தது. இந்தோ- சாரசெனிக் (Indo Sarsenic), கோதிக்- பைஸாந்தின், ராஜ்புத் மொஹல், டெக்கானி என, பல்வேறு வகைப்பட்ட கட்டடக் கலைகள் இங்கு ஒருங்கே காட்சியளிக்கும். சென்னை அருங்காட்சியக வளாகத்தில், ஒரு பகுதியாக அழகுற இருக்கிறது கன்னிமாரா பொது நூலகம். அந்தக் காலத்திலேயே அதன் கட்டுமானத்துக்கு் 5.75 லட்சம் ரூபாய் செலவானது.

இந்தியாவில் வெளியாகும் அனைத்து நூல்கள், செய்தித்தாள்கள், இதழ்கள் ஆகியவற்றின் பிரதிகளைப் பெறும், நான்கு தேசிய வைப்பு நூலகங்களில் (National depository libraries) கன்னிமாரா பொது நூலகமும் ஒன்று. ஐ.நா., மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் வைப்பு நூலகமாகவும் இது திகழ்கிறது. 1896ல் இருந்து செயல்படுவதால், ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வெளியீடுகள் இங்கு இருக்கின்றன.

அறிஞர் அண்ணா, முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி., உள்ளிட்ட பல அறிஞர்கள், தலைவர்கள், இங்கு வந்து படித்து, தங்கள் அறிவை விசாலப்படுத்திக் கொண்டனர். இந்தியாவின் இரண்டாவது பெரிய நூலகம், ஆசியாவின் பெரிய நூலகங்களுள் ஒன்று. இங்கு சுமார் 8,21,784 புத்தகங்கள் உள்ளன. 17, 18ம் நூற்றாண்டுகளில் வெளியான அரிய புத்தகங்களும், வரைபடங்கள் மற்றும் ஆவணங்களும் இங்கு பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

இந்திய மொழிகள் பிரிவில், இந்தியாவின் அனைத்து மொழி நூல்களும், மொழிவாரியாகவும், துறைவாரியாகவும் பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தின் முக்கிய பிரிவான பாடநூல்கள் பிரிவில், பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், அனைத்துத் துறைகள் சார்ந்த தரம் வாய்ந்த எண்ணற்ற நூல்கள் இருக்கின்றன.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழக மாணவர்களுக்கு உதவும் நோக்கில், சிவில் சர்வீசஸ் ஸ்டடி சர்க்கிள் 1994 முதல் செயல்பட்டு வருகிறது. நூலகத்தின் மற்றொரு முக்கிய பிரிவான காப்பக பிரிவில்,

1 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிய, அழியக்கூடிய நிலையில் இருக்கும் சிறப்பு சேகரிப்புகள், தொடர்ந்து பயன்படும் வகையில், பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இவை தவிர, இணையச் சேவை, பிபிலியோகிராபி சேவை, நூல்கள் மற்றும் மைக்ரோபிலிம்களை பிரதியெடுத்துத் தரும் பிரிவு, டிஜிட்டல் நூலகப் பிரிவு போன்ற துறைகளும் செயல்படுகின்றன. இந்த நூலகத்தின் முதுகெலும்பு போன்றது நூலக உறுப்பினர்களுக்கு நூல்களை இரவல் அளிக்கும் லெண்டிங் பிரிவு. கடந்த ஆண்டு நிலவரப்படி, இங்கு 1,37,549 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்திருக்கின்றனர்.

17 வயது நிறைந்த, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள், இதில் உறுப்பினர்களாக சேர்ந்து நூல்களை இரவல் பெற்று எடுத்துச் செல்லலாம்.

- தமிழ்ச்செல்வன்






      Dinamalar
      Follow us