PUBLISHED ON : அக் 28, 2019

ஆற்றுமயில்
ஆங்கிலப் பெயர்: பர்பிள் ஸ்வாம்பன் (Purple Swamphen)
உயிரியல் பெயர்: பார்பைரியோ பார்பைரியோ (Porphyrio porphyrio)
அளவு: 45-50 செ.மீ.
வாழிடம்: சதுப்பு நிலங்கள்
காணப்படும் இடங்கள்: இந்தியா
இந்தியா முழுவதிலும் உள்ள சதுப்பு நிலங்களில், ஆற்றுமயிலைக் காணமுடியும். நீர்நிலைகளில் வாழும் இதனை, ஆண்டு முழுவதும் பார்க்க முடியும். முதுகு, சிறகு, மார்பு ஆகிய பகுதிகள் கத்தரிப்பூ நிறமும் பச்சை நிறமும் கலந்து இருக்கும். வயிறு கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும். நெற்றி முதல் அலகு வரை அடர் சிவப்பு நிறம். இதன் கால்கள் நீண்டு சிவப்பு நிறத்தில் இருக்கும்.
அலகோ, கோழிக்கு உள்ளது போன்றே இருக்கும். இந்தப் பறவையை நீர்நிலைகளில் சுலபமாக அடையாளம் காணலாம். தண்ணீரில் மெதுவாக நடந்து செல்லும். பெண் பறவை, ஆண் பறவையைவிட அளவில் சிறியது. நிறமும் பளீரென்று இருக்காது. அதேபோல், பருவம் அடையாத பறவைகள் என்றாலும், நிறம் மங்கலாகவே இருக்கும்.
நீர்த்தாவரங்கள், தவளைகள், நத்தைகள் ஆகியவற்றை உண்ணும். மற்ற பறவைகளின் முட்டைகளைத் திருடுவதில் புகழ்பெற்றது. கொஞ்சம் அசந்தால், வாத்துகளின் முட்டைகளையும் திருடித் தின்றுவிடும். இதனுடைய நீண்ட கால்களைப் பயன்படுத்தி உணவைப் பிடித்து வைத்துக்கொள்ளும்.
--தாமரைக் குளங்களில் காணப்படும் ஆற்றுமயிலை விரட்டி அடிக்க, பட்டாசுகளை வெடிப்பார்கள். வெடிச்சத்தத்தில் அலறி வயல் பக்கம் ஓடிவிடும். அப்படிப் போகும்போது வயல்களில் உள்ள நாற்றுகளைச் சேதப்படுத்தும். விவசாயிகளாலும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. பொதுக் குளங்களில் தாமரைப் பூக்களைப் பண்ணை முறையில் வளர்க்கக் கூடாது என, 2009இல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏனெனில், இதனால், பல்லுயிர் பெருக்கம் தடைப்படுவதோடு, அங்கு வாழும் பறவை இனங்களும் ஆபத்தை எதிர்கொள்கின்றன.
