sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

சேரர் புகழ்பாடும் பதிற்றுப்பத்து

/

சேரர் புகழ்பாடும் பதிற்றுப்பத்து

சேரர் புகழ்பாடும் பதிற்றுப்பத்து

சேரர் புகழ்பாடும் பதிற்றுப்பத்து


PUBLISHED ON : பிப் 13, 2017

Google News

PUBLISHED ON : பிப் 13, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எட்டுத்தொகை நூல்களில் ஒன்று பதிற்றுப்பத்து. சேர மன்னர்கள் பத்துப் பேரைப் பற்றி, பத்துப் பத்துப் பாடல்களாக பாடப்பட்ட நூல் ஆதலால், பதிற்றுப் பத்து என்ற பெயர் வந்தது. பதினெண்மேல்கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று. கீழ் கணக்கு நூல்களைவிட, காலத்தால் முதலில் தோன்றியது. பத்து அரசர்களின் கொடை, வீரம், சிறப்பு ஆகியவற்றைக் கூறும் இந்நூலில், ஒவ்வொரு பத்திலும் உள்ள பாடல்களுக்குத் தனித்தனியாக தலைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தத் தலைப்புகள், பத்துப் பாடல்களில் இருந்து ஏதேனும் ஒரு வரியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள சில தலைப்புகள் 'அடுநெய் ஆவுதி', 'பூத்த நெய்தல்', 'சீர்கால் வெள்ளி'. நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சேர அரசர்கள் பற்றிப் பார்ப்போம்.

1. முதல் பத்து பாடல்கள் உதியன் சேரலாதனைப் பற்றிப் பாடப்பட்டது என்கின்றனர். ஆனால் தெளிவான ஆதாரம் இல்லை. காரணம், இந்தப் பாடல்களில் ஒன்றுகூட கிடைக்கவில்லை. எழுதியவர் பெயரும் தெரியவில்லை. ஆனால், இந்த அரசர், தன் படை வீரர்களுக்கு சோறு கொடுத்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. தன் வெற்றிக்காக போரிடச் செல்லும் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக, மன்னர்கள் விருந்து அளித்திருக்கிறார்கள். அப்படிக் கொடுத்த மன்னர்களில், இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். மன்னர்கள் தன் படைவீரர்களுக்கு கொடுக்கும் விருந்து, 'பெருஞ்சோறு' என்று அழைக்கப்படுகிறது.

2. இரண்டாம் பத்து, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பற்றியது. இவர் உதியன் சேரலாதனுக்கும், வேண்மாள் நல்லினி என்ற அரசிக்கும் மகனாகப் பிறந்தவர். இவரைப் பற்றி, குமட்டூர்க் கண்ணனார் பாடியுள்ளார். நெடுஞ்சேரலாதன் வடக்கே இமயமலை வரை படையெடுத்துச் சென்று வென்றவர். அதற்கு அடையாளமாக இமயத்தில் வில்லைப் பொறித்தவர். போரில் பெற்ற பெருஞ்செல்வங்களைப் படைகளுக்கும், குடிமக்களுக்கும் அளித்துள்ளார்.

3. மூன்றாம் பத்து, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாடியது. இந்தப் பாடல்களை, பாலைக் கௌதமனார் பாடியிருக்கிறார். தன் நாட்டில் அவரவர்க்கு உரிய நிலத்தை பகுத்துக் கொடுத்து, ஆட்சி செய்திருக்கிறார், இம்மன்னர். நாடு வறட்சியால் வாடியபோதும், தன்னை நாடிவரும் பாணர், கூத்தர் முதலானவர்களுக்கு, அவர்கள் உள்ளம் மகிழ, பசியை நீக்கியிருக்கிறார்.

4. நான்காம் பத்து, களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரலை பற்றிப் பாடப்பட்டது. இந்தப் பாடல்களை, காப்பியாற்றுக் காப்பியனார் எழுதியுள்ளார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக் கோமான் பதுமனின் மகள் பதுமன் தேவிக்கும் பிறந்தவர் இவர். தோற்றத்தால் பகைவரை நடுங்கச் செய்தவர். மிகுந்த செல்வத்தை கொண்டவராக இருந்தார். வறுமையில் தாழ்ந்தவர்களை உயர்நிலைக்குக் கொண்டு வந்தார். சான்றோர்களிடம் பணிவு கொண்டவராக இருந்தார். தன்னை நாடிவருபவரை மகிழ்ச்சியுடன் ஆதரித்தார். இரவலர்களை வேற்றிடம் செல்லாமல், தன்னிடமே தங்க வைத்து காத்திருக்கிறார்.

