வலி மிகுதல் - 33 - வேற்றுமைத் தொகையில் வலி மிகுதல்
வலி மிகுதல் - 33 - வேற்றுமைத் தொகையில் வலி மிகுதல்
PUBLISHED ON : ஆக 26, 2019
ஒரு பெயர்ச்சொல்லோடு ஐ, ஆல், கு, இன், அது, கண் போன்ற வேற்றுமை உருபுகளில் ஒன்று ஒட்டி வருவது, வேற்றுமைத் தொடர். தண்ணீரைக் குடி என்பது இரண்டாம் வேற்றுமைத் தொடர். இங்கே தண்ணீர் என்ற சொல்லோடு ஐ என்ற வேற்றுமை உருபு ஒட்டி வந்திருக்கிறது.
வேற்றுமை உருபு வெளிப்படாமல் மறைந்து வருவதுதான் வேற்றுமைத் தொகை. 'தண்ணீர் குடி' என்றாலும் 'தண்ணீரைக் குடி' என்றாலும் ஒரே பொருள்தான் கிடைக்கும்.
'தண்ணீர் குடி' என்பதில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து நிற்கிறது. இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து நிற்பது, இரண்டாம் வேற்றுமைத் தொகை. இவ்வாறு இரண்டு முதல் ஏழு வரையிலான வேற்றுமைத் தொகைகள் இருக்கின்றன. அவற்றுக்கு வலி மிகுமா, மிகாதா என்று அறிந்துகொள்ள வேண்டும்.
ஐ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு. ஐ மறைந்து வருவது, இரண்டாம் வேற்றுமைத் தொகை. தண்ணீர் குடி - இரண்டாம் வேற்றுமைத் தொகை - வலி மிகாது. தண்ணீரைக் குடி என்று விரிந்து பொருள் தரும்போது, வலி மிகும்.
ஆல் என்பது மூன்றாம் வேற்றுமை உருபு. ஆல் மறைந்து வருவது மூன்றாம் வேற்றுமைத் தொகை. கை தொழுதான் - மூன்றாம் வேற்றுமைத் தொகை - வலி மிகாது. கையால் தொழுதான் என்று விரிந்து பொருள்தரும். கு என்பது நான்காம் வேற்றுமை உருபு. கு மறைந்து வருவது நான்காம் வேற்றுமைத் தொகை. வள்ளித் திருமணம் - நான்காம் வேற்றுமைத் தொகை - வலிமிகும். வள்ளிக்குத் திருமணம் என்று விரிந்து பொருள்தரும். இன், இல் என்பவை ஐந்தாம் வேற்றுமை உருபுகள். அவை மறைந்து வருவது ஐந்தாம் வேற்றுமைத் தொகை.
தாய்மொழி கூறு - ஐந்தாம் வேற்றுமைத் தொகை - வலி மிகாது. தாய்மொழியில் கூறு என்று விரிந்து பொருள்தரும். அது என்பது ஆறாம் வேற்றுமை உருபு. அது மறைந்து வருவது ஆறாம் வேற்றுமைத் தொகை.
குருவிக் கூடு - ஆறாம் வேற்றுமைத் தொகை - அஃறிணைக்கு வலி மிகும். குருவியினது கூடு என்று விரிந்து பொருள்தரும். தலைவி கூற்று - ஆறாம் வேற்றுமைத் தொகை - உயர்திணைக்கு வலி மிகாது. தலைவியினது கூற்று என்று விரிந்து பொருள்தரும்.
கண் என்பது ஏழாம் வேற்றுமை உருபு. கண் மறைந்து வருவது ஏழாம் வேற்றுமைத் தொகை. மலைக்கோவில் - ஏழாம் வேற்றுமைத் தொகை - வலி மிகும். மலைக்கண் கோவில் என்று விரிந்து பொருள்தரும்.
- மகுடேசுவரன்
