PUBLISHED ON : ஆக 26, 2019

ஓர் அறிஞர் தன்னுடைய துறையில் மிகவும் சிரமப்பட்டுப் பல அரிய உண்மைகளைக் கண்டறிந்திருப்பார். அவற்றை ஆய்வுக்கட்டுரையாகப் பதிவுசெய்திருப்பார். இன்னோர் அறிஞர் சிறிதும் கூச்சமின்றி அவருடைய ஆய்வுக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திக்கொள்வார். அல்லது அவர் எழுதிய அதே சொற்றொடர்கள், பத்திகளை அப்படியே எடுத்துத் தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் சேர்த்துவிடுவார். அதைக் கண்டறிந்தவர், எழுதியவர் யார் என்கிற உண்மையைக் குறிப்பிடக்கூடமாட்டார். இதைத்தான் 'அறிவுத்திருட்டு' என்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக, ஆய்வுப்புலத்தில் மட்டுமன்றி, கதை, கவிதைகள், கட்டுரைகள் என அனைத்திலும் அறிவுத்திருட்டு மிகுந்து வருகிறது. இதுபற்றிய பல குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், பலர் தொடர்ந்து திருடி வருகிறார்கள்.
பணமோ, பொருளோ திருடுபோனால் உரியவர் அதை உடனே அறிந்துவிடுவார். ஆனால், அறிவுத்திருட்டு அப்படி உடனே தெரியவருவதில்லை.
தன்னுடைய உழைப்பும் சிந்தனையும் திருடப்பட்டிருக்கிறது என்பதுகூடத் தெரியாமல் அவர் தன் பணிகளைத் தொடர்வார். பின்னர் ஒரு நாள் அதை அறிந்து அதிர்ச்சியடைவார். இது பெரும் கொடுமையல்லவா?
அறிவுத்திருட்டுக்கு எதிராக நாம் குரல்கொடுக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. அதேசமயம், 'இவ்வுலக அறிவெல்லாம் எல்லோருக்கும் சொந்தம்' என்று எண்ணும் அறிஞர்களும் உண்டு. இதற்கு எடுத்துக்காட்டாக, பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரைக் குறிப்பிடலாம். ஒருமுறை, அறிஞர் ஒருவர் அவரைக் காண வந்திருந்தார். தான் ஆராய்ந்துவரும் தலைப்பைப்பற்றிப் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தார்.
அந்தத் தலைப்பில் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரும் ஆராய்ந்திருந்தார். அந்த உண்மைகளை இருபத்தைந்து பக்கம் தன்னுடைய கைப்பட எழுதினார். அந்த அறிஞரிடம் வழங்கினார். ''இதை உங்களுடைய நூலில் சேர்த்துக்கொள்ளுங்கள்'' என்றார்.
இதைக் கேட்ட அறிஞர் திகைத்துப்போனார். '' ஐயா, நீங்கள் எழுதியதை என்னுடைய நூலில் சேர்ப்பது முறையாகாது'' என்று தயங்கினார்.
''ஆய்வில் தனியுடைமை ஏதுமில்லை, எல்லாம் கூட்டுமுயற்சிதான்'' என்றுசொல்லி, தன் உழைப்பைப் பயன்படுத்திக்கொள்ள அந்த அறிஞருக்கு அனுமதியளித்தார். இந்நிகழ்வை அவருடன் பழகிய ச.செயப்பிரகாசம் பதிவுசெய்துள்ளார்.
தெ.பொ.மீனாட்சிசுந்தரனாருடைய பெருந்தன்மையை வியக்கும் அதே நேரத்தில், அந்த இன்னோர் அறிஞருடைய தயக்கத்தையும் நாம் கவனிக்கவேண்டும்.
ஒருவர் தானே முன்வந்து தன்னுடைய எழுத்தைத் தந்தபோதும், அதைப் பயன்படுத்திக்கொள்வது முறையாகாது என்று அவர் தயங்கினாரே, அந்த உயர்ந்த பண்பையும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும். பிறருடைய அறிவை ஒருபோதும் திருடக்கூடாது.
ஒருவேளை அவர்களுடைய கண்டுபிடிப்புகள் நம் கட்டுரைக்கு, நூலுக்குத் தேவைப்பட்டாலும், உரிய அனுமதி பெற்று, அவர்களுடைய பெயரையும் குறிப்பிட்டு நன்றி சொல்வதுதான் முறை!
- என். சொக்கன்