5. சேரன் செங்குட்டுவன் அல்லது கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பற்றி, ஐந்தாம் பத்தில் கூறப்படுகிறது. இவர் மீது, பத்துப் பாடல்களைப் பாடியவர் பரணர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் இன்னொரு மகன்தான் சேரன் செங்குட்டுவன். தாய், சோழன் மகள் மணக்கிள்ளி. சேர நாட்டு கடல் பகுதியில், வணிகக் கப்பல்களைக் கொள்ளையடித்துத் தொல்லை செய்து வந்தனர் கடற்கொள்ளையர்கள். அவர்களைத் தன் கப்பல் படை கொண்டு அடக்கி, வெற்றி கண்டார். இதனால், 'கடல் பிறக்கோட்டிய' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார். செங்குட்டுவன் பகைவரும் வியந்து பாராட்டும் கல்வி அறிவும், ஒழுக்கமும் உடையவராக இருந்தார். கனவில்கூடப் பிறர் உதவியை எதிர்பார்க்காமல் வாழ்ந்தவர் என்று, இவரைப் பற்றி பாடல்கள் கூறுகின்றன. தன் வெற்றிக்குத் துணையான வீரர்களுக்கும் தனக்கும் ஒரே விதமான உணவை சமைக்கும்படி செய்து, உண்டிருக்கிறார் சேரன் செங்குட்டுவன்.

6. ஆறாவது பத்தில், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பற்றிப் பாடப்பட்டுள்ளது. இவரது பெற்றோர் நெடுஞ்சேரலாதன், வேளாவிக் கோமானின் மகள். புலவர்கள் காக்கைப்பாடினியார், நச்செள்ளையார் ஆகியோர் இம்மன்னனைப் பாடியுள்ளனர். குழந்தையைக் காக்கும் தாயைப் போல, ஆடு கோட்பாட்டுச் சேரலாதன், தன் குடிமக்களைப் பாதுகாத்தார். அறத்தையே விரும்பும் குணத்தை உடையவராக விளங்கினார். இவர் அவையில், குமரி முதல் இமயம் வரையிலும் உள்ள அனைத்து அரசரும் கூடியிருந்தனர். அவையில் சான்றோர்கள் நிறைந்திருந்தனர். பிற நாடுகளில் இருந்து வரும் வறியவரைத் தேரில் ஏற்றி வந்து, உணவை மிகுதியாக உண்ணக் கொடுக்கும் சிறப்புடையவர் என இவர் புகழப்பட்டுள்ளார்.

7. செல்வக் கடுங்கோ வாழியாதன், ஏழாம் பத்தின் தலைவன். இவன் பெற்றோர் அந்துவஞ்சேரல், பொறையன் தேவி. கபிலர் இந்த மன்னரை சிறப்பித்துப் பாடியிருக்கிறார். வறியவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவுவதால், செல்வம் குறைவது பற்றி கவலைப்பட மாட்டார். தொடர்ந்து உதவுவதால் உண்டாகும் புகழை நினைத்து, மகிழவும் மாட்டார். போர் மட்டுமே புகழ் என்று கருதாமல், வளங்களைப் பெருக்கி, நாட்டை செழுமையாக்கி இருக்கிறார்.

8. பெருஞ்சேரல் இரும்பொறை எட்டாம் பத்தின் தலைவர். இவரின் பெற்றோர், செல்வக்கடுங்கோ வாழியாதன், வேளாவிக் கோமான் பதுமனின் மகள். இவரைப் பாடியவர் அரிசில் கிழார். சோழர்களையும,் பாண்டியர்களையும் ஒரே போரில் வென்றவர், இச்சேரன். வேள்வி செய்வதற்குரிய வேதங்களை, இம்மன்னன் முறையாகக் கற்றுள்ளார். பகைவர்களை முழுவதுமாக அழித்தவர். குதிரைப் படையும், காலாட் படையும் மிகுந்த வலிமை உடையனவாக இருந்தன. அதியமானின் தகடூர் கோட்டையை அழித்தவர் இந்த மன்னர்.

9. ஒன்பதாம் பத்தில், பாடப்படும் அரசன் இளஞ்சேரல் இரும்பொறை. பெருங்குன்றூர் கிழார் இந்த மன்னரைப் பாடியிருக்கிறார். இரும்பொறை பொன்னாலான தேரினை வைத்திருந்ததாக, ஒரு பாடல் குறிப்பிடுகிறது. அறம் பல செய்தவர். அறம் செய்ய இடையூறு வந்தால், அதனைப் போக்குவதற்கு போர் செய்திருக்கிறார். போரில் ஈடுபடுவதை மிக விருப்பமான செயலாக கொண்டிருந்தார்.

10. பத்தாவது பத்தின் பாடல்கள் கிடைக்கவில்லை. இயற்றிய ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. முதல் பத்து மற்றும் கடைசிப் பத்து பாடல்களின் சில வரிகள், தொல்காப்பிய உரையிலும், புறத்திரட்டு நூலிலும் மேற்கோள் பாடல்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றிலிருந்தே இந்தப் பாடல்கள் பற்றி சிறிது தெரிய வருகிறது.






      Dinamalar
      Follow us