PUBLISHED ON : ஜூலை 02, 2018

உலகம் என்பதை வடசொல் என்று கூறுவோர் உளர். லோகம் என்பதன் தற்பவத் தமிழ்ச்சொல்லே 'உலகம்' என்பர். லோகநாதன் என்று கூறாமல் உலகநாதன் என்று கூறுவர்.
திருக்குறளில் பயில்கின்ற சொற்களில் வடசொற்களே இல்லை என்னும் கொள்கையுடையோர் உலகம் என்பதைத் தமிழென்றே நிறுவுவர். உலகம் என்ற பொருளில் வழங்கப்படும் 'ஞாலம், பார்' போன்ற தூய தமிழ்ச்சொற்களும் இருக்கின்றன.
உ என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்களில் பல வடசொற்கள் இருக்கின்றன. பெரும்பாலும் ஒரு சொல்லானது “உப” என்று தொடங்கினால் அதனை வடசொல் என்று கருதலாம்.
உபகரணம் என்றால் கருவி
உபதேசம் - அறிவுரை
உபத்திரவம் - வருத்தம், துன்பம்
உபந்யாசம் - சொற்பொழிவு
உபயோகம் - பயன்
உபாசனை - வழிபாடு
உபாதை - நோய்
உபாயம் - குறுவழி, சுருக்குவழி
ஆசிரியரை உபாத்தியாயர் என்று வடமொழியில் வழங்கினர். அதிலிருந்துதான் 'வாத்தியார்' என்ற பேச்சு வழக்குச் சொல் வந்திருக்க வேண்டும். உலோகம் என்ற சொல்லும் வடமொழியே. தங்கம், வெள்ளி, இரும்பு முதலானவற்றைக் குறிப்பது. 'கனிமம்' என்று அவற்றைத் தமிழில் கூற வேண்டும். மண்ணிலிருந்து பல்வேறு வினைகளுக்குட்பட்டுக் கனிகின்ற பொருள்.
உஷ்ணம் என்பது 'வெப்பம்.' உதிரம் என்பது 'குருதி.' உதரம் என்பது 'வயிறு.' உதயம் என்பது 'விடியல்.'
நாம் கூற விரும்பும் ஒன்றுக்கு முன்வடிவாகவும் சான்றாகவும் விளங்குவதை உதாரணம் என்று கூறுவோம். உதாரணம் என்பதும் வடமொழியே. 'எடுத்துக்காட்டு, சான்று' என்பவை அதற்கு நேரான தமிழ்ச்சொற்கள்.
அலுவ(ல்)லை உத்தியோகம் என்றும் வடமொழியில் வழங்குவர். உத்தேசம் என்பதை 'ஏறத்தாழ' என்றும் உன்னதம் என்பதை 'உயர்ச்சி' என்றும் உச்சரிப்பு என்பதை 'ஒலிப்பு' என்றும் தமிழில் வழங்க வேண்டும்.
- மகுடேசுவரன்
